Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேட்டி: துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும், கோபால கிருஷ்ண காந்தியை, தே.ஜ., கூட்டணி உட்பட, அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டால், இந்திய நாட்டிற்கே பெருமை சேர்ப்பதாக அமையும்.

பா.ஜ., மாநில அமைப்பு செயலர் கேசவ விநாயகம் பேச்சு: ஜி.எஸ்.டி., நாட்டின் வளர்ச்சிக்கு, மிகவும் பயனுள்ளதாக அமையும். இது, ஏழைகளுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. இது குறித்து மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரத்தை, மக்கள் புறக்கணிக்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள், மக்கள், தேச வளர்ச்சிக்கான திட்டங்களே!


தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு: மூன்று ஆண்டுகளில், மோடி அரசால், தமிழகத்தில் போராட்டங்கள் மட்டுமே அதிகமாக நடக்கின்றன; வேறு எந்த நல்ல விஷயமும் நடக்கவில்லை. பிரதமர் மோடி, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே சாப்பாடு வர வேண்டும் என, நினைக்கிறார்; அசைவ உணவை நிறுத்திவிட்டு, சைவ உணவை சாப்பிடும்படி விரைவில் கூறுவார்.


வி.சி., தலைவர் திருமாவளவன் பேச்சு: மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கையில், மத்திய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது. இன்ஜி., படிப்புக்கான தேர்வை, பல்கலைக் கழகம் முடிவு செய்கிறது; அதே போல், மருத்துவ பல்கலைக் கழகம் தேர்வு செய்ய வேண்டும். அனைத்து மாணவர்களும் மருத்துவம் படிக்க நினைத்தால், மத்திய அரசு, அதற்குத் தக்க, இடங்களை அதிகப்படுத்த வேண்டும். இதற்காக, கூடுதலாக மருத்துவக் கல்லுாரிகளை அமைக்க வேண்டும். இதை தவிர்க்க, 'நீட்' தேர்வை கொண்டு வரக்கூடாது.


த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழக தேர்தல் கமிஷனும், தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீட்டை, இன்னும் சரிவர முடிவுக்கு கொண்டு வரவில்லை. இதனால், தமிழக அரசும், தமிழக தேர்தல் கமிஷனும், உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்துவதில் ஒருங்கிணைந்து, ஒருதலைபட்சமாக காலம் தாழ்த்துகிறதோ என்ற எண்ணம், மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.


'பேச்செல்லாம் வக்கணையா தான் இருக்கு... நெல்லை, மதுக்கடை விவகாரத்துல, களத்துக்குப் போக அஞ்சி, ஓடி ஒளிஞ்சது யாருங்க...' என, கேட்கத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: தொழில் மற்றும் வணிகம் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், ஆந்திரா, தெலுங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்கள், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. அதே நேரத்தில், இப்பட்டியலில் கடைசி மூன்று இடங்களை, தமிழகம், கேரளா, அசாம் மாநிலங்கள் பிடித்துள்ளன. தொழில் முதலீடு பட்டியலில், இந்தளவுக்கு தமிழகம் அதலபாதாளத்திற்கு தள்ளப்பட்டது ஏன்? அதே மாநாட்டில், 'நிடி ஆயோக்' வெளியிட்ட மற்ற புள்ளி விபரங்களில், கிராமப்புறங்களுக்கு மின் இணைப்பு வழங்குதல், கல்வி ஆகியவற்றில், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement