Advertisement

'டவுட்' தனபாலு

ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த, பீஹார் முதல்வர் நிதிஷ் குமார்: தங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து, லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர், இதுவரை அளித்துள்ள விளக்கங்கள் போதுமானதாக இல்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளோர், அவற்றை பொய்யென நிரூபித்து, துாய்மையானவராக வெளிவர வேண்டும்.


டவுட் தனபாலு: 'மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளியாக உள்ள லாலு பிரசாத் யாதவுடன், அப்புறம் எதுக்கு கூட்டணி வைத்தீங்க... 'அப்பீல்' மூலம், நிரபராதி என, லாலு நிரூபித்த பின், அவரோடு கைகோர்த்து இருக்கலாமே... ஏன், அப்போது இதை பொருட்படுத்தலை'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!


பா.ஜ., செய்தித் தொடர்பாளர் கிருஷ்ண சாகர் ராவ்: எதிர்க்கட்சிகள், துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில், கோபால கிருஷ்ண காந்தியை களமிறக்கி உள்ளன. தோல்வியடைவது நிச்சயம் என்ற நிலையில், அவரை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்திருப்பது, மஹாத்மா காந்திக்கு இழைக்கும் அவமரியாதை.


டவுட் தனபாலு: 'மஹாத்மா காந்தியின் பேரனான, கோபால கிருஷ்ண காந்தி மீது, உங்களுக்கு நல்ல அபிப்பிராயம் தானே இருக்கு... அப்படீன்னா, நீங்களும் அவரை ஆதரிக்க வேண்டியது தானே... அதன் மூலம், மஹாத்மா காந்திக்கும் மரியாதை செலுத்தலாமே... எதுக்கு அவரை எதிர்த்து, வேட்பாளரை நிறுத்துறீங்க'ன்னு, காங்கிரஸ், 'டவுட்' எழுப்பிடப் போகுது...!


-மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு: ஜி.எஸ்.டி., வரி விதிப்பு சட்டம், 17 ஆண்டுகளாக, அனைத்து நிலைகளிலும் விவாதிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்துள்ளது. முதலில், ஜி.எஸ்.டி.,யை அறிவித்துவிட்டு, தற்போது ஏன் காங்கிரஸ் எதிர்க்கிறது?


டவுட் தனபாலு: இதென்ன அவ்வளவு பெரிய ரகசியமா... கடந்த காலங்களில், மோடி உட்பட, பா.ஜ., முதல்வர்கள் பலரும், ஜி.எஸ்.டி.,யை எதிர்க்கத்தான் செய்தாங்க... அது எதன் பொருட்டோ... அது தான், இப்போது எதிர்க்கட்சியாக உள்ள, காங்., எதிர்ப்பிற்கும் காரணம் என்பதில், 'டவுட்'டே வேண்டாம்...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement