Advertisement

'டவுட்' தனபாலு

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்: அடுத்த கல்வியாண்டில், பொறியியல் கல்லுாரியில் சேரும் மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுத சட்டம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அதை அனுமதிக்காத வகையில் பார்த்துக் கொள்வோம். இதற்காக, மத்திய அரசை வலியுறுத்துவோம்.


டவுட் தனபாலு: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வில், விலக்களிக்கக் கோரி, நீங்க மேற்கொண்ட முயற்சியைத் தான், பார்த்தோமே... சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, ஏன் இன்னும் உள்துறையிலேயே துாங்குதுன்னு, மனசுக்குள் கூட நீங்க முணுமுணுக்கலையே... நீங்க, மத்திய அரசிடம் வலியுறுத்தப் போறீங்களா என்பது, 'டவுட்' தான்...!




தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், மற்ற கட்சிகளுடன் இணைந்து, தொடர் போராட்டம் நடத்துவோம்.




டவுட் தனபாலு: இதுக்கு எதுக்குங்க மற்ற கட்சிகளை துணைக்கு அழைக்குறீங்க... நீங்களே தனியா போராட்டம் நடத்தலாமே... 'மீனவர்களின் வாழ்வாதாரமான கச்சத்தீவை பறித்துக் கொடுத்தவர்களே, இப்போ திடீர்னு பாசம் காட்டுறாங்க'ன்னு யாரும், நறுக்குனு கேட்டுடுவாங்கன்னு நினைக்குறீங்களா... இல்லை, தனியா நடத்தினால் போராட்டத்தில் கூட்டம் சேராதுன்னு தயங்குறீங்களா என்ற, 'டவுட்'கள் வருதே...!




காங்கிரசைச் சேர்ந்த, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி: புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, மூன்று நியமன, எம்.எல்.ஏ.,க்களும் செல்லாத காசுகள். அவர்களுக்கு சட்டசபையில் ஓட்டுரிமை கிடையாது. இவர்களை கொண்டு ஆட்சி மாற்றம் செய்ய நினைப்பது பகல் கனவு.



டவுட் தனபாலு: 'செல்லாத காசுக்கே, எதுக்கு இவ்வளவு பயப்படுறீங்க... ஆர்ப்பாட்டம், போராட்டம், கடையடைப்பு, சட்ட ரீதியான எதிர்ப்புன்னு போயிட்டீங்களே... தப்பித் தவறி, ஒரு தொகுதியில், பா.ஜ., வெற்றி பெற்றிருந்தால், உங்க ஆட்சி அவ்வளவு தானோ... காங்., -- எம்.எல்.ஏ.,க்கள் மீது, உங்களுக்கு இவ்வளவு தான் நம்பிக்கையா'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement