Advertisement

'டவுட்' தனபாலு

மத்திய இணையமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன்: கோடநாடு பங்களா மர்மம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்.


டவுட் தனபாலு: கோடநாடு பங்களா மர்மமே, ஜெ., மரணத்தின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கப்படுது... ஜெ.,வுடன் கடைசி வரை இருந்த, அ.தி.மு.க.,வினரே, அவரின் மரணம் குறித்து விசாரணை கேட்கும் நிலையில், நீங்க ஏன் அதை வலியுறுத்த மாட்டேங்குறீங்க... இது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!


முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
முதல்வரும், ஸ்டாலினும் புதிய கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகின்றனர். மக்கள் மன்றத்திற்கு வரும் போது, இருவரும் விரட்டி அடிக்கப்படுவர்.




டவுட் தனபாலு: எம்.எல்.ஏ.,க்கள் யாருமில்லாதவர்கள் தான், எதற்கு எடுத்தாலும் மக்கள் மன்றத்தை இழுப்பாங்க... உங்களுக்குத் தான், 11 பேரின் ஆதரவு இருக்கே... முதல்வர் - ஸ்டாலின் கூட்டை, சட்டசபையிலேயே அப்பட்டமாக்க வேண்டியது தானே... போற போக்கில், சசிகலா உங்க மீது வைத்த குற்றச்சாட்டுக்கும், இப்போ நீங்க பழனிசாமி மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கும், என்ன வித்தியாசம் இருக்குங்கறது தான், என்னோட, 'டவுட்!'



தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்:
அதிருப்தியில் இருக்கும், அ.தி.மு.க., தொண்டர்கள், காங்கிரசில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

டவுட் தனபாலு: 'அதிருப்திகளின் மொத்த உருவமே, காங்கிரசில் தான் இருக்கு... எந்த ஒரு விஷயத்திலும், ஆளுக்கு ஒரு திசையில் பயணிப்பீங்க...அப்படிப்பட்ட கட்சியில் நாங்க சேர்ந்து, தேர்தல் நேரத்தில், தி.மு.க.,விடம் சரணாகதி அடைவதற்கு, நேரடியாகவே நாங்க அங்க போயிட மாட்டோமா... எதுக்கு தலையைச் சுத்தி மூக்கை தொடப் போறோம்'னு, அ.தி.மு.க., தொண்டர்கள், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement