Advertisement

இது உங்கள் இடம்

அடிச்சுவடி படிப்போருக்கு அருமை தெரியுமா?

வீ.ராஜகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல, பிரதமர் மோடி தலைமையிலான, மத்திய அரசு படாத பாடுபட்டு வருகிறது.
அவரது செயலுக்கும், சிந்தனைக்கும் மகுடம் வைத்தாற்போல், நாடெங்கும் ஒரே சீரான வரி விதிப்பு முறையான, ஜி.எஸ்.டி., ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வந்து விட்டது.
புதிய வரி விதிப்பால், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக அதன் தாக்கம் தெரியும். குறிப்பாக, பொருளாதார வளர்ச்சியில், வளர்ந்த நாடுகளுக்கு இணையாக முன்னேற அதிக வாய்ப்புள்ளது.
ஜி.எஸ்.டி., வரி முறையில் முக்கியமாக, எப்.டி.ஐ., எனப்படும், அன்னிய முதலீட்டு திட்டங்கள், ஒரு வரி விதிப்பு முறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், முதலீடுகள் அதிகமாகி, எல்லா மாநிலங்களிலும் பரவலாக்கப்படும் நிலை உருவாகும்.
இதுவரை, பல முனை வரி செயல்பாட்டால், குழம்பி இருந்த அன்னிய முதலீட்டாளர்களுக்கு, ஒரு புரிதல் ஏற்பட, இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. வேளாண் குடிமக்களுக்கு, உரம், டிராக்டர், விவசாய, உதிரி பாகங்கள் ஆகியவற்றுக்கு, 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது. இது, மிக ஆறுதலானது.
விவசாய கொள்முதலுக்கு நல்ல விலை நியாயமாக கிடைக்கும் பட்சத்தில், அவர்கள் வாழ்வாதாரம் உயர வாய்ப்புண்டு. முக்கியமாக, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறையில், குடியிருப்பு கட்டுமான செலவீனங்கள் குறையும்; வீடுகளின் விலையும் குறையும். இத்துடன், ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை சட்டமும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இது போன்ற எண்ணற்ற சிறப்பு அனுகூலங்கள், ஜி.எஸ்.டி., ஒருங்கிணைந்த வரி விதிப்பில் உள்ளது; அதன் பயனை வெகு விரைவில் மக்கள் உணர்வர்.புதிய வரி திட்டத்தின் அடிப்படையின் பயனை நன்குணர்ந்திருந்த போதும், வெறும் வெற்று பேச்சிற்காக, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன; ஜி.எஸ்.டி., அறிமுக விழாவையும் புறக்கணித்தன.எதிர்க்கட்சிகளால் நாட்டிற்கு நஷ்டமில்லை. அவர்களுக்கு உள்ள ஒரே சிந்தனை, மோடியும், மத்திய அரசும், திட்டத்தின் வெற்றியில் பயனடைகின்றனரே என்பது தான்.
அரசியலில் இன்னமும் அடிச்சுவடி படித்து வரும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுலுக்கு, இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் தெரியவில்லை போலும்! அவரது அறிக்கையை எல்லாம், மக்கள் அறவே புறம் தள்ள வேண்டும்!

கல்வி புரட்சிக்குஒத்துழைப்பு தேவை!

நா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
காங்கிரஸ் ஆட்சிக்கு பின், 1967 முதல், இன்று வரை, பள்ளிக் கல்வித் துறையில் தொடர்ந்து ஏமாற்றங்களையே சந்தித்து வந்தது, தமிழகம்.
திராவிட கட்சிகளின், 50 ஆண்டு கால ஆட்சிகளில், பள்ளிக் கல்வித் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை.
ஆனால், இன்று, பழனிசாமி தலைமையிலான, அ.தி.மு.க., அமைச்சரவையில், கல்வித் துறை பொறுப்பேற்று இருக்கும், அமைச்சர் செங்கோட்டையன் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்; அவருக்கு, பக்கபலமாக பள்ளி கல்வித் துறை செயலர் உதயசந்திரனும் செயல்படுகிறார்.
சட்டசபையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதில் அளித்த, அமைச்சர் செங்கோட்டையன், 'பள்ளிக் கல்வித் துறையில் இன்னும் நிறைய மாற்றம் வரும்' என கூறியுள்ளார்; இது வரவேற்கக் கூடியது.
பிளஸ்2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிட்டதில், முதன் முறையாக, மாநில, மாவட்ட அளவிலான, 'ரேங்க்' பட்டியல் ரத்து செய்யப்பட்டது.
அரசுப் பள்ளிகள் எல்லாம், செங்கோட்டையன் காலத்தில், எல்லா வகைகளிலும் தன்னிறைவு பெற வேண்டும். தமிழகத்தின் எதிர்காலம் பள்ளிக் கல்வியில் தான் உள்ளது என்பதை சமுதாயம் உணர வேண்டும்.
தேசிய அளவில், தமிழகம் எல்லா வழிகளிலும் முன்னேற்றம் பெற வேண்டும். தேசிய, உலக அளவிலான போட்டித் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றி பெற வேண்டும்.
எத்தனையோ கல்வி அமைச்சர்களை, திராவிட ஆட்சியில் தமிழகம் கண்டுள்ளது. செங்கோட்டையன் காலம், பள்ளிக் கல்வியின் பொற்காலம் என்ற பெயர் நிலை பெற வேண்டும்.
தனியார் பள்ளிகளை தவிர்த்து, அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு பெற்றோர் மனதிலும் எழ வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியர்களும், தங்கள் கடமைகளை உணர்ந்து, செவ்வனே பணியாற்ற வேண்டும். இதுவெல்லாம் நடந்தால், நிச்சயம் மாநில கல்வித் துறையில் புரட்சி ஏற்பட்டு விடும்.
'ஏழைகள் கல்வியில் உன்னத நிலையை அடைய வேண்டும்' என்ற காமராஜரின் கனவு எதிர்காலத்தில் நிஜமாக வேண்டும். கல்வி நிறைந்த மாநிலமாக, தமிழகம் வளர வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்!

அதிகப்படியானஅபராதம் விதிக்கணும்!

கோ.மங்கையர்க்கரசி, கடலுாரிலிருந்து எழுதுகிறார்:
நாங்கள் வசிக்கும் பகுதியில், பெரும்பாலான வீடுகளில், பிரிஜ், மின் மோட்டார், மிக்சி, மின் விசிறி, அயர்ன் பாக்ஸ் போன்ற மின்சாரத்தில் இயங்கும் பொருட்களின் பயன்பாடு அதிகம்.
ஜூனில் எடுத்த மின் கணக்கெடுப்பில், எங்கள் வீட்டு மின் கட்டணம், 4,300 ரூபாய் வந்துள்ளது. அதுபோல், சில வீடுகளில், 3,000 - 4,000 - 5,000 ரூபாய் என, மின் கட்டண ரசீது வந்துள்ளது.
ஆனால், சில வீடுகளில், பிரிஜ், மிக்சி, கிரைண்டர், மின் மோட்டார், மின் விசிறி, அயர்ன் பாக்ஸ், 'ஏசி' போன்ற மின்சாதன பொருட்களை அதிகமாக பயன்படுத்தியும், மின் கட்டணம், 50 - 100 - 200 - 300 ரூபாய் என, மிக மிக குறைவாக வந்து உள்ளது.
இதுபற்றி, சம்பந்தப்பட்ட மின்சார உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொண்டோம். 'பார்க்கிறோம், விசாரிக்கிறோம்' என, ஒரே வரியில் பதில் கூறினர்.
இதுபற்றி நாங்கள் விசாரித்த வகையில், அதிர்ச்சியூட்டும் விதத்தில் தகவல் கிடைத்தது...
மின் திருட்டை சுருக்கமாக, 'பைபாஸ்' என்று அழைக்கின்றனர். அதாவது, மின் கம்பத்தில் இருந்து வரும் மின் ஒயர், மின் மீட்டருக்கு வராமல், நேரடியாக இணைப்பு எடுத்து வீட்டில் படுக்கை அறை, சமையல் அறை, ஆகியவற்றில், 'பிளக் பாயின்ட்' வைத்து, திருடுகின்றனர்.
இதுபோன்ற மின்சார திருட்டு பல இடங்களில் நடக்கிறது.
சமீபத்தில், மணலுார் என்ற பகுதியில், அரசு ஊழியர் ஒருவர் வீட்டில் நடந்த மின் திருட்டை கண்டறிந்து, மின் வாரிய அதிகாரிகள் அபராதம் விதித்தனர். இதுபோல், பல இடங்களில் மின் திருட்டு, 'பைபாஸ்' முறையில் நடப்பதாக தெரிகிறது.
மின்சார வாரியம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுகின்றனர். மின் திருட்டு செய்வோரை கண்டறிந்து, கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்தால், நஷ்டத்தை தவிர்க்கலாம்.
மின் திருட்டில் ஈடுபடுவோருக்கு, மிக அதிகப்படியான அபராதம் விதிக்க வேண்டும். உடனடி நடவடிக்கை எடுக்குமா, தமிழ்நாடு மின்சார வாரியம்?

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement