Advertisement

அக்கம் பக்கம்

எல்லாம் நடிப்பு தான்!


ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜியும், ஒரே மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.பிரணாப் முகர்ஜி, காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் என்பது, அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மம்தாவும், தனிக் கட்சி துவங்குவதற்கு முன், மேற்கு வங்க காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கியவர் தான்.
இந்த இரண்டு விஷயங்களாலும், பிரணாப் மீது, மம்தா, மிகுந்த மரியாதை வைத்திருந்தார். பிரணாபும், மம்தாவை, இளைய சகோதரி போல் தான், பாவித்து வந்தார்.'பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதால், மீண்டும் அவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றி பெற வைக்க வேண்டும்' என, மம்தா கூறி வந்தார்.ஆனால், சமீபகாலமாக, அவரை புறக்கணித்து வருகிறார், மம்தா. சமீபத்தில், மேற்கு வங்கத்தில், ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்தது. இதற்கு, பிரணாப் தான், தலைமை விருந்தினர்.
விழாவில் பங்கேற்க வரும்படி, மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது, 'பிரணாப் பங்கேற்கும் விழாவுக்கு, நான் வர மாட்டேன்' என, கூறிவிட்டார்.திரிணமுல் கட்சி நிர்வாகிகளோ, 'பிரதமர் மோடியின் திட்டங்களுக்கு, ஜனாதிபதி பாராட்டு தெரிவித்து வருகிறார்; இது, மம்தாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான், அவரை புறக்கணிக்கிறார்' என்கின்றனர்.மேற்கு வங்க மாநில பொதுமக்களோ, 'பதவி ஆசைக்கு முன், சொந்த ஊர் பாசமெல்லாம், வெறும் நடிப்பு தான் போலிருக்கிறது' என, முணுமுணுக்கின்றனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement