Advertisement

சொல்கிறார்கள்

ரூ.1 லட்சம் பரிசை வென்றது!


விவசாயிகள் பிரச்னையைத் தீர்க்க, நீர் இறைக்கும் மோட்டாரை ஆட்டோமேட்டிக்காக இயக்கும் சோலார் கருவியை கண்டுபிடித்துள்ள, புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரி இறுதியாண்டு மாணவி, அஸ்வினி: தர்மபுரி மாவட்டம், இலவடை கிராமம், எங்கள் ஊர். சிறு வயதிலிருந்தே அறிவியல் பாடம் ரொம்ப பிடிக்கும். பள்ளி அளவில் நடக்கும் அறிவியல் கண்காட்சிகளில் ஆர்வமாக கலந்து கொள்வேன். சினிமாவிலும் கூட, டெக்னாலஜி பற்றிய வெளிநாட்டு படங்களை தான் விரும்பி பார்ப்பேன்.
என் அப்பா, தாத்தா எல்லாருமே விவசாயிகள். என் படிப்புக்காக புதுச்சேரியில் குடியிருந்தாலும், விடுமுறை நாட்களில் ஊர் போய் விவசாயத்தை கவனிப்போம். 'த்ரீ பேஸ்' கரன்ட், ராத்திரி தான் வரும் என்பதால், மோட்டார் போட அப்பா அல்லது தாத்தா, இரவு, 2:00 மணிக்கு போய், காலை, 10:00 மணிக்கு வருவர்.காட்டுப் பகுதியை ஒட்டி நிலம் இருப்பதால், அவர்கள் திரும்பி வரும் வரை, திகிலுடனே இருப்போம். இதற்காகவே, வீட்டில் இருந்து மோட்டாரை இயக்கும் விதமாக, ஆட்டோமேட்டிக்காக செயல்படுவதுடன், கரன்ட் பிரச்னையையும் தவிர்க்க, சோலார் பேனலை பொருத்த திட்டமிட்டேன்.இது சம்பந்தமாக நிறைய புத்தகங்கள், பத்திரிகைகளின் ஆய்வுக் கட்டுரை, இணையதளத்தில் தகவல் திரட்டினேன். 2016ல், கண்டுபிடிப்பு பணியை துவக்கி, 'ஸ்மார்ட் இர்ரிகேஷன் சிஸ்டம்' என, பெயர் வைத்தேன்.
வடிவமைப்பு பணி முடியும் தறுவாயில், சென்னை ஐ.ஐ.டி., பொறியியல் மாணவர்களுக்கான தேசிய அளவிலான, 'ரிசர்ச் அண்டு இன்னோவேஷன் எக்ஸ்போ 2017' போட்டிக்கு, என், 'புராஜெக்ட்'டை அனுப்பினேன்.ஐ.ஐ.டி., பேராசிரியர்கள், 10 பேர் கொண்ட குழு, எங்கள் கண்டுபிடிப்புகளை ஆய்வு செய்தது. கல்லுாரி புராஜெக்ட்டாக அல்லாமல், வீட்டுப் பிரச்னைக்காக கண்டுபிடித்ததற்காகவும், நிறைய தொழில்நுட்பங்களை பயன்படுத்தியதுடன், விவசாயிகள் பிரச்னைக்கு கை கொடுக்கும் என்பதாலும், ஸ்மார்ட் இர்ரிகேஷன் சிஸ்டம் முதலிடம் பிடித்து, 1 லட்சம் ரூபாய் பரிசை வென்றது.
எஸ்.எம்.எஸ்., மூலம் மோட்டாரை, 'ஆன்' மற்றும், 'ஆப்' செய்யும், ஜி.எஸ்.எம்., வைபை வசதி, மோட்டார் கன்ட்ரோல் செய்யும் அப்ளிகேஷன், பவர் சப்ளை செய்ய பவர் ப்ரிட்ஜ், கரன்ட் சேமிக்கும் இன்வெர்ட்டர், சோலார் பேனல், ஈரப்பதமானால் மோட்டாரை அணைக்க மாய்சர் சென்சார், வயலுக்குள் மான், யானை போன்ற விலங்குகள் வந்தால்துல்லியமாக காட்டும் இமேஜ் புராசசிங்...வயலுக்கு பாய்ச்சும் நீரின் அளவை கண்டுபிடிக்க பிக் டேடா, உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மோட்டாரை ஆன், ஆப் செய்ய கனெக் ஷனை கொடுக்கும் குட் காம்புட்டிங், மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல், சாதாரண வெளிச்சத்திலேயே மின்சாரம் தயாரிக்கும் பவர் சேவிங், படிக்க தெரியாத விவசாயிகள் கூட எளிதாக உபயோகிக்கும் வகையில் மொபைல் காம்புட்டிங் என, பல்வேறு டெக்னாலஜியை பயன்படுத்தி உள்ளேன்.
இர்ரிகேஷன் சிஸ்டத்தை வயலில் பொருத்தி, அதனுடைய கனெக் ஷன் முழுவதும் நம் மொபைல் போனில் இருக்குமாறு வடிவமைத்துள்ளேன். சர்வர் பிராப்ளம் என, எந்த பிரச்னை என்றாலும் உடனே காட்டிவிடும்; வந்து சரி செய்து விடுவேன்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (6)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement