Advertisement

இது உங்கள் இடம்

'லேபரை' காப்பாற்ற போராடுகின்றனர்!


ஆர்.சிவசுப்பிரமணியன், சிவகாசி, விருது நகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: 'ஆடி கார் வாங்க வழிவகுத்தோருக்கு ஒன்றுமில்லையே' என்ற தலைப்பில், இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.அதில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பணத்தில் கொழிக்கின்றனர்; ஆடி காரில் வலம் வருகின்றனர். தொழிலாளர்கள் சலுகைகள் ஏதும் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், ஜி.எஸ்.டி.,க்கு எதிராக போராடுவதை கிண்டலடித்தும் இருந்தார்.அன்பார்ந்த வாசகரே... பட்டாசு தொழில், நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. 'சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்துகிறது; ஒலி மாசு ஏற்படுத்துகிறது' என, சர்வதேச நிறுவனங்கள், 'கிளப்பி' விட்டதன் விளைவு, பட்டாசு விற்பனை மிகவும் குறைந்து விட்டது.தீபாவளி போன்ற நாட்களில், பட்டாசு வெடிப்பது இந்திய பண்பாடு. அதுவே, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இது, மிகவும் வருத்தமளிக்கிறது.அண்மையில், அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டத்தில், மிக அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. அப்போது, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படவில்லையா... அங்கு இல்லாத தடங்கல்கள், இந்தியாவில் மட்டும் வந்தது ஏன் என்பதை சிந்திக்க வேண்டும்.
சில பட்டாசு தொழிற்சாலைகளில், உரிய சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். அதை, அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், யாருக்கும் மாற்று கருத்து இல்லை. ஆனால், பொத்தாம் பொதுவாக, எந்த தொழிலாளர்களுக்கும் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்படவில்லை எனக் கூறுவது தவறு.சிவகாசியை சுற்றி, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம், பட்டாசு தொழில் தான். விவசாயம் நலிவடைந்ததால், விவசாய கூலித்தொழிலாளர்களே, பட்டாசு தொழிலாளிகளாக மாறிவிட்டனர்.சீனப் பட்டாசு வரவால், சிவகாசியில் தொழில் பாதிக்கப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி., 28 சதவீதம் எனில், இன்னும் நசியும்; நிறைய தொழிலாளர்களுக்கு வேலை போகும்; யதார்த்தம் புரியாமல், பட்டாசு ஆலை உரிமையாளர்கள் எல்லாம் பகட்டாக திரிவதாக எழுதியிருப்பது தவறு.
பட்டாசு ஆலை முதலாளிகள் போராடுவது, தொழிலாளிகளையும் காப்பதற்காக தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்!


கல்வி துறையில்ஏற்றத்தாழ்வுகள்நீங்க வேண்டும்!


அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: உலகில் சிறிய நாடான கியூபாவிற்கு, உலகின் சர்க்கரை கிண்ணம் என்ற பெயரும் உண்டு.உலகிலேயே அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடு. உலக வல்லரசான அமெரிக்காவையே, 'மோதிப் பார்' என, சவால் விட்டு வெற்றி பெற்ற நாடு.இங்கு ஆட்சி செய்து மறைந்த, பிடல் காஸ்ட்ரோ, அந்நாட்டை தனியார் பள்ளி, கல்லுாரிகளே இல்லாத நாடாக மாற்றியுள்ளார்.ஆறு வயது முதல், ௧௫ வயது வரை, கட்டாய இலவச கல்வி முறை அமலாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை வழங்கப்படுகிறது. 12 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் என்ற விகிதாசாரம் கடைபிடிக்கப்படுகிறது.கியூபாவில், 99.8 சதவீதம் படிப்பறிவு பெற்றோர் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடாக, கியூபா திகழ்கிறது; இது, வல்லரசு நாடுகளுக்கே, முன் உதாரண நாடாக விளங்குகிறது.இந்தியாவில், வசதி படைத்தோரின் குழந்தைகள் தரமான ஆங்கில பள்ளிகளில் படிக்கின்றனர்; பகட்டு சீருடையில் செல்கின்றனர்; குளிரூட்டப்பட்ட வகுப்பறையில், பாடம் நடத்தப்படுகிறது.அரசு பள்ளிகளில், 40க்கும் அதிகமான மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் பாடம் நடத்துகிறார். ஏழை மாணவன் என்றால், அரசு பள்ளி; பணக்கார மாணவன் என்றால், மெட்ரிக்குலேஷன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிப்பான்.கல்வியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் அறவே நீங்க வேண்டும்.ஜெயலலிதா போன்ற அரசியல்வாதிகளுக்கு, அப்பல்லோ மருத்துவமனையிலும், ஏழையாக பிறந்த குப்பனுக்கு, அரசு மருத்துவமனையிலும், சிகிச்சை பார்க்கும் நிலையும் மாற வேண்டும்.
கல்வி, சுகாதாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில், அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும். இத்துறைகளில், துளியும் லஞ்சம் இருக்கக் கூடாது. அந்நிலை வரும் நாளில், இந்தியாவும் கியூபா போன்று, கல்வியில் தன்னிறைவு பெற்ற நாடாக திகழும்!


மீண்டும் ஒரு'ஜாக்பாட்'காத்திருக்கிறது!


சி.துரைராஜ், நெல்லித்தோப்பு, புதுச்சேரி மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா மறைவாலும், கருணாநிதி சுகவீனத்தாலும், தமிழக அரசியலில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.பலருக்கும், முதல்வர் ஆசை வந்து விட்டது. ஜெயலலிதா இருந்த வரை, வாய் திறக்காத, அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட பலரும், வாய்கிழிய அறிக்கை விட ஆரம்பித்து விட்டனர்.அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க, ஏதாவது ஒரு துரும்பு சீட்டு கிடைக்காதா என ஏங்குகிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்.அவரது நீண்ட நாள், எதிர்கால ஆசையுமே, முதல்வர் ஆக வேண்டும் என்பது தான்; வாய்ப்புக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கிறார்.
கடந்த கால தேர்தல்களில், டிபாசிட் கிடைக்காத கட்சியெல்லாம், கூட்டணிக்கு குறி வைத்து முதலிடத்தில் இருக்கிறது.தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப் போவது யார்... கட்சி தலைவர்களா அல்லது திரைப்பட துறையைச் சேர்ந்த நடிகர்களா என்ற வாதம் எழுந்துள்ளது.இந்திய அரசியல் வரலாற்றில், இதுவரை இல்லாத அதிசய காட்சிகள், வரும் சட்டசபை தேர்தலில் நடந்தாலும் நடக்கும்!யாரும் எதிர்பாராத வகையில், திரைப்படத் துறையைச் சேர்ந்த, ரஜினி, கமல் உள்ளிட்ட பலரும் அரசியல் பிரவேசம் செய்வர்; அரசியல் கட்சி பிரபலங்கள் பலர், கட்சி மாறி கட்சி தாவுவர்.
கூட்டணிக்கு குறி வைத்து, கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் பல அரிய நிகழ்ச்சிகளும் நடக்கக்கூடும். இதுவரை, மக்கள் பார்க்காத மகத்தான சட்டசபை தேர்தல் வரப்போகிறது.தமிழகத்தில், இன்று குடிநீருக்கு தான் பஞ்சம்; ஆனால், பணத்திற்கு அல்ல! கோடி கோடியாய் பணத்தை அள்ளி வீசும், அற்புதமான சட்டசபை பொதுத் தேர்தல் கூடிய விரைவில் வரலாம்.
ஓட்டளிக்கும் வாக்காளர்களுக்கு, 'போதும் போதும்' என சொல்லுமளவிற்கு, வேட்பாளர்கள் வாரி வாரி பணத்தையும், இலவசங்களையும் வழங்கும் நேரம் நெருங்குகிறது.
அதிசய தேர்தலில், தமிழகத்தின் முதல்வரை தேர்ந்தெடுக்க போகும் வாக்காளர்களுக்கும்,'ஜாக்பாட்'டும் அடிக்கப் போகிறது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement