Advertisement

இது உங்கள் இடம்

எரியும் கொள்ளியால் தலையை சொறிய மாட்டான் தமிழன்!

என்.வைகைவளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: ரஜினி ஆட்சிக்கு வந்தால், தமிழகத்திற்கு கிடைக்கும் நன்மைகளை விட, தீமைகளே அதிகம். இதை தமிழர்கள் அனைவரும் உணர்ந்தாக வேண்டும்...* ரஜினிகாந்த், காவிரி பிரச்னைக்காக நிச்சயம், கர்நாடக அரசுடன் மோதல் போக்கை மேற்கொள்ள மாட்டார். ஒருமுறை, 'கன்னடர்களை உதைக்க வேண்டும்' என்று பேசி, அதனால் எழுந்த எதிர்ப்பு அலையை பார்த்து நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டவர் தான், சூராதி சூரன் ரஜினிகாந்த்* கர்நாடக அரசு வலியவந்து, ௧௨௦ டி.எம்.சி., தண்ணீர் தர நினைத்தாலும், ௨௦ டி.எம்.சி., தண்ணீரே போதும் என கூறினாலும் கூறுவார். யாராவது, தமிழகத்தில் எதிர்த்து குரல் கொடுத்தால், 'வீணாக கடலில் போய் தண்ணீர் கலந்து விடுமே' எனக் கூறினாலும் கூறுவார், நம்ம ஊர் சூப்பர் ஸ்டார்* கச்சத்தீவை திருப்பி கேட்பது பாவம் என்பார். 'கொடுத்த எதையும் திருப்பி கேட்பது நல்லதா' என, தமிழர்களை பார்த்து கேட்டாலும் கேட்பார், ரஜினி* சட்டசபைக்கு எப்போது வருவார், எப்படி வருவார் என்பதை யாராலும் கூற முடியாது.ஏன் என்றால், ௨௦ ஆண்டுகளுக்கு மேலாக, 'அரசியலுக்குள் எப்போ வருவேன், எப்படி வருவேன் என்பது தெரியாது' என பேசியவர், பேசிக் கொண்டிருப்பவர்... ஆனால், இன்று வரை வந்தபாடில்லை!ஒருவேளை ரஜினிக்கு ஓட்டளித்து, அவரை முதல்வர் ஆக்கிய பின், எரியும் கொள்ளியை எடுத்து, தலையில் சொறியும் தவறை எல்லாம், தமிழக மக்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள்!

போக்குவரத்து கழகசச்சரவுகள் நீங்கவழிகள் இருக்கு!

ஆர்.மகேசன், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தனியார் மயமாக்குவது தற்கொலைக்கு சமம்' என, இதே பகுதியில், ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ஒருவர் எழுதியிருந்தார்.போக்குவரத்து கழகத்தில், அவருக்கு வர வேண்டிய நிலுவைத் தொகை பாக்கி இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.தமிழகம் முழுவதும், 22 ஆயிரம் அரசு பஸ்கள் இயங்குகின்றன. அவற்றில், ௧.௩௦ லட்சம் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.ஒருகாலத்தில், நாட்டளவில் சிறந்த போக்குவரத்து கழகமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பெயர் பெற்று இருந்தது. இன்று, மிகவும் பின் தங்கிய அரசு போக்குவரத்து கழகங்களில் முதன்மை வகிக்கிறது.ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள், முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள், திறமையற்ற நிர்வாகம், பராமரிக்கப்படாத வாகனங்கள், வசூல் இல்லாத வழித்தடங்கள், தேவையற்ற இலவசங்கள் போன்ற காரணங்களால், அரசு போக்குவரத்து கழகம் தள்ளாடுகிறது.தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகை மற்றும் ஓய்வு கால பலன்களுக்காக, தொழிலாளர்கள் பலர் நீதிமன்றங்களை நாடி உள்ளனர்.கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவதிப்படும் டிரைவர்களை கூட, கட்டாயப்படுத்தி பணிக்கு அனுப்புகின்றனர். பணியாளர்கள் மற்றும் பயணிகளின் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.இன்று, தனியார் பஸ்கள் முறையாக பராமரிக்கப்படுகின்றன. மக்கள் ஆதரவு கிடைப்பதால், நல்ல லாபத்தை ஈட்டுகின்றன.தனியார் பஸ்களில் கட்டண கொள்ளை நடக்கிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக, அனைத்து தனியார் பஸ்களையும் குறை கூறி விட முடியாது.பண்டிகை காலங்களில், தொலைதுார பயணங்களுக்கு அரசு பஸ்களிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் உள்ளது.அரசு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும், 'பப்ளிக் பிரைவேட் பார்ட்னர் ஷிப்' எனப்படும் திட்டம், இன்று இந்தியாவில் பல மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது; அதை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தலாம்.'நஷ்டத்தில் இயங்கும் அரசு போக்குவரத்து கழகத்தை ஏன் இழுத்து மூடக்கூடாது' என, ஒருமுறை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.எனவே, அரசு போக்குவரத்து கழகத்திற்கு, புதிய பஸ்களை வாங்க வேண்டும். நிர்வாகம் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்க குழு அமைக்க வேண்டும்.இப்படி செய்தால், போக்குவரத்து கழகங்களில் நிலவும் சச்சரவுகள் நீங்கும்!


ஜெ.,க்கு காட்டும்நன்றிக் கடன்!
வீ.சுந்தர மகாலிங்கம், திருவனந்தபுரத்திலிருந்து எழுதுகிறார்: எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, ஜம்மு - காஷ்மீர், மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியது.தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, கட்டமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்கு, ௨௦௧௫ல், தமிழக அரசு அனுமதி அளித்தது.எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு, கோவை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை என, ஐந்து நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் ஆய்வும் நடத்த, மாநில அரசு திட்டமிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும், எந்த ஒரு இடத்தையும் இன்னும் தேர்வு செய்யவில்லை.'தென் மாவட்டங்களுக்கு, மதுரை தான் மத்தியமான, வசதியான இடம்; எனவே, அங்கு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க முயற்சி செய்வேன்' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.'தஞ்சை, செங்கம்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்; அதுதான் ஜெயலலிதாவின் விருப்பம்' என, முதல்வர் பழனிசாமி குண்டை துாக்கி போட்டார்.'எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் தான் அமைக்க வேண்டும்; இது தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம்' என்கிறார், மாஜி முதல்வர் பன்னீர்செல்வம்.ஆளாளுக்கு, ஆளும் கட்சியில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்வதால், இந்நாள் வரை, முடிவு தெரியாமல் உள்ளது.மதுரை உயர்நீதிமன்ற கிளையில், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து, பொதுநல வழக்கு தொடரப்பட்டது.வழக்கில் ஆஜரான, மத்திய அரசின் சுகாதாரத் துறையின் வழக்கறிஞர், 'எய்ம்ஸ் மருத்துவமனை, எங்கு அமைக்க வேண்டும் என்ற முடிவை, மாநில அரசு இன்னும் எடுக்கவில்லை' என கூறியுள்ளார்.மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரி, மதுரை, தோப்பூரில், 3,000 பேர் உண்ணாவிரதம் இருந்தனர். அதே போல், தஞ்சை - செங்கம்பட்டியில் அமைக்க கோரி, ஒரு அமைப்பினர் போராடி வருகின்றனர்.தென் மாவட்டங்கள், போதுமான வளர்ச்சி இன்றி பின் தங்கியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையை, மதுரையில் தான் அமைக்க வேண்டும் என்பது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆசை.எனவே, அதை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை, முதல்வர் பழனிசாமி எடுத்தாக வேண்டும். இதுதான், ஜெயலலிதாவிற்கு காட்டும் நன்றி கடனாக அமையும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • மஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா

    எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மாநில அரசு தான் முடிவு பண்ணனும் என்று சொல்லுவதால் .. அப்படி அமைந்தாலும் அடுத்து வரும் அரசு மருத்துவமனையை நூலகமாக மாறிவிடும் அல்லது பெயருக்கு இருக்குமே தவிர அதில் எந்தவசதியும் இருக்கப்போவதில்லை.. திட்டங்களை நிறைவேறாமல் போக்குவதற்கு ஆட்சியாளர்களின் எண்ணங்கள் காரணம்..

  • thiru - erode,இந்தியா

    வைகைவளவன் அவர்களே, அதை விட முக்கியம் உம் போன்றோர் உளறல்களை தமிழன் சட்டை செய்ய மாட்டான். உம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி எழுத்திலே தெரிகிறது. நாகரிகமாக எழுதவும்...

  • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

    ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழக வோட்டு போட முட்டாள் இல்லை.வந்தால் என்ற கேள்விக்கே இடமில்லை.அரசியல் அறிவும் ஞானமும் இல்லாத ஜென்மத்தை பற்றி டிஸ்கஸ் செய்து நேரத்தையும் பொன்னனா இடத்தையும் வீணடிக்க வேண்டாம்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement