Advertisement

சொல்கிறார்கள்

பிளாஸ்டிக் பை மக்க 1,000 ஆண்டு ஆகும்!


பிளாஸ்டிக் ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வரும், மயிலாப்பூர் மாடவீதியைச் சேர்ந்த, 70 வயதான, கலா சேகர்: ரிசர்வ் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற நான், ஐந்து ஆண்டுகளாக, இப்பணியில் ஈடுபட்டு வருகிறேன். வீட்டில் வாங்கும் தினசரி, புத்தகங்களை படித்து முடித்தவுடன், அதில் காகித கவர்களை செய்கிறேன்.
நான் தயாரித்த காகிதப் பைகளை, தி.நகர், மயிலாப்பூர் மாட வீதிகளில் உள்ள வியாபாரிகளிடம் கொடுத்த போது, 'இதெல்லாம் வேண்டாம்மா' என்று அலட்சியமாக பேசுவர். நான் அதை கண்டுகொள்ளாமல், காகிதப் பையின் முக்கியத்துவத்தை இரண்டு வரிகளில் கூறி, 'இதற்கு நீங்கள் பைசா தர வேண்டாம். சாமான் வாங்க வருபவர்களுக்கு இதில் பொருட்களை வைத்து இலவசமாகக் கொடுங்கள்' என்று கூறி கொடுப்பேன்; வாங்கி கொள்வர்.
முடிந்தவரை, பிளாஸ்டிக்கை தவிர்க்க நீங்களும், எப்போதெல்லாம் கடைக்குச் செல்கிறீர்களோ, மறக்காமல் கையில் துணிப்பைகளை எடுத்துச் செல்ல வேண்டும். இல்லையெனில், நம்மிடம் ஏற்கனவே உள்ள பிளாஸ்டிக் பைகளையாவது எடுத்து செல்லலாம்.பிளாஸ்டிக் பை மக்க, 1,000 ஆண்டுகள் ஆகும். மேலும், பிளாஸ்டிக் குடுவைகள் எந்த வகையிலும் உருமாற்றமோ, அழிக்கவோ முடியாது. அதனால் இன்னும், 10, 20 ஆண்டுகளில் உலகம், கழிவு பிளாஸ்டிக்கால் நிரம்பி வழியும் என்று நம்பப்படுகிறது.பயன்படுத்தி வீதியில் எறியப்படும் பிளாஸ்டிக் பை, மழைக் காலத்தில் நீரால் அடித்துச் செல்லப்பட்டு, ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதை கடலில் சேர்ப்பதால், நெகிழிப் பைகளை உட்கொண்டு, ஆண்டுக்கு, பல லட்சம் திமிங்கிலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும், 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என, நீர் வளங்கள் பிளாஸ்டிக் குப்பைகளால் கடுமையாக மாசடைந்துள்ளதால், நீர்வாழ் உயிரினம், மனிதர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.சாக்கடையை அடைக்கும் பிளாஸ்டிக் பைகளால், கழிவுநீர் தெருவில் வழிந்து, அதை மிதித்து நடக்கும்போதும், அதிலிருந்து வரும் காற்றை சுவாசிக்கும் போதும், தொற்று நோயால் பாதிப்புக்கு உள்ளாகிறோம். மழைக் காலத்தில் சாலைகள் வெள்ளக் காடாக மாற, பிளாஸ்டிக் குப்பைகளே முதற்காரணம்.
பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதால், இதிலிருந்து வெளியேறும் டையாக்சின் வாயு, புற்றுநோயை ஏற்படுத்தும். மனிதர்கள் உண்ட பின் துாக்கி எறியும் பிளாஸ்டிக் பொட்டலங்களை தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு, அவை இறக்க நேரிடுகிறது.
மக்காத பிளாஸ்டிக் பொருட்கள், வேளாண் நிலங்களில் தங்கி, அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகின்றன; பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும்போதும், பிளாஸ்டிக் உருகும்போதும், வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை உடையதால், அருகில் வசிக்கும் மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தோல் நோய் முதல், புற்று நோய் வரை, பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பிளாஸ்டிக்கைத் தவிருங்கள்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

 • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

  சூப்பர்., நல்ல சிந்தனை பதிவு., மாற்றங்கள் வீட்டிலிருந்து வரணும் என்பார்கள் வாசகர்களாகிய நாம் இதனை பின்பற்றினால் இவரின் நோக்கம் நிறைவேறுவதோடு நாமும் ஒரு காரணமாக இருக்கலாம் ., சமூக பனி தொடர வாழ்த்துக்கள்.

 • V.N.ASHWIN - chennai,இந்தியா

  I would like to appreciate & wish her for her attempt & for this practice, i would like to wish her directly, i request you to provide me her contact number so that i can wish her. Many times dinamalar used to share the concern person's number...

 • vadivel - chennai,இந்தியா

  100/100 உண்மை.

 • r suresh - sahibabad,இந்தியா

  அருமையான பணி தொடர வாழ்த்துக்கள்

 • MaRan - chennai,இந்தியா

  ரொம்ப நல்ல சேவை பண்றீங்க மேடம்,, அரசு பணியில் ஓய்வு பெற்றபின் அமெரிக்காவில் இருக்கும் பேரக்குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கும் இந்த காலத்தில் ஒப்பற்ற சேவைக்காக உங்கள் பொன்னான நேரத்தை கொடுக்கும் உங்களை பாராட்ட வார்த்தை இல்லை,, தஞ்சை அருகே ஜவகர் என்ற இளைஞர் பிளாஸ்டிக் ஒழிப்பிற்காக தன் உயிரை கொடுத்த பொழுது ஏற்பட்ட நெருடலுக்கு உங்கள் சேவை சற்று ஆறுதல் அளிக்கிறது உங்கள் தொடர்பு எண்ணை கொடுத்தால் என்னை போன்ற சமூக அக்கறை கொண்டோர் உங்கள் சேவை விஸ்தரிக்க உதவுவோம் ,,நன்றி

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement