Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: மத்திய அரசு, சமஸ்கிருத, ஹிந்தி மொழி திணிப்பை தீவிரப்படுத்தி வருவதுடன், தொன்மை சிறப்புமிக்க தமிழ் தேசிய இனத்தின் மொழி, இன மற்றும் பண்பாட்டு அடையாளங்களைச் சிதைப்பதற்கான வேலைகளில் இறங்கி உள்ளது. தற்போது, தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தைச் சீர்குலைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன், தமிழ் செம்மொழி உயர் ஆய்வு நிறுவனத்தை இணைக்கும் முடிவை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையேல், ஜல்லிக்கட்டுக்காக நடந்ததைப் போல், தமிழகம் பொங்கி எழுந்து போராடும்.தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
'மது இல்லாத தமிழகத்தை படிப்படியாக உருவாக்குவோம்' என்ற, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொள்கையை நிறைவேற்றுவதை, தமிழக அரசு கடமையாகக் கருத வேண்டும். குடியிருப்பு பகுதிகளில், மதுக்கடைகள் திறக்கும் முடிவை கைவிட்டு, சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.


பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: பல திரையரங்குகள், சொந்தமாக இணையதளம் வைத்து, ஒவ்வொரு டிக்கெட்டுக்கும், ௩௦ முதல், ௪௦ ரூபாய் வரை முன்பதிவு கட்டணமாக வசூலிக்கின்றன. இவ்வாறு, பல வழிகளில் ரசிகர்களின் பணத்தைப் பிடுங்கும் திரையரங்குகள், தற்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழக அரசு உடனடியாக, கேளிக்கை வரியை ரத்து செய்வதுடன், திரையரங்குகள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.


மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கையா நாயுடு பேட்டி:
ஜி.எஸ்.டி., வரி விதிப்பை நோக்கிய உருமாற்றத்தால் ஏற்பட்டு வரும் நன்மைகளைக் குலைக்க, சிதம்பரம் விரும்புகிறார். காங்., கட்சி, இந்த வரி விதிப்பை கண்மூடித்தனமாக எதிர்க்காமல், அதுதொடர்பான ஆக்கபூர்வமான யோசனைகளைத் தெரிவிக்க முன்வர வேண்டும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு, அவசரகதியில் அமல்படுத்தப்படவில்லை; பல்வேறு தரப்பினருடன், ௧௭ ஆண்டுகள் விவாதிக்கப்பட்ட பின்னே அமலாகியுள்ளது.'மாநில அரசுகள், மத்திய அரசுடன் ஒத்துப் போகலேன்னா, இந்த கதி தான் நேரும்' புதுச்சேரி மக்கள் சொன்னால் என்ன செய்வீர்கள் எனக் கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் அறிக்கை:
மத்திய அரசு, மாநிலங்களில் உள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை மதிக்க வேண்டும். அரசியல் சட்டம் வழங்கியுள்ள, மாநில அரசின் அதிகாரங்களில், எதேச்சதிகாரமாக அத்துமீறல் செய்து, ஆக்கிரமிக்கக் கூடாது. புதுச்சேரி, மேற்கு வங்கம், டில்லி போன்ற மாநிலங்களில், கவர்னரை வைத்து மாநிலத்திற்குள் தனி அரசாங்கம் நடத்தும் போக்கை, மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தம்பி ஸ்டாலின் மீது, அரசியலைக் கடந்து எனக்கு பாசமுண்டு. முன்பு, அவரை துணை முதல்வராக்க வேண்டும் என, கருணாநிதியிடம் நான் தான் பரிந்துரை செய்தேன். ஆனால் தற்போது, 89 உறுப்பினர்களுடன் வலிமையான எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ஸ்டாலின், சட்டசபையில் முத்திரை பதிக்கவில்லை. வெளிநடப்பு செய்வதும், சட்டசபைக்கு வெளியே மறியல் என்ற பெயரில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதும், சட்டையைக் கிழித்து போஸ் கொடுப்பதும் மட்டுமே, எதிர்க்கட்சி தலைவரின் வேலை இல்லையே?


வி.சி., கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு:
ஒரே வரி, ஒரே தேசம் அடிப்படையில் தான், ஜி.எஸ்.டி., உருவாக்கப்பட்டது. ஒரே கலாசாரம், ஒரே நாடு அடிப்படையில் தான், மாட்டிறைச்சி நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஒரே கல்வி, ஒரே தேர்வு அடிப்படையில் உருவாக்கப்பட்டது தான், 'நீட்' தேர்வு. இப்படி, அதிகாரத்தை மிகைப்படுத்தி, எதேச்சதிகாரத்தை நிலைநாட்ட, மத்திய அரசு முயல்கிறது.


தி.மு.க.,வைச் சேர்ந்த, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா பேச்சு:
தமிழர்கள் எங்களை எவ்வளவு தான் விரட்டினாலும், உங்களை விட்டு விலகிச் செல்ல, நாங்கள் ஒன்றும் தெரு நாய்கள் அல்ல; தி.மு.க., உங்கள் வீட்டு நாய். தமிழகத்தின் வாசலில் உட்கார்ந்து, பகையோர் அண்டிடாத வகையில் காவல் காப்போம். பார்லிமென்டிலோ, கோர்ட்டிலோ, இந்த ராஜா என்றுமே பொய் பேசியதில்லை. உண்மை வழியில் மட்டுமே நான் செல்வதால், என் விஷயத்தில் எதையும், யாராலும் எதிர்மறையான தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை.
மனித நேய ஜனநாயக கட்சி பொதுச்செயலர், தமீமுன் அன்சாரி எம்.எல்.ஏ., பேட்டி:
அ.தி.மு.க.,வின் மூன்று அணிகளுமே, பா.ஜ.,விடம் சரணடைந்து விட்டன. இந்த ஆட்சி, ஐந்து ஆண்டுகளை நிச்சயம் பூர்த்தி செய்யும். ஆட்சியை கலைத்தால், அடுத்து, தி.மு.க., தான் வரும் என்பதும், பா.ஜ.,வுக்கு தெரியும். தி.மு.க., ஆட்சிக்கு வருவதை, பா.ஜ., ஒரு காலத்திலும் விரும்பாது. எனவே, பா.ஜ., ஆட்சியை கலைக்காது.'வாங்கய்யா... வாங்க... நீங்க நாலு வார்த்தை உதிர்த்தீங்கன்னா தான், மத்தவங்க காமராஜர் பத்தி பேசுவாங்க... அந்த நிலைல தான் இங்கே கட்சிக்காரங்க இருக்காங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., துணை தலைவர் ஞானதேசிகன் அறிக்கை: கல்வித்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சியை, அமைச்சர் செங்கோட்டையன் எடுத்து வருவது, மகிழ்ச்சி அளிக்கிறது; பாராட்டிற்குரியது. காமராஜர் வாழ்க்கை வரலாறை, பாடத்திட்டத்தில் சேர்ப்பதும், அவரது பெயரில் மாணவ, மாணவியருக்கு, விளையாட்டுப் போட்டி நடத்துவதும் சாலச் சிறந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement