Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேச்சு: இன்று, சட்டசபை என்ற ஒன்று இருக்கிறது; ஆனால், அங்கு ஜனநாயகம் என்பது, கேள்விக்குறியாகி உள்ளது. கருணாநிதி முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சி என்றால் கூட, அவர்களுக்கு உரிய மரியாதையையும், உரிமையையும் தந்தார். இப்போது, முதல்வராக இருக்கக்கூடியவர் வைத்திருக்கக் கூடிய துறைகளில் இருந்து, கேள்வி நேரத்தில் ஒரு பதிலைக் கூட பெற முடியவில்லை.


இ.கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா பேட்டி:
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு, சிறையில் தனி சலுகை வழங்கப்படுவதாக செய்தி வந்துள்ளது. சிறை கைதியாக இருக்கும் ஒருவருக்கு, தனிச்சலுகை வழங்கக்கூடாது. லஞ்சத்தை பெற்று, சிறை அதிகாரிகள் சலுகை வழங்குவது, சிறைத்துறையே ஊழலுக்கு ஆளாகி இருக்கிறது என்பதை காட்டுகிறது.



'உங்க கட்சியில, மன்மோகன் சிங் இருக்காரு... திக் விஜய் சிங் இருக்காரு... இன்னும் பல மூத்த தலைவர்கள் இருக்கும்போது, உங்களை ஏன், சோனியா ஜி தேர்வு செஞ்சாங்கங்கற, 'சிம்பிள்' கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி சார்பில் போட்டியிடும் மீராகுமார் பேட்டி:
இதற்குமுன் நடந்த ஜனாதிபதி தேர்தல்களில், 'உயர் ஜாதி' என, சொல்லப்படும் வகுப்பினர் போட்டியிட்டிருக்கின்றனர். அப்போதெல்லாம், அவர்களின் திறமை, தகுதி, சாதனை ஆகியவை விவாதப் பொருளாக இருந்தன; ஜாதி குறித்து, எந்த விவாதமும் நடக்கவில்லை. ஆனால், இந்தமுறை மட்டும், ஜாதி என்பதைத் தாண்டி, வேறு எதுவும் விவாதிக்கப்படவில்லை. ௨௧ம் நுாற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம், குறுகலான, பிற்போக்கான சிந்தனைகளுடன் இருந்தால், நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியாது.



பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான, இல.கணேசன் பேட்டி: தி.மு.க.,வில், ஸ்டாலினின் உழைப்பு பாராட்டத்தக்கது; ஆனால், அவருக்கு பக்குவம் தேவை. எதிர்காலமே இல்லாத நிலையில், தி.மு.க., சென்று கொண்டிருக்கிறது.



'ஸ்டாலின் தமிழகத்துல செய்யிறது இருக்கட்டும்... நீங்க கூட, நேர்மையான முறையில, உங்கள் செல்வாக்கைக் காட்டி, மாநிலத்துக்கு நல்லது செய்யலாமே... மடியில் கனம் ஏதும் இருந்தால் தான், வழியில் பயப்படணும்...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி பேச்சு:
தமிழகத்தில் வீசும், பா.ஜ., சாரல் இப்போது, எங்கள் மாநிலத்திலும் வீச துவங்கியுள்ளது. மக்கள் சக்தி எங்களுக்கு இருக்கும்போது, தவிடு பொடியாக்கி விடுவோம். தமிழகத்தில் நடக்கும் இந்த ஆட்சியை, அகற்ற வேண்டிய காலக்கட்டம் வந்துவிட்டது. அதை, ஸ்டாலின் பொறுப்பு எடுத்து செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement