Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'கிணற்றை, குளத்தை துார்வார, அரசியல் கட்சியினர் போட்டா போட்டி போடுறாங்களே... நீங்க ஏன், வித்தியாசமா உங்க முயற்சியிலேயே நீர்ப்பாசன திட்டங்களைச் செய்யக் கூடாது... அரசிடம், 'பர்மிஷன்' கேட்டுப் பாருங்களேன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவரும், எம்.பி.,யுமான அன்புமணி பேச்சு: தர்மபுரி மாவட்டத்தில், 400 கோடி ரூபாய் மதிப்பில், 10 நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்தினால், நீராதாரம் அதிகரித்து விவசாயம் செழிக்கும். இதனால், மாவட்ட மக்கள், வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்வது, அதிகளவில் தடுக்கப்படும். இத்திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த முடியாது என, என்னிடம் ஒப்படைத்தால், மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உமா பாரதி மூலம் நிதி பெற்று, என்னால் நிறைவேற்ற முடியும்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அகில இந்திய சம்மேளன தலைவர், கு.பாலசுப்ரமணியன் பேட்டி:
உச்ச நீதிமன்ற உத்தரவாலும், அரசின் கொள்கை முடிவாலும், 4,321 'டாஸ்மாக்' கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால், 20 ஆயிரம் டாஸ்மாக் பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர். பல்வேறு அரசு துறைகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. அந்த இடங்களில், டாஸ்மாக் பணியாளர்களை, அவர்களின் கல்வித்தகுதி அடிப்படையில் நியமிக்க, அரசாணை வெளியிட வேண்டும்.வி.சி., தலைவர் திருமாவளவன் அறிக்கை:
இலங்கை மீன்வளத்தை பாதுகாப்பதாகக் கூறி, தமிழக மீனவர்கள் குறித்து, கடல் தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் சட்டத்தில், இலங்கை அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இச்சட்டம், தமிழக மீனவர்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்படும். தமிழக மீனவர் பிரச்னையில், பிரதமருக்கு கடிதம் எழுதும் சடங்கை செய்துவிட்டு, மெத்தனமாக இருக்காமல், முதல்வர் நேரடியாகச் சென்று, பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.
தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு:
மத்திய அரசுக்கு, ஆட்சியை கலைக்கும் அதிகாரம் கிடையாது. ஆனால், வெங்கையா நாயுடு, தமிழக அரசை மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறார். புதுச்சேரி, மேற்கு வங்கம் உட்பட, பா.ஜ., ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு எல்லாம், மத்திய அரசு இடையூறு கொடுத்து வருகிறது. பா.ஜ., தான், தமிழக அரசை வழிநடத்துகிறது.'நல்லா காட்டுறாய்ங்க சீன்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
முதல்வர் பழனிசாமி அரசு, என்னுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். பா.ஜ.,விடம் நல்ல பெயர் வாங்குவதற்காகவே, தி.மு.க.,வை பன்னீர்செல்வம் வீணாக வம்புக்கு இழுக்கிறார். ஊழலில் ஒன்றாக திளைத்தவர்களுக்கு, தி.மு.க., மீது குற்றஞ்சாட்ட, எந்தத் தகுதியும் இல்லை. பொதுக்கூட்டங்களில் விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சல் இருந்தால், சட்டசபையில் பழனிசாமி அரசை விமர்சிக்க, பன்னீர்செல்வம் முன்வர வேண்டும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement