Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உங்களை ஒரு பொருட்டா, கர்நாடக முதல்வர் மதிப்பாரான்னு தெரிஞ்சுக்கிட்டு போங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிக்கை:
சிறை சென்றும் திருந்தாத வன்மம் கொண்ட ஜென்மமாக, சசிகலா வாழ்ந்து வருகிறார். வேலைக்கு தகுந்தாற்போல் பணம் கொடுத்து, ஊழல் பணத்தில் மன்னார்குடி கும்பல், உல்லாசபுரியாக சிறையை மாற்றியிருக்கிறது. ஜெ., மறைவுக்கு காரணமான இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, கர்நாடக முதல்வரை தேவைப்படும்போது நேரில் சந்திப்பேன்.

'அ.தி.மு.க., மீது நான் பாசம் காட்டுறேன்னு, எல்லாரும் சொல்றீங்களே... இப்ப பாருங்க, எப்படி எதிர் பேச்சு பேசுறேன்னு' என, பறை சாற்றிக் கொள்ளும் வகையில், தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை: தமிழக மாணவர்களுக்கு, 'நீட்' நுழைவுத் தேர்வில் விலக்கு அளிக்கும், தமிழக அரசின் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதலை பெறுவதற்கான தீவிர முயற்சியில், அ.தி.மு.க., அரசு ஈடுபடாததால், தமிழகத்தின் மீது, 'நீட்' தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது. பா.ஜ.,வின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க, இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுத்தர வேண்டும் என, அ.தி.மு.க., முன் நிபந்தனையாக
கூறியிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு வழக்குகளில் சிக்கியிருக்கும் அமைச்சர்களை காப்பாற்ற, தமிழக மாணவர்களின் நலனை பலி கொடுக்க வேண்டிய ஒரு நிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

'இந்தத் திட்டத்தில் பயன்பெறுவதற்கான கெடுபிடிகளைக் குறைத்தால் நல்லது...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், மருத்துவ காப்பீட்டு திட்ட மாநில கூடுதல் இயக்குனர் செல்வவிநாயகம் பேச்சு: முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில், 20 லட்சம் பேர் பயன்அடைந்துள்ளனர். இதற்காக அரசு, 4,040 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது. தற்போது, இத்திட்டத்தில் அனைத்து வகையான புற்றுநோய்களும் சேர்க்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
சட்டத்துக்கு முன் குற்றவாளியாக இருக்கும் ஒரு நபருக்கு, விதிமுறைகளை மீறி சிறையில், சலுகை அளித்திருக்கும் தகவல் குறித்து, உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். ஒரு அதிகாரி அதை கூறுவதும், இன்னொரு உயர் அதிகாரி அதை மறுப்பதும், உண்மை நிலைக்கு ஏற்றவாறு இல்லை. உண்மை நிலையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது, கர்நாடக அரசின் கடமை.

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி: தொழில் துறையை பொறுத்தவரை, தமிழகம் கடைசி இடத்தில் இருக்கிறது என, அனைத்து மாநில தலைமைச் செயலர்கள் கூட்டத்தில், அழுத்தம் திருத்தமாகபேசப்பட்டு இருக்கிறது. அதில், தமிழக தலைமைச் செயலரும் கலந்து கொண்டிருக்கிறார். அதைத்தான், நானும்சபையில் கேட்டேன்;அதற்கான உரியபதில் கிடைக்கவில்லை.

'உங்ககிட்டே, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் தனித் தனியா சொன்னாங்களா மேடம்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தமிழக, காங்., - எம்.எல்.ஏ., விஜயதாரணி பேட்டி:
பா.ஜ., மீது கடுமையான அதிருப்தி, கோபம், அ.தி.மு.க.,வில் பிளவுற்ற அணிகளிடம் உள்ளது. என்ன தான் அச்சத்தால், பா.ஜ.,வுக்கு ஆதரவு என, அ.தி.மு.க., அணித் தலைமைகள் அறிவித்தாலும், 'ஆதரவு அளிப்பது நியாயமில்லை' என, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் நினைக்கின்றனர். ஆகையால், ஜனாதிபதி தேர்தலில், ஓட்டுகள் மாற வாய்ப்புகள் உள்ளன.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: நியாய விலைக் கடைகளில், ஸ்மார்ட் அட்டை வழங்குவதற்கான காலக்கெடு முடிவடைந்த பிறகும், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு மட்டுமே, ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை இனியும் அலையவிடாமல், ஒவ்வொரு நியாய விலைக் கடையிலும், நாள் ஒன்றுக்கு, ௧௦௦ பேர் மட்டும் பங்கேற்கும் வகையில் சிறப்பு முகாம்களை நடத்தி, உடனடியாக ஸ்மார்ட் அட்டை வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தி.மு.க., கொள்கை பரப்பு துணைச்செயலர் குமரன் பேட்டி: அ.தி.மு.க., ஆட்சியில், ஏரிகளும், குட்டைகளும் துார்வாரப்பட்டதாக, 'பில்' மட்டும் போடப்படுகிறது. எனவே தான், எங்கள் செயல் தலைவர் ஸ்டாலின், 'திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள், தங்கள் சொந்த செலவில், மக்களின் நலனைக் கருதி, ஏரிகளையும், குட்டைகளையும் துார் வாருங்கள்' என, சொல்லி, அவரே அப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இதுதான், உண்மையான மக்கள் பணி.

பன்னீர்செல்வம் அணியில் உள்ள, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செம்மலை பேட்டி: 60 நாட்களுக்குப் பின், தினகரன் எடுக்கும் எந்த முடிவும், எங்கள் அணியை பாதிக்க வாய்ப்பே கிடையாது. இரு அணிகளின் இணைப்பில், அவருக்கு அக்கறை இருப்பதாகவே தெரிகிறது. ஆனால், அந்த இணைப்பிற்கு எது தடையாக உள்ளது என்பதும் அவருக்குத் தெரியும். அந்தத் தடையை நீக்குவதற்கான வழிமுறைகளைக் காண வேண்டுமே தவிர, இரு அணிகளும் தானாக இணைந்துவிடும் என, எதிர்பார்க்கக்கூடாது.

தமிழக, பா.ஜ., துணை தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி: காங்., கொண்டு வந்த, ஜி.எஸ்.டி.,யை, மோடி எதிர்த்தார். அந்த மசோதாவில், என்னென்ன குறைகள் இருந்ததால் அவர் அதை எதிர்த்தாரோ, அவற்றையெல்லாம் சரி செய்து, இப்போது புதிய, ஜி.எஸ்.டி.,யை அவரே கொண்டு வந்துள்ளார். மோடி தன்னை மாற்றிக் கொள்ளவில்லை; ஜி.எஸ்.டி.,யைத் தான், பல்வேறு மாநிலங்களுக்கும் பொருந்துமாறு மாற்றியுள்ளார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement