Advertisement

சொல்கிறார்கள்

ரத்த கசிவால் கண் பார்வைபாதிக்கும்!



'டயாபடிக் ரெட்டினோபதி' பற்றி கூறும், கண் மருத்துவர் ரஜினிகாந்தா: பொதுவாகவே, கண்களில் ஆயிரக்கணக்கான நோய்கள் வர வாய்ப்புண்டு. குறிப்பாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள், கண்களை சரியாக கவனிக்க தவறினால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம்.சர்க்கரை நோய், கண்ணில் உள்ள முக்கியமான, ஆப்டிக் நரம்பு மற்றும் கண் தசைகளை பாதிக்கும். இதனால், கண்ணை அசைக்க முடியாத நிலை ஏற்படும். சர்க்கரை நோய், விழித்திரையை பாதிப்பதையே, 'டயாபடிக் ரெட்டினோபதி' சுருக்கமாக, டி.ஆர்., என்பர்.டயாபடிக் ரெட்டினோபதியால், கண்களுக்கு தெரியாத ரத்தக் குழாய்களின் உட்சுவரில் கொலஸ்டிரால் தங்கி, நடுச்சுவரில் உள்ள தசைகள் செயலிழந்து விடுகின்றன. இதனால், கண்ணின் உள்திரையில் கோளாறு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பழுதடைந்து, ரத்த கசிவு ஏற்பட்டு, கண் பார்வை பாதிக்கும்; நாளடைவில் பார்வையே இழக்க நேரிடுகிறது.
இதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். முதல் நிலை - பேக் கிரவுண்டு டி.ஆர்., முற்றிய நிலை - ப்ராலி பரேடி டி.ஆர்., இந்த நோய் மிகவும் முற்றிய நிலையில், விழித்திரை தன் அடிப்பாகத்திலிருந்து பிரிந்து விடும். 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதன் பின்விளைவுகள் மிக அதிகமாகும்.நம் விழித்திரையில் அதிக எண்ணிக்கையில் ரத்த நாளங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இந்த சிறிய ரத்தக் குழாய்களையே பாதிக்கிறது. ரத்தக் குழாய்கள் வலுவிழக்கும் போது, விழித்திரையில் நீர் அல்லது ரத்தத்தை கசிய வைக்கிறது.மேலும், கண்ணில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் போது, புது ரத்தக் குழாய்கள் உருவாகும். சில நேரங்களில் ரத்தக் குழாய்கள் வெடித்து விடும். இவை நாளடைவில் விழித்திரையின் முக்கிய இடமான மாக்யூலாவை பாதிக்கிறது. இதனால், விழித்திரையிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் பொருட்களின் உருவம் தெளிவில்லாமல் இருப்பதால், நோயாளிக்கு பார்வைத்திறன்
குறைகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்கள், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, கண் பரிசோதனை செய்வது நல்லது. ஏனெனில், இந்த, டி.ஆர்.,க்கு, எந்த அறிகுறியும் தெரியாது. இந்த நோயை துவக்கத்திலேயே கண்டுபிடித்து விட்டால், பாதிப்பிலிருந்து மீண்டு விடலாம்.எந்த ரத்தக் குழாயில் கசிவு உண்டாகிறது என்பதை, 'ப்ளுரசின் ஆன்ஜியோகிராபி' பரிசோதனை செய்வது அவசியம். இதில், 'ப்ளுரசின்' திரவத்தை நோயாளியின் கையில் ஊசி மூலம் செலுத்தி, அந்த திரவம் கண்களில் உள்ள விழித்திரையின் ரத்த குழாய்கள் வழியாக செல்லும் போது, புகைப்படம் எடுக்கப்படும். கசிவை கண்டுபிடித்து, கதிர்வீச்சு முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது. இதற்கு நோயாளி மருத்துவமனையில் தங்க வேண்டிய
அவசியமில்லை.கண்ணிற்குள் அதிகமாக ரத்தம் தேங்கி நின்றால், 'விட் ரெக்டமி' என்ற அறுவை சிகிச்சையில், வேண்டாத ரத்தத்தை அப்புறப்படுத்தலாம். மிகவும் முற்றிய நிலையில் விழித்திரை, தன் அடிப்பாகத்திலிருந்து பிரிந்து விட்டால், அதற்காகவே நிர்ணயிக்கப்பட்ட ஆப்பரேஷன் செய்யலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement