Advertisement

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆரின் ஆவி கண்ணீர் வடிக்கும்!

சு.அர்த்தநாரி, இதய நோய் சிகிச்சை பேராசிரியர், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
அன்று, மாநில காங்கிரசுக்கு, மாவட்டந்தோறும் அலுவலக கட்டடம் இருந்தது. அவை, மாவட்ட செயல் மற்றும் உறுப்பினர் கட்டுப்பாட்டில் இயங்கின.காமராஜர் மறைவுக்கு பின், அலுவலக கட்டடங்களை எல்லாம், கட்சியின் அறக்கட்டளையின் கீழ் கொண்டு வரப்பட்டன. அவற்றை கட்டுப்பாட்டில் வைக்க தான், இன்று வரை, மாநில தலைவர் பதவிக்கு போட்டி போட்டு, டில்லி படையெடுப்பு நடக்கிறது.
கட்சிக்கு, மாத வருமானமுள்ள வணிக வளாகமும் உள்ளது. சத்தியமூர்த்தி பவன், சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கம், அங்காடிகள் மூலம் வாடகை வசூல், மாதம் கோடி ரூபாய் தேறுமாம்! இது, 1950ல் உருவாக்கப்பட்டது. இதற்கு தான், காங்கிரஸ் தலைவர்கள் மல்லுக்கட்டி நிற்கின்றனர்.
அண்ணாதுரை மறைவிற்கு பின், கருணாநிதி வசம், தி.மு.க., வந்தவுடன், முதல் வேலையாக, சென்னை தேனாம்பேட்டையில் காங்கிரஸ் வளாகத்திற்கு எதிரில், பரந்த இடத்தை பிடித்து அறிவாலயம் அமைத்தார்.
ஆட்சி பீடத்தில் அவர் இருந்ததால், நிதிக்கு எந்த குறையும் இல்லை. புத்திசாலித்தனமாக, கட்சிக்கு சொந்தமான அந்த இடத்தை தன் குடும்ப அறக்கட்டளையின் கீழ் கொண்டு வந்தார். கட்சி நிர்வாகிகள் யாரும் நிர்வகிக்க முடியாத வகையில், 'செக்' வைத்தார்; தற்போது வரை குடும்பத்தினர் மட்டுமே நிர்வகித்து வருகின்றனர்; இனி, எந்த கொம்பனாலும் அறிவாலயத்தில் நுழைய முடியாது.
ஆனால், 'கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி கொண்டது' என்ற பழமொழி அ.தி.மு.க.,விற்கு மிக பொருத்தமாக உள்ளது. அக்கட்சியின் வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் புரியும்...
கடந்த, 1972ல், தி.மு.க.,விலிருந்து, எம்.ஜி.ஆர்., விலகினார். முதுபெரும் தலைவர் மதியழகன் தலைமையில், ஆர்.எம்.வீரப்பன், கிருஷ்ணசாமி, நாஞ்சில் மனோகரன் முன்னிலையில், அ.தி.மு.க., என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகி வழங்கிய வீடே, கட்சி அலுவலகமாக செயல்பட்டது. ஜானகி அம்மையார் ஆச்சார பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். பிரபல கர்நாடக இசை மேதை, பாபநாசம் சிவன் சகோதரர் மகள். அவருக்கு சொந்தமான இடத்தில் தான், அ.தி.மு.க., அலுவலகம் உருவானது.
எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜானகியின் வசம் கட்சி வந்தது. ஜெயலலிதா தலைமையில், மற்றொரு, அ.தி.மு.க., அணி உருவானது. தேர்தல் தோல்விக்கு பின், அரசியலில் இருந்து ஜானகி ஒதுங்கினார். பின், ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., செயல்பட துவங்கியது.
நுாற்றுக்கணக்கான, இன்னோவா, லான்சர், என்டோவர் என கார்கள், கட்சி அலுவலகத்தை சுற்றி வலம் வரும். கட்சி கொடிகள் அதிகம் காணப்படும். இவ்வளவு வரலாறு கொண்ட இடம், இன்று களை இழந்த கோவிலாகி விட்டது. உண்மை தொண்டர்கள் சென்னையிலிருந்தும், வெளியூர்களிலிருந்தும் வருவதில்லை.
அ.தி.மு.க., கட்சியில் நிலவும் நிகழ்வுகளை பார்த்தால், கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதையாகி விட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு, 80 கோடி செலவு செய்ய முன் வருகின்றனர். தேர்தல் கமிஷனிடம், இரட்டை இலை சின்னத்தை பெற, கோடிக் கணக்கில் பேரம் பேசுகின்றனர்.இவர்களின் நடவடிக்கையை பார்த்தால், எம்.ஜி.ஆரின் ஆவி ரத்தக் கண்ணீர் வடிக்கும்!

அழுவதாசிரிப்பதா?

ஆர்.சந்தானம், போஸ்ட் மாஸ்டர் (பணி நிறைவு), கடலுாரிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதிய வீரமணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.
அதில், நான் ஆசிரியர் பணிக்கான தேர்வு எழுதியதில், தகுதி மதிப்பெண், 90 என, நிர்ணயிக்கப்பட்டிருந்தது; நான், 89 மதிப்பெண் எடுத்திருந்தேன். இதில் வியப்புக்குரியது என்னவென்றால், ஒரு மார்க் கேள்வியொன்றில், 'வந்தே மாதரம் பாடல், முதன்முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?' என்ற ஒரு வினா இருந்தது.
அதற்கு, 'சாய்ஸ்'களாக வங்க மொழி, உருது, மராத்தி மற்றும் சமஸ்கிருதம் என, விடைகள் தந்திருந்தனர். நான் கற்றறிந்த வகையில், வந்தே மாதரம் முதன்முதலில், வங்க மொழியில் தான் எழுதப்பட்டது என்பதை உறுதிப்படுத்தி, விடையளித்தேன்.
ஆனால், விடைத்தாள் திருத்திய வகையில், சமஸ்கிருதத்தில் தான் முதலில் எழுதப்பட்டது. பின் தான், வங்க மொழியில் உருமாற்று செய்யப்பட்டது என்று உறுதி கூறி, எனக்கு அளிக்க வேண்டிய அந்த ஒரு மதிப்பெண்ணை நிராகரித்துள்ளனர், எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், இது சம்பந்தமாக பதில் அளிக்கும்படி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நுாறாண்டிற்கு முன், சுதந்திர வேகம் பெற்றிருந்த வேளையில் எழுதப்பட்ட, ஒரு பாடலை, அது எந்த மொழி பாடல் என்ற முடிவுக்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும், அரசின் இந்த நடவடிக்கையை பார்த்து, அழுவதா; சிரிப்பதா என, தெரியவில்லை.வினாத்தாள் தயாரித்தோர், இதுபோல் ஒத்தையா, ரெட்டையா வேலை பார்க்காமல், தெள்ளத் தெளிவான பதில்களுக்குரிய கேள்விகளை தேர்ந்தெடுக்கலாமே!

தமிழனைதட்டி எழுப்புங்கள்!

என்.கல்யாணசுந்தரம், கடலுாரிலிருந்து எழுதுகிறார்:
'இன்னும் புலி வேஷம் போடாதீர்' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், இதே பகுதியில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினை கண்டித்து, கடிதம் எழுதியிருந்தார். அது, கண்டிக்கத்தக்கது.
விவசாயத்திற்கு நீரின்றி வறுமையில் வாடி, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால், வாய் கூசாமல், 'இயற்கை மரணம் அடைந்தனர்' என, தமிழக அரசு கூறியது; அரசை குறை கூறாமல், ஸ்டாலினை வாசகர் ஏன் கூற வேண்டும்...
டில்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், 50 பேரும் கைகோர்த்து வந்திருக்கலாம்; ஆனால், மத்திய அரசுக்கு வாலாட்டி, தமிழக விவசாயிகளை கை விட்டனரே...
பெயருக்கு, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, விவசாயிகளிடம் பேச்சு நடத்தினார்; இது எந்த வேஷம் என, வாசகர் தான் கூற வேண்டும்.
ஐந்து எம்.பி.,க்களை வைத்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், பார்லிமென்டை அலற வைத்தன. 50 எம்.பி.,க்களை வைத்துள்ள, அ.தி.மு.க., அமைதி காத்தது. தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் குறித்து குறை கூறுவோரிடம் கேட்கும் கேள்வி இது தான்...
இன்று, சென்னை மாநகரில் எழும்பி நிற்கும் பாலங்கள் எல்லாம் பறை சாற்றுவது, ஸ்டாலினின் பெயரை தானே! மக்களின் குறைகளை, சட்டசபையிலும், பொது இடங்களில் எடுத்துக் கூற ஸ்டாலினை விட்டால் வேறு ஆள் உண்டா...
தற்போது நிலவும் குறைகளை போக்க, பழைய விக்ரமாதித்தன் காலத்து கதையை கூறாமல், விழிப்புணர்வை ஏற்படுத்தி வழியை தேட வேண்டும்.தன்னிடம் என்ன குறை இருக்கிறது என, தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும், தமிழனை தட்டி எழுப்ப வழி பாருங்கள்!

ஜாதி சான்றிதழில் பாரபட்சம் காட்டாதீர்கள்!

எஸ்.செபஸ்டின், சிவகாசி, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
ஜாதி சான்றிதழ் வழங்குவதை கணினி மயமாக்கியுள்ளது, தமிழக அரசு. இதன் மூலம், மாணவ, மாணவியர் மற்றும் அவர்களின் பெற்றோர், அனைத்து சான்றிதழ் பெறுவதற்கும், வீண் செலவோ, அலைச்சலோ இன்றி, இலகுவாக பெற வழி கிடைத்துள்ளது; இது, பாராட்டுக்குரிய செயல்!
ஆனால், தலித் சமூக மாணவ, மாணவியருக்கு கொடுக்கப்படும் ஜாதி சான்றிதழ்களில், பள்ளன், பறையன், சாம்பன், குடும்பன், தேவேந்திர குலத்தான் என, வழங்கப்படுகிறது. இது, அவன், இவன் போன்று ஒருமையில் மரியாதை குறைவாக உள்ளது.

ஆனால், மற்றவர்களுக்கு வழங்கப்படும் ஜாதி சான்றிதழில், நாயக்கர், அம்பலக்காரர், கவுண்டர், தேவர், நாடார், சாணார், அகமுடையார் என, வழங்கப்படுகிறது. இது, அவர், இவர் என, மரியாதையாக கூறுவது போல் உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்தது முதல், தமிழக அரசு வெளியிட்டு வரும் அரசிதழில், இது போன்று தான் உள்ளது. இச்செயல் கீழ் ஜாதி, மேல் ஜாதி என, வேறுபடுத்தி காட்டுவது போன்று உள்ளது. தமிழகத்தை ஆண்ட, காங்கிரஸ் - தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய மூன்று கட்சியினருக்கோ, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் எவருக்குமே இது தெரியவில்லை.
தலித் மக்களுக்காக போராடும், சமூக தலைவர்களுக்கும் இதுநாள் வரை தெரிந்ததாக தெரியவில்லை. இது, தலித் சமூக மாணவியர், மாணவர்களின் மனதில், தாங்கள் கீழ் ஜாதியினர் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

எனவே, அரசு வெளியிட்டுள்ள அரசிதழிலும், ஜாதி சான்றிதழ் வழங்கப்படும், தமிழகத்திலுள்ள அனைத்து கணினிகளிலும், தலித் மக்களை, ஒருமையில் பதிவாகியதை, மற்ற ஜாதிகள் போன்று பன்மையில் பதிவு செய்ய வேண்டும்!

வரி விதிப்பில்மறுபரிசீலனைதேவை!

சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்:
பன்முக வரி விதிப்புகளுக்கு மாற்றாக, ஒரே தேசம், ஒரே வரி எனும் ஒற்றை வரி முறையான, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை, ஜூன் 30ல் அறிமுகம் செய்யப்பட்டது; ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்துவதில், மத்திய அரசு இவ்வளவு அவசரம் காட்ட வேண்டியதில்லை என்பது, பொருளியல் வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.தமிழகத்தை பொறுத்தவரை, ஜி.எஸ்.டி., வரி விதிப்பால், ஏழை, நடுத்தர மக்கள் உள்ளிட்டோர் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

அத்தியாவசிய தேவைகளான, பிரிஜ், வாஷிங் மிஷின், வாட்டர் ஹீட்டர், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், இன்வெர்ட்டர், அழகு சாதனப் பொருட்கள், கார், பர்னிச்சர்ஸ், சிமென்ட், வார்னிஷ், பெயின்ட், ஹேர் டை, இன்ஸ்டன்ட் காபி, செராமிக் டைல்ஸ், உடற்பயிற்சி சாதனங்கள், 'ஏசி' போன்றவற்றுக்கு, 28 சதவீதம் ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது, நுகர்வோரை வெகுவாக பாதிக்கும் என்பதை மத்திய அரசு உணரவில்லை. தங்கம் இறக்குமதி செய்யும் நாடுகளில், இந்தியா முன்னிலை வகிக்கிறது. தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதன் விற்பனைக்கும், 3 சதவீதம் வரி விதித்திருப்பது, மக்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதை எல்லாம் தெரிந்திருந்தும், வரி விகிதங்களை முறையே, 0, 3, 5, 12, 18, 28 என, மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளதை ஏற்றுக் கொள்ள இயலாது.ஜி.எஸ்.டி., வரி, 28 சதவீதத்துடன், ஏற்கனவே விதிக்கப்படும் 30 சதவீதத்தையும் சேர்த்து, திரையரங்குகளுக்கு, 58 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் தற்போது விதிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களை, முறையே, 0, 1, 5, 10, 20 எனக் குறைத்து நிர்ணயம் செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி., வரியை சரியான முறையில் நடைமுறைப்படுத்த, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்!

கேப்பை களிதின்ன வைத்தால்திமிர் அடங்கும்!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
கட்சி தலைவர்களுக்காக, தொண்டர்கள் தான் தீக்குளித்தும், துாக்கிட்டும், தங்கள் இன்னுயிரை ஈந்து, நம்பியிருந்த குடும்பத்தை நடுத் தெருவில் நிறுத்துவர்.
தற்கொலை செய்வோர் யாரும், முன் கூட்டியே அறிவிப்பு செய்து, உயிரை மாய்த்து கொள்வதில்லை; உயிர் போன பிறகு தான் விஷயமே, வெளிச்சத்துக்கு வரும்!சமீப காலமாக, அரசியல்வாதிகள் சிலர், தற்கொலை செய்து கொள்ள போவதாக, உதார் விட ஆரம்பித்து உள்ளனர்.
தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான், உதார் ஆட்டத்தை துவக்கி வைத்தவர்; அவரை அடுத்து, களம் இறங்கியவர், மாட்டுத் தீவன ஊழல் புகழ் லாலு பிரசாத் யாதவ்!
'தனியார் பால் பாக்கெட்டுகளில் உயிருக்கு ஊறு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் கலந்துள்ளது' என, ராஜேந்திர பாலாஜி, திரியை கிள்ளி பற்ற வைத்தார்.
நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன என கண்டுபிடித்து சொல்வதற்கா, இவர் அமைச்சராக இருக்கிறார்...

குற்றம் செய்தோரை கண்டறிந்து, நடவடிக்கை எடுத்து, பின், 'பிரஸ் மீட்' நடத்தலாம்; தனியார் பால் நிறுவன வண்டவாளத்தை வெட்ட வெளிச்சமாக்கலாம்.அதை விட்டு, 'தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்யவில்லை என, நிரூபித்தால், துாக்கில் தொங்கத் தயார்' என அறிவித்தார், ராஜேந்திர பாலாஜி.தற்போது, குற்றம் சாட்டப்பட்ட தனியார் பால் நிறுவனங்களின் தயாரிப்பில், எந்த கோளாறும் இல்லை என, தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் மானம், ரோஷம் மிக்கவராக இருந்தால், என்ன செய்திருக்க வேண்டும்...

மாட்டுத் தீவனப் புகழ் லாலு, குற்றவாளி என நிரூபணமாகி, நீதிமன்றத்தால் ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், 'குற்றம் நிரூபிக்கப்பட்டால், துாக்கில் தொங்குவேன்' என, வாய் சவடால் விடுகிறார்.

இது போன்று, சவால் விட்டு வேடிக்கை காட்டுவதற்கு, நீதிமன்றங்கள் தான் காரணம். எப்போது தண்டனை வழங்கப்பட்டு விட்டதோ, அப்போதே சிறையில் அடைத்து, கேப்பைக் களி தின்ன கொடுத்திருந்தால், இது போன்ற திமிர்த்தனமான வார்த்தைகள் வருமா...தண்டனையும் கொடுத்து, கூடவே ஜாமினும் வழங்கியதால் வந்த வினைதான் இது. உலகில், இந்தியாவை தவிர, வேறு எந்த நாட்டிலும், இது போன்ற கோமாளித்தனங்கள் நடக்காது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement