Advertisement

இது உங்கள் இடம்

இலவசங்களை தவிர்த்தால் நாடு முன்னேறும்!


எம்.மணிகண்டன், தேனியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: போக்குவரத்துத் துறை அரசு கையில் தான் இருக்க வேண்டும் என்ற நோக்கில், அரசு பஸ்களில், பள்ளி மாணவ, மாணவியருக்கும், முதியோருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு கூட, சலுகை கட்டணத்தில் பஸ் பாஸ் தரப்படுகிறது' என வாசகர் ஒருவர் கடிதம்
எழுதி இருந்தார்.இலவசத்தை பிஞ்சுகள் மனதில் பதிய வைப்பது எந்த விதத்தில் நியாயம்? வாசகர் உள்ளிட்ட இலவசங்களை விரும்புவோருக்கு சில கருத்துக்களை கூற விரும்புகிறேன்...மதுரையில், ௧௯௮௧ல் உலக தமிழ் மாநாடு நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அப்போது, மக்கள் வசதிக்காக பூங்கா, கழிப்பறைகள் அமைப்பது, சாலை சீரமைப்பு பணிகளை துவக்குவது போன்ற திட்டங்களை மாநகராட்சி தீட்டியது. அதற்காக, மத்திய, மாநில அரசுகளிடம் உதவி கோரியது.அந்த நேரத்தில், மத்திய, மாநில அரசு களும் நிதி பற்றாக்குறையால் திண்டாடியதால், நிதி ஒதுக்க முடியவில்லை. வேறு வழியின்றி, மத்திய அரசு உதவியுடன் உலக வங்கியிடம் கடன் வாங்க, மதுரை மாநகராட்சி முடிவு செய்தது. கடன் தர முன் வந்த உலக வங்கி, தன் அதிகாரிகளின் குழுவை மதுரைக்கு அனுப்பியது.அவர்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம், 'எந்தெந்த இடங்களில் பூங்கா, கழிப்பறை அமைக்க போகிறீர்கள்; எங்கு சாலை சீரமைப்பு பணி நடத்த போகிறீர்கள்?' என கேட்டனர். அந்த இடங்களை பார்வையிட்டு, 'அனைத்திற்கும் கடன் தருகிறோம். ஆனால், அந்த கடனை எப்படி திருப்பி செலுத்துவீர்கள்?' என, கேட்டனர்.அதற்கு மாநகராட்சி அதிகாரிகள், 'நாங்கள் வசூலிக்கும் தொழில், வீட்டு வரியில் இருந்து செலுத்துவோம்' என்றனர். 'அது கூடாது' என கூறிய உலக வங்கி அதிகாரிகள், 'பூங்கா, கழிப்பறைகளை அமைத்து, நுழைவு கட்டணம் விதியுங்கள். மாநகராட்சியால் முடியாவிட்டால், தனியாரிடம் ஒப்படைத்து அதற்கான கட்டணத்தை பெறுங்கள்; ஒருபோதும், 'ஓசி'யாக தராதீர்கள். அப்படி தந்தால், நிர்வாகம் சீர்கெட்டுபோய் விடும்' என்றனர்.அதே போல், தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை, அப்போதைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அவரை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலமும் அறிவித்தது. அந்த நேரத்தில், பொருளாதார நிபுணராக விளங்கிய மன்மோகன்சிங் ஒரு கருத்தை
வெளியிட்டார்.அதில், 'மின்சாரத்தை ஒருபோதும் இலவசமாக வழங்காதீர்கள். அதற்கு பதிலாக, ஒரு யூனிட் மின்சாரம் தயாரிக்க ஆகும் செலவை கணக்கிட்டு, அதையாவது விவசாயிகளிடம் வசூலியுங்கள். ஒருபோதும் இலவசமாக வழங்காதீர்கள்' என்றார்.
அன்று முதல் இன்று, இலவசங்களை எதிர்ப்போர் இருக்கத் தான் செய்கின்றனர். ஆனால், இலவசங்களை பெற்று, 'நாடு எப்படி போனால் நமக்கு என்ன...' என்ற மனநிலை மாறியே தீர வேண்டும்!


மக்கள்விருப்பம்இது தான்!


என்.சாண்டில்யன், மதுரை யிலிருந்து எழுதுகிறார்: 'திராவிட இயக்கத்தை எந்த கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது; ஜாக்கிரதையாக இருங்கள்' என, மிரட்டி இருக்கிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்.உலகில் எதுவுமே நிலையானது அல்ல. எத்தனையோ கோட்டை, கொத்தளங்கள் மண்ணோடு மண்ணாகி போய் விட்டன, மிஸ்டர் ஸ்டாலின்.'எனக்கு பிறகும், அ.தி.மு.க., ௧௦௦ ஆண்டுகள் தொடரும்' என்றார், ஜெயலலிதா. அவர் மறைந்த சில நாட்களில், அ.தி.மு.க., இரு பிரிவாக பிரிந்து உள்ளது.போதாக்குறைக்கு, சில எம்.எல்.ஏ.,க்களை தன் பக்கம் இழுத்து, மூன்றாவது பிரிவை உருவாக்கி இருக்கிறார், தினகரன்!தி.மு.க., தலைவர் கருணாநிதி உடல் நலம் குன்றி, தொடர் சிகிச்சையில் உள்ளார்.தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு சக்திகளின் அரசியல் வேறு; முதல்வர் பழனிசாமி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலினின் அரசியல் வேறு.கருணாநிதியும், ஜெயலலிதாவும் மக்களிடம் செல்வாக்கு பெற்ற தலைவர்களாக விளங்கினர்.தொண்டர்கள் மத்தியில் மட்டும் செல்வாக்கு பெற்றுள்ள ஸ்டாலினும், தொண்டர்களிடமும், மக்களிடமும் எடுபடாத பழனிசாமியும், பன்னீரும் நடத்தும் அரசியல் நாடகம் எல்லாம், எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை, மக்கள் கவனிக்கின்றனர்.சட்டசபை தேர்தல் நடந்தால், அ.தி.மு.க.,வின் நிலைமை படுமோசமாகி விடும். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல், தி.மு.க., ஆட்சிக்கு வரும் என கணக்கு போடுகிறார், ஸ்டாலின்.
அரசியல் ரேஸில் பங்கேற்க, நடிகர் ரஜினியும் தயாராகி வருகிறார். தமிழக அரசியல் வரலாற்றில் முற்றிலும், சினிமா காரர்கள் இல்லாத அரசாக வர வேண்டும் என்பது, பெரும்பாலான மக்களின் விருப்பம்!


பட்டதாரிகளின்வாழ்வில்ஒளி ஏற்றுவரா!


எஸ்.சரவணகுமார், மதுரை யிலிருந்து எழுதுகிறார்: கிளார்க் உள்ளிட்ட சில அரசு பணிகளுக்கு, குறைந்தபட்ச தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்; போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்து, ௧௦ம் வகுப்பு வரை படித்தவர், வெற்றி பெற்றால் பணி நிச்சயம் உண்டு.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில், பதிந்தோர் இல்லையா... அவர்களும் அரசு தேர்வு எழுதி வெற்றி பெற்று பதிவு செய்தோர் தானே!வேலைவாய்ப்பு அலுவலகத்தில், லட்சக்கணக்கில் பதிவு செய்து அரசு பணிக்காக காத்துக் கிடக்கின்றனர். வேலைவாய்ப்பு அலுவலகத்தை நம்பி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்து, 40 வயதுக்கும் மேல் உள்ளனர்; இவர்களுக்கு ஏன் வேலைவாய்ப்பு அளிக்கக் கூடாது...சமீப காலமாக அரசு துறை நடத்தும், அரசு வேலைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., அல்லது அத்துறை சார்ந்து நடத்தப்படும் தேர்வுகளில் வெற்றி பெற்றால் தான் வேலை என்ற நிலை உள்ளது.கடந்த, 1995 வரை, அரசு சார்பில் நடத்தும் தேர்வுகள் ஒன்றோ அல்லது இரண்டோ என்ற நிலை இருந்தது. அப்போது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் தான் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது, வேலைவாய்ப்பு அலுவலகத்தை மறந்து விட்டனர்.இன்று, அரசு சார்பில் நடத்தும் தேர்வுகளில் அதிகபட்ச வயது, 35 என்ற நிலை உள்ளது. இதில், 18 முதல், 25 வயது உள்ளோரே அதிகம் பேர் தேர்வு எழுதி, அரசு வேலை பெற்று விடுகின்றனர்; குறைந்த வயது உள்ளோருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.ஆனால், 40 வயதுக்கு மேல் உள்ளோரின் கதி அதோ கதி தான்... இவர்களுக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.இவர்கள், என்றாவது ஒரு நாள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அரசு வேலைவாய்ப்பு வராதா என்று ஏங்கிக் கொண்டிருக்கின்றனர்; அரசு நினைத்தால் எதுவும் முடியும்.வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு புத்துயிர் அளித்து, வரும் காலங்களில் ஒரு குழு அமைத்து, பதிவு மூப்பு அடிப்படையில், வெளிப்படையாக தேர்வு செய்து, பட்டதாரிகளின் வாழ்வில் ஒளி ஏற்றுவரா?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Kathirvel - Tiruchengode,இந்தியா

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு எந்த தேர்வும் வைக்காமல் பதிவு மூப்பு முறையின் மூலமாக அரசு வேலை கொடுக்க வேண்டும். இலக்கியம் படித்தவர்களுக்கு கணக்கும் அறிவியலும் வரலாறும் புவியியலும் பணியாளர் தேர்வில் இடம் பெற்றால் அவர்கள் எப்படி தேர்வாக முடியும்? இதற்காக தனியாக மறுபடியும் படித்து தேர்வாக முடியுமா? அப்படியானால் அவர்கள் பெற்ற பட்டத்திற்கு என்ன மதிப்பு? வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதன் நோக்கம் என்ன? பணியாளர் தேர்வு வெற்றி பெற்றுத்தான் ஆக வேண்டுமென்றால் அனைத்து பட்ட படிப்பு பாட திட்டங்களிலும் பணியாளர் தேர்வு பாட திட்டங்களையே பாடமாக வைத்து விடலாமே? மற்ற பட திட்டங்கள் எதற்கு? பட்டம் பெற்று பல வருடம் ஆகியும் வேலை கிடைக்காத எங்களை போன்றோர்களின் கதி என்ன? மனசாட்சியுள்ள தமிழக முதல்வர், மந்திரிகள், அதிகாரிகள் ஆகியோர் நினைத்து பார்த்து எங்களை போன்றோர்களுக்கு விரைவில் வேலை வாய்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • Kathirvel - Tiruchengode,இந்தியா

    அவர் கேட்பது நியாயம்தான். படித்து பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பல வருடம் ஆனவர்களுக்கு அரசு வேலை கொடுப்பதுதான் முறை. நான் முதுகலை பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து முப்பது வருடம் ஆகிறது. இன்னும் அரசு வேலை கிடைக்கவில்லை. மிக குறைந்த சம்பளத்தில் தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறேன். இதனால் எனக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை. பிழைப்பதே பெரும்பாடாக உள்ளது. இளம் வயது மாணவர்கள் எல்லாம் பணியாளர் தேர்வு எழுதி வேலை வாய்ப்பு பெற்று விடுகின்றனர். ஆனால் எனக்கு பலமுறை பணியாளர் தேர்வு எழுதியும் தேர்வு ஆக முடியவில்லை. இதற்கும் நான் முதுகலையில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளேன். அப்படியானால் நான் பெற்ற பட்டத்திற்கு மதிப்பு இல்லையா? ஆகவே அரசாங்கமானது பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். இது என் போன்ற லட்சக்கணக்கானவர்களின் இதயக்குமுறல்.

  • Harinathan Krishnanandam - Chennai,இந்தியா

    இது உங்கள் இடம் பகுதியில் தமிழகத்தில் 80 லட்சம் பேர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து அரசு வேலைக்கு காத்திருப்பதால் அரசு 40 வயதை அடைந்தவர்களுக்கு எப்படியாவது வேலை வாய்ப்பு தரவேண்டும் என்று மன்றாடி கேட்டுக்கொண்டு இருக்கிறார் அரசு தன தேவைகளுக்கு பொது மக்களில் இருந்து அவ்வப்போது பொதுமக்களை வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது பணியாளர் தேர்வு வாரியம் மூலம் வேலைக்கு எடுக்கிறது இதற்காக அரசு ஆண்டுதோறும் படித்து முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு தரவேண்டும் என்று சொல்வது சரியில்லை படிப்பை பயன்படுத்தி அரசு தவிர தனியார் துறை மற்றும் சுய ஜீவனம்,தொழில் அதிபர் என்று வித விதமாக வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம் அதை விடுத்து அரசே படிக்க வைத்து வேலை வாய்ப்பு கொடுத்த் திருமணம் செய்வித்து ஓய்வு காலத்திற்கு பண உதவியும் செய்து காகா வேண்டும் என்பது பொது உடமை நாடுகளுக்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரலாம்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement