Advertisement

இது உங்கள் இடம்

சினிமாகாரர்கள் ஆதிக்கம் குறையணும்!


என்.வைகை வளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், காமராஜருக்கு பின், உருப்படியான தலைவர்கள் கிடைக்கவில்லை. அவருக்கு பின், சினிமா, நாடகங்களில் நடித்தோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, முதல்வர் பதவியில் அமர வைத்து, தமிழக மக்கள் அழகு பார்த்தனர்.அந்த வரிசையில், அண்ணாதுரையும், கருணாநிதியும் சிறந்த வசனகர்த்தா என்ற கோட்டாவில், முதல்வர் ஆயினர். 'ஹீரோ' என்ற கோட்டாவில், எம்.ஜி.ஆரும், 'ஹீரோயினி' என்ற கோட்டாவில், ஜானகியும், ஜெயலலிதாவும் முதல்வராகினர். முதல்வர் பதவி ஆசையில் களம் இறங்கிய நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி தலைவர் பதவி வரை வந்தார்.தமிழக அரசியல் வரலாற்றை, ௧௯௬௭க்கு பின் புரட்டி பார்த்தால், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி, ௫௦ ஆண்டுகளாக ஆட்சி செய்துள்ளன. சினிமா துறையைச் சேர்ந்தோர், அரசியலில் இவ்வளவு ஆண்டு பிரவேசித்துள்ளனர் என்பதற்கு, தமிழகம் முன்னோடியாக உள்ளது.
இவர்களில், நெடுஞ்செழியன், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி மட்டும் தான் விதிவிலக்கு; சினிமாவில் இல்லாமல் முதல்வராக பொறுப்பேற்ற முழு நேர அரசியல்வாதிகள், அண்ணாதுரை மறைவிற்கு பின், நெடுஞ்செழியன் சில நாட்கள் மட்டுமே பொறுப்பு முதல்வராக இருந்தார்.
கடந்த, ௫௦ ஆண்டு வரலாற்றில், பன்னீரும், பழனிசாமியும் தான், சில மாதங்கள் வரை முதல்வராக நீடித்து உள்ளனர். ஜெயலலிதா மறைவால், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், முதல்வர் என்ற அதிர்ஷ்ட தேவதை, இவர்களை ஒட்டி கொண்டுள்ளது.
அந்த ரேசில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவும், சிறைக்கு சென்று ஜாமினில் வெளிவந்த தினகரனும் பங்கேற்க முயன்றனர். ஆனால், வழக்குகளில் சிக்கியதால், அவர்களுக்கு முதல்வர் பதவி கானல் நீராகி விட்டது. பதவியை பெற முடியாவிட்டாலும், பழனிசாமியை இயக்கும், 'ரிமோட்'டாக இன்று வரை, சசிகலாவும், தினகரனும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இவர்களை விட்டு, பழனிசாமியை பிரிக்க, பன்னீர்செல்வம் படாதபாடு படுகிறார். ஆனால், முதல்வர் பழனிசாமி, தன் பதவியை இழந்து விடக் கூடாது என்பதில் மிக கவனமாக செயல்படுகிறார்.
தமிழக அரசியலில், சினிமாகாரர்கள் தலைமையில் செயல்படாத ஒரு அரசாக விளங்குவதை பாராட்டியே தீர வேண்டும். இதே நிலை இனியும் தொடர வேண்டும்!


'டிவி' விவாதம்ஆளும் கட்சிஅந்தர் பல்டி!


செ.சிவசுப்பிரமணியன், சென்னையிலிருந்து எழுது கிறார்: தனியார், 'டிவி' விவாதங்களில், மாற்று கட்சியினர் கேட்கும் கேள்விகளுக்கு, ஆளும் கட்சி, வி.ஐ.பி.,க்கள் அந்தர் பல்டி அடிக்கும் வகையில் பதில் அளிப்பது வியப்பில் ஆழ்த்துகிறது.
'ஜெயலலிதா உயிருடன் இருந்த போது, அ.தி.மு.க., கடுமையாக எதிர்த்த மத்திய அரசு திட்டங்களை, நீங்கள் இப்போது ஏன் ஏற்று கொள்கிறீர்கள்?' என்ற கேள்வியை ஒரு அரசியல் பிரமுகர் கேட்டார்.
அதற்கு, ஆளும் கட்சி, வி.ஐ.பி., ஒருவர், 'மத்திய அரசு, நல்ல பல திட்டங்களை அறிவுறுத்தி நடைமுறை படுத்தியது. அதை ஏற்றுக் கொண்டால் தான், தமிழகம் முன்னேற்றம் அடையும்; இல்லாவிட்டால், மிகவும் பின் தங்கி விடும்' என்றார். இது, கேட்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது.
'டிவி' விவாதங்களில், ஆளும் கட்சி தரப்பினர் வைத்த வாதங்களில் சில...
* மத்திய அரசின் உதய் மின் திட்டத்தால், கோடை காலத்தில், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை. மத்திய அரசு, 9,500 கோடி ரூபாய் கடன் கொடுத்ததால், தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைய திட்டங்களை, தமிழக மக்களுக்காக செய்து கொண்டு இருக்கிறது
* மருத்துவத்துக்கு, 'நீட்' தேர்வு வந்த பின் தான், தமிழக அரசு நிறைய மாற்றங்களை செய்து வருகிறது. மாணவர்களுக்கு, இது மிக மிக நன்மையானது. எல்லா போட்டி தேர்வுகளிலும், தமிழக மாணவர்கள் முதலிடம் பிடிப்பர் என்பதில் சந்தேகமே இல்லை. தனியார் மருத்துவ கல்லுாரிகளிலும், பல லட்சங்களை கட்டாமல் படிக்கலாம்
* துறைமுக மேல்மட்ட சாலை, தமிழகத்துக்கு எவ்வளவு நன்மை என்பது, போக போகத்தான் தெரியும். ஏற்றுமதி, இறக்குமதி தமிழகத்திலிருந்து பல மடங்கு அதிகரிக்கும்; வேலைவாய்ப்புகள் பெருகும்
* 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், மக்களுக்கு குறைந்த விலையில் வீடுகள் தரப்படும். வீட்டு கடனுக்கு வட்டி குறைக்கப்படும். வீடு வாங்கினால், இரண்டு லட்சத்துக்கு மேல் அரசு மானியம் கிடைக்கும். இவை, தமிழக மக்களுக்கு மிக மிக பயன் உள்ள திட்டங்கள்.
இன்னும் நிறைய நல்ல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தியபடி இருக்கிறது.
இதை எல்லாம், மாநில அரசு ஒருபோதும் எதிர்க்காது என்பது தான், ஆளும் கட்சி, வி.ஐ.பி.,க்களின் வாதமாக இருக்கிறது. இதே நிலை நீடித்தால், எஞ்சியுள்ள ஆட்சி காலத்தையும், அ.தி.மு.க.,வால் நிச்சயம் நிறைவு செய்ய முடியும்!

டில்லி கலாசாரம்தமிழக மண்ணில்மறைந்தது ஏனோ?


எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வட மாநில அரசியல்வாதிகளிடம் ஒரு பழக்கம் உண்டு...என்ன தான் எதிரெதிர் துருவங்களில் இருந்தாலும், பொது இடங்களில் சந்தித்தால் ஒருவருக்கொருவர் நலம் விசாரிப்பர். அதுபோல், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளிலும் சந்தோஷமாக கலந்து கொள்வர்.
தமிழக அரசியல்வாதிகளோ, ஒரே கட்சியில் இருந்தாலும், 'குரூப் பாலிடிக்ஸ்' கடை பிடிப்பர். ஒருவருக்கொருவர் சந்திக்க நேர்ந்தால், முகத்தை திருப்பிக் கொள்வர்.தேர்தல் நேரங்களில், வேட்பாளராக நிற்பவர், எக்கட்சி சார்பில் நின்றாலும், ஓட்டுப் போடத் தகுதியுள்ள வாக்காளர்கள் யாரை கண்டாலும், கையெடுத்துக் கும்பிட்டு ஓட்டு கேட்பர்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், ராம்நாத் கோவிந்தும், மீரா குமாரும், ஓட்டு சேகரிப்பதற்காக, சமீபத்தில் சென்னை வந்தனர்.ராம்நாத் கோவிந்த், அ.தி.மு.க.,வினரை சந்தித்து ஆதரவு கோரினார். அவர் ஆதரவு கேட்காவிட்டாலும், அ.தி.மு.க.,வினரின் ஓட்டுகள் அனைத்தும், அவருக்கே என்பது வெளிப்படை.அதேபோல், மீரா குமாரும், கருணாநிதியின் வீடு சென்று ஆதரவு கேட்டார். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளிக்க, கட்சி கட்டுப்பாடு என, எதுவும் கிடையாது.ராம்நாத் கோவிந்த், ஸ்டாலினையும், மீரா குமார், அ.தி.மு.க.,வினரையும் சந்தித்து ஓட்டு கேட்டால், எங்கே என்ன குறைந்து விடப் போகிறது...
அது ஒரு புதிய கலாசாரத்தை தோற்றுவித்திருக்கும். அதிலும், மீரா குமார், மன சாட்சிப்படி ஓட்டளிக்கும்படி கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்.ராம்நாத் கோவிந்தும், மீரா குமாரும் எதிரணியினரையும் சந்தித்து ஆதரவு கோரி இருந்தால், ராம்நாத் கோவிந்தைப் பிடிக்காத, அ.தி.மு.க.,வினர் மீரா குமாருக்கும், மீரா குமாரை ஏற்காத, தி.மு.க.,வினர் ராம்நாத் கோவிந்துக்கும்
ஓட்டளிப்பர்.டில்லியில் இருக்கும் போது பின்பற்றும் கலாசாரத்தை, ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவரும், தமிழக மண்ணில் காலடி எடுத்து வைத்ததும் மறந்து தொலைத்தது ஆச்சரியமாக உள்ளது!


நாடக சபாக்கள் அழிந்ததெல்லாம் தெரியாதா!

ஆ.சிவமணி, புன்செய்ப்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டத்திலிந்து எழுதுகிறார்: 'தமிழக அரசின், ௩௦ சதவீத வரியுடன், மத்திய அரசின், ஜி.எஸ்.டி., வரியும் சேர்ந்து கொண்டால், எங்களால் தாங்க முடியாது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளையும் காலவரையற்ற முறையில் மூடுகிறோம்' என, தமிழ் திரைப்பட வர்த்தக சபை தலைவர், அபிராமி ராமநாதன் கூறினார்; அவரது அறிவிப்புக்கு சபாஷ் போடலாம்.
'மத்திய, மாநில அரசுகள், வரி விதிப்பை குறைக்கும் வரை, போராட்டத்தை தொடர்வோம்' என, அறிவித்தார். ஆனால், நான்கு நாட்களில் போராட்டத்தை வாபஸ் பெற்று விட்டார். திரையரங்குகளை ஒரு நாள் பூட்டியதால், 15 கோடி ரூபாய் நஷ்டமாம்; அப்படி பார்த்தால், நான்கு நாட்களில் மக்கள் பணம், 6௦ கோடி ரூபாய் தப்பியுள்ளது.திரையரங்குகள் மூடப்படுவதால், நாட்டில் தேனும், பாலும் ஓடுவது குறைய போவதில்லை. பசி, பஞ்சம், பட்டினி எதுவும் வராது. மழை பொய்த்து போகாது. மக்கள் உணவு கிடைக்காமல், மக்காச்சோளம் சாப்பிடும் நிலை வராது; தொழில் துறை நசிந்து போகாது.மாறாக, மின்சாரம் மிச்சமாகும். மக்கள் தங்கள் வேலைகளை செவ்வனே செய்வர். ஒரு சராசரி நான்கு பேர் உள்ள குடும்பம், ஒரு மாதம் இரண்டு சினிமா பார்த்தால், ௧,௦௦௦ ரூபாய் செலவு ஏற்படும்.அதில், ௫௦௦ ரூபாய்க்கு குழந்தைகளுக்கு நல்ல உணவுகளை வாங்கி தந்து, மீதி, ௫௦௦ஐ தபால் அலுவலகத்தில், ஆர்.டி., முறையில் பணம் போட்டால், ௬௦ மாதங்களில், ௪௦ ஆயிரம் ரூபாயை தாண்டிவிடும்.கேரள நடிகர் ஒருவர் கூறியது போல், மக்கள் சினிமா துறையிலிருந்து தம்மை ஆள்பவரை தேர்ந்தெடுக்கும் நிலை வராது. கடந்த, ௫௦ ஆண்டுகளுக்கும் மேலாக, இதே சினிமாத் துறையை சேர்ந்தவர்கள் தான் அரசை ஆளுகின்றனர்.இனி, அப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டுமானால், மக்கள் சினிமா மோகத்தில் இருந்து விடுபட வேண்டும்; அதற்கு இந்த காலவரையற்ற திரையரங்கு மூடல் போராட்டம் பயன்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நான்கு நாட்கள் கூட தாக்குப்பிடிக்க முடியாமல், திரையரங்குகள் திறக்கப்பட்டுஉள்ளன.இந்த தொழிலை நம்பி, ௧௦ லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன என, ஆதங்கப்படும், அபிராமி ராமநாதனிடம் கேட்கும் கேள்விகள் இவை தான்...
கடந்த, ௫௦ ஆண்டுகளுக்கு முன், திரையரங்குகள் உருவாகி பிரபலமடைந்த போது, லட்சக்கணக்கான நாடக சபாக்கள், நாடக கீற்று கொட்டகைகள் அழிந்தன. அவற்றில் ஈடுபட்டிருந்த கலைஞர்கள் பலர் வறுமையில் வாடி பிச்சையெடுத்தனர். நடுரோட்டில், அவர்கள் நின்றபோது, உங்கள் சங்கம் என்ன செய்தது... உங்களுக்கு கொள்ளை லாபம் வர வேண்டும் என்பதற்காக, வரியை குறைக்க முடியுமா...கோரிக்கைகள் நிறைவேறும் வரை, திரையரங்குகளை பூட்டி போடுங்கள்; மக்கள் நிம்மதியாக இருப்பர்!


தென் - மேற்குமாவட்ட மக்கள்கனவு நிறைவேறுமா?


கே.ஜானகிராமன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சென்னை மாநகரம் விரிவாக்கம் செய்யப்பட்டு, அதற்கான கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது, வரவேற்கக்கூடியது.இதே போல், மதுரை மாநகரமும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். சென்னையை போல், பெரியளவில் விரிவாக்கம் செய்யாவிட்டாலும், குறிப்பிட்ட அளவிலாவது விரிவாக்கம் செய்ய வேண்டும்.தமிழகத்தின், இரண்டாவது மாநகராட்சியாக, மதுரை அறிவிக்கப்பட்டு, 46 ஆண்டுகள் ஆகி விட்டது; ஆனால், புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை. இதனால், பல வளர்ச்சி திட்டங்கள், மதுரைக்கு கிடைக்காமல் போய் விட்டன.அண்டை மாநிலமான, கேரளாவில் எல்லா நகரங்களையும் அருகில் உள்ள ஊர்களுடன் இணைத்து, விரிவாக்கம் செய்து விட்டனர். அதன் பயனாக, மக்கள் தொகையும் உயர்ந்துள்ளது. அதில், கொச்சிக்கு, மெட்ரோ ரயில் வசதியும் கிடைத்து விட்டன.
தனி நகரம் என எடுத்துக் கொண்டால், கொச்சியை விட, மதுரை பெரிய நகரம். மேம்பாட்டு வசதிகள் செய்யப்படாததால், பெரிய அளவிலான திட்டங்கள் மதுரைக்கு கிடைக்கவில்லை.ஆந்திர மாநிலத்தில், விஜயவாடா, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களை விரிவாக்கி, மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களை பெற்று வருகின்றனர். இதே நிலை தான், வட மாநிலங்களிலும் உள்ளது.ஆனால், தமிழகத்தில் கோவை மட்டுமே, படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.மதுரையை சுற்றியுள்ள பகுதிகளை இணைத்து, 20 லட்சம் மக்கள் தொகை என்ற அளவிற்கு உயர்த்த, முதல்வர் பழனிசாமி ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட
வேண்டும்.மதுரை - கோவை இடையே, மெட்ரோ ரயில் வசதியை ஏற்படுத்தினால், தென் - மேற்கு மாவட்ட மக்கள், தமிழக அரசுக்கு நன்றி கடன் பட்டவர்களாக இருப்பர்!சிறிய மாற்றத்தால்நிறைய நன்மைகிடைக்கும்!


வி.எஸ்.ராமு, திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரையில், 50 மாணவர்கள் கூட இல்லாத, எத்தனையோ பள்ளிகள் செயல்படுகின்றன.
இவற்றில், தலைமை ஆசிரியருடன், நான்கு பட்டதாரி ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். 50க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை முறைப்படுத்த
வழிகள் உண்டு...
* ஆங்கிலம், கணக்கு, அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர்களை, இரண்டு பள்ளிகளில் பணியாற்றுவது போல் நியமனம் செய்யலாம். மூன்று நாள் ஒரு பள்ளி, மற்ற மூன்று நாள் வேறு பள்ளி என, அருகருகே பிரித்துக் கொடுத்து விடலாம்
* நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மட்டுமே, அங்கு நிலையாகப் பணியாற்ற வேண்டும். இவர்களையும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வேறு பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும்
* பகுதி நேர கம்ப்யூட்டர் ஆசிரியர் ஒருவர் வாரந்தோறும் தலா, இரண்டு நாள் வீதம் மூன்று பள்ளிகளில் பணியாற்ற
வேண்டும்
* விளையாட்டு, கைத்தொழில், ஓவிய ஆசிரியர்கள், அருகருகே மூன்று பள்ளிகளில் பணியாற்ற வாய்ப்பு கொடுக்க வேண்டும். தொகுப்பூதிய அடிப்படையில் நடுநிலைப் பள்ளிக்கு தேவைக்கேற்ப பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கலாம்
* மாணவர்கள் இல்லாத தொடக்கப் பள்ளியை மூடுதல் அல்லது 20க்கும் குறைவாக உள்ள மாணவர்கள் உள்ள பள்ளியை நிர்வகிக்க தொண்டு நிறுவன உதவியை நாடலாம்
* கல்வித் துறை, ஆசிரியர்களுக்கு அமைச்சுப் பணி பயிற்சியை கொடுத்து, கல்வித் துறை அலுவலகங்களில், உபரி ஆசிரியர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
* குறைந்த மாணவர்கள், கூடுதல் ஆசிரியர்கள் என்ற நிலையை மாற்றுங்கள்; இழப்புகளைக் குறைக்கலாம். உபரி ஆசிரியர்களை எஸ்.எஸ்.ஏ., - ஆர்.எம்.எஸ்.ஓ.,வுக்கு பயன்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தலாம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

 • Marimuthu Govindaraj - chennai,இந்தியா

  விவசாயம் முக்கியமா?ஆயில் முக்கியமா?-இது நியாயமா? : அன்புள்ள நண்பர்களே,பேராசிரியர்களே,மாணவ செல்வங்களேஇந்திய,தமிழ்நாடு அரசு செய்வது நியாயமா? வரலாற்று காலமுதல் எனது தஞ்சை மாவட்டம், நெல் விளைந்து,உலகுக்கே சோறு போட்டது,ஆனால் பாவிகள் ஆட்சியில் மணல் கொள்ளை,ஆற்று நீர் திருட்டு,மீதேன் திருட்டு,ஆயில் கொள்ளை காரணமாக,எனது சோழநாடு சோறுடைத்தது=தஞ்சை(கதிரமங்கலம்,மன்னார்குடி மற்ற பகுதிகள்), விவசாயம் அழிந்து,வயல்வெளியில் தண்ணீர் பற்றாக்குறையால்,குடி நீர் இல்லாமல்,அழிவது வேதனையாக உள்ளது.விவசாயம் முக்கியமா? ஆயில் முக்கியமா? என தெரியாதவர்களுக்கா நாம் ஒட்டு போட்டு,பிரதமராக & முதல்வராக ஆக்கினோம்?====இந்து முதல்மை கடவுள்களான சிவன்,பெருமாள் & அதர்வண வேத பிரத்யங்கரா தேவி இதற்கு பதில் சொல்லணும் -மக்களை காக்கணும்.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  சினிமாவால் நாடகம் நசித்தபோது சற்றும் கவலைப்படாத இவர்கள் தனக்கென வரும்போது மட்டும் கூக்குரல் எழுப்புகிறார்களே, இணையத்திலேயே படம் பார்க்கும்போது இவர்கள் நஷ்டம் தான் அப்போதும் தெரிகிறது. நாடகத்துக்கு வந்த நிலை இவர்களுக்கும் வந்துவிடும், இந்த அடாவடி டிக்கெட் விலை ஏற்றத்தால்

 • Sundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்

  In this column I desire to send some photos for public interest. I do not have facility of WATS up in my mobile. How I can photos from my PC?

 • rmr - chennai,இந்தியா

  சினிமா துறை தான் இவர்களால் நன்றாக வளர்ந்து உள்ளது , சினிமா அரசியல் போதும் .

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement