Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் அறிக்கை: தமிழுக்கு, செம்மொழி அந்தஸ்தை, கருணாநிதி பெற்று தந்தார். செம்மொழியான தமிழுக்கு, ஒரு ஆய்வு நிறுவனத்தை, தமிழகத்தில் உருவாக்கவும் முயற்சித்தார். மைசூரில் இருந்து, 2007ல், சென்னைக்கு, அது கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசின் கீழ் இயங்கும், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் ஒரு, தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனம். அது, தமிழாய்வுகளை மேற்கொண்டு, நுால்களை வெளியிட்டு வருகிறது. என்றாலும், அதை, திருவாரூர் மத்திய பல்கலையில், ஒரு பிரிவாக சுருக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதை, தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி விட்டு, நீதிமன்றத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தான் வறட்சி உள்ளது என, கூறி உள்ள தமிழக அரசின் செயல் கண்டிக்கத் தக்கது.
தற்போது, விவசாய கடன்களை வசூலிக்கவோ, 'ஜப்தி' செய்யவோ கடுமை காட்டக்கூடாது என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அரசு செயல்பட்டு, விளைபொருட்களுக்கு, நல்ல விலை நிர்ணயம் செய்தாலே, விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும்.

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளின், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான, மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, மாநில அரசுகள் நடத்தக்கூடாது எனவும், மத்திய அரசின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குனர் அலுவலகம் தான் நடத்தும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விதிமுறையால், தமிழக மாணவர்களுக்கான, 50 சதவீத இடங்கள் செல்லாததாகி விடும். அதனால், தமிழக அரசு, தன் உரிமையை மீட்க போராட வேண்டும்.

'எப்பவுமே சம்பிரதாயமா, இந்த மாதிரி ஒரு கோரிக்கை, வலியுறுத்தலை வச்சுட்டு
ஒதுங்கிடுறீங்க... இலங்கை அரசுக்கு எதிரா, உறுதியான நடவடிக்கை எதையுமே
உங்களுக்கு எடுக்க தெரியாதா...' என கேட்க தோன்றும் வகையில், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி:
தமிழக மீனவர்கள் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுகுமாறு, மத்திய அரசு, இலங்கை அரசை வற்புறுத்தி உள்ளது. ஆனால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்தால், அபராதம், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என, இலங்கை அரசு கூறி உள்ளது. இது, ஏற்புடையது அல்ல.

'ஒரு கட்சியின் மாநில தலைவரா இருந்துட்டு, எதிரணி வரிசையில இருக்கிற மாற்று கட்சி வலிமை பெறணும்னு, உங்களை மாதிரி, 'தாய்' உள்ளத்தோடு, எந்த கட்சி தலைவருமே யோசிச்சிருக்க மாட்டாங்க...' என கூற தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேச்சு:
ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின், அ.தி.மு.க.,வின் பிளவுபட்ட அணிகள் ஒன்றிணைவதற்கான பேச்சு நடந்தது. அந்த முயற்சியை கலைக்கக் கூடாது என்பதால், அ.தி.மு.க.,வினரை காங்கிரசுக்கு அழைக்கவில்லை. தற்போது, அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, அதிருப்தியில் இருக்கும், அ.தி.மு.க., தொண்டர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement