Advertisement

இயற்கை வளம் நிறைந்த நாடுகளின் தவிர்க்க முடியாத படிப்பு!

வனவியல் படிப்பு, வேலைவாய்ப்பு குறித்து கூறும், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனவியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய டீன், தீபக் ஸ்ரீவஸ்தவா: இந்தியாவில் பொது மற்றும் தனியார் வனங்களைப் பாதுகாப்பது, இயற்கை வளங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது போன்ற பணிகளைச் செய்யும் வகையில் உருவாக்கப்
பட்டது வனவியல் படிப்புகள்.கடந்த, 1985ல், இந்திய அளவில் வனவியல் படிப்பு துவங்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், பி.எஸ்சி., பாரஸ்ட்ரி படிப்பு அறிமுகப்படுத்தப் பட்டது.
இயற்கை காடுகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பதற்கும், தரிசு நிலங்களில் புதிய காடுகளை வளர்ப்பதற்கும், அதன் வழியாக கட்டுமானப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குமான தொழில்நுட்பங்களைப் பற்றியும் கற்றுத் தரும் படிப்பு இது. வனவியல் பட்டதாரிகளின் பணி, சவால் நிறைந்தது. வனம், வன வளம், வன விலங்குகளைப் பாதுகாப்பது, வன வளங்களைப் பராமரிப்பது, வனங்களையும் வளங்களையும் மேம்படுத்துவது போன்றவை, பிரதான பணிகள்.பி.எஸ்சி., வனவியல் - பாரஸ்ட்ரி, நான்காண்டு படிப்பு. இதில் சேர விரும்பும் மாணவர்கள், பிளஸ் 2வில், உயிரியலை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களில், மதிப்பெண் அடிப்படையில், கவுன்சிலிங் வழியாக சேர்க்கை நடைபெறும்.
தமிழகம், தென், வட மாநிலங்களில் பரவிக் கிடக்கும் வனங்கள், வனத் தொழிற்சாலைகள், வன விலங்கு சரணாலயங்களில் மாணவர்களுக்கு செயல்விளக்கம் கொடுக்கப்படும்.
பாரஸ்ட்ரி படித்த பட்டதாரிகள் யாரும், வேலையின்றி இருப்பதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு எழுதி, இந்திய வனத்துறை பணிகளில், ஐ.எப்.எஸ்., அதிகாரிஆகலாம். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை எழுதி, ரேஞ்ச் ஆபீசர் ஆகலாம். டி.என்.பி.எல்., போன்ற அரசு காகிதத் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு இருக்கிறது.அரசு வனத் துறையில் உயர் அலுவலர்கள், வனச்சரகர்கள், பிளான்டேஷன் மேனேஜர், நர்சரி மேனேஜர், பாரஸ்ட் புராடக்ட்ஸ் மார்க்கெட்டிங், பர்ச்சேஸ் மானேஜர் உள்ளிட்ட பல பணிகளுக்கு செல்லலாம்.
பி.எஸ்சி., பாரஸ்ட்ரி முடித்தவர்கள், எம்.எஸ்சி., பாரஸ்ட்ரி படிக்கலாம். கல்லுாரிகளில் விரிவுரையாளர் பணியில் சேரலாம். பெங்களூரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் வுட் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, டேராடூனில் உள்ள பாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற உயர் கல்வி நிலையங்களில், பிஎச்.டி., ஆய்வு செய்யலாம்.
நம்மை சுற்றிய வனங்களைப் படிப்பது என்பதை விட, எதிர்கால வாழ்க்கைக்கான இயற்கை வளங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது வனவியல் படிப்பு. எனவே, இந்தப் படிப்பு, இந்தியா போன்ற இயற்கை வளங்கள் நிறைந்த நாடுகளின் தவிர்க்க முடியாத படிப்பாக இருந்து வருகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement