Advertisement

'டவுட்' தனபாலு

எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார்: நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பு தற்போது அபாய கட்டத்தில் உள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில், நான் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.டவுட் தனபாலு: 'மத்தியிலும், மாநிலங்களிலும் காங்கிரசின் செல்வாக்கு பாதாளத்துக்கு போயிடுச்சு... எங்க கூட்டணிக் கட்சிகளுக்கு கூட, பா.ஜ., மீது நம்பிக்கை வந்திடுச்சு... இந்த நேரத்துல, ஒரு மனதாக, பா.ஜ., முன்னிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற்றிடக் கூடாது என்பதால் தான், நான் நிற்கிறேன்'னு, சொல்வதற்கு, எதுக்கு, மதச்சார்பை இதில் இழுக்குறீங்க என்பது தான், என்னோட, 'டவுட்!'மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி:
வரலாற்று சிறப்பு மிக்க, ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறைக்கு வித்திட்டவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாய். 2010க்குள், ஜி.எஸ்.டி., அமல்படுத்த, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்தது; ஆனால் இயலவில்லை; அனைத்து மாநிலங்களின் ஒப்புதலை பெற்று, ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தியது நாங்கள் தான்.டவுட் தனபாலு: நிர்ணயித்த இலக்கை, காங்கிரசால் எதனால் அடைய முடியலை... அதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது எது... அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர் யார் என்ற விபரங்களை ஏன் விழுங்குறீங்க... ' பா.ஜ., துவக்கிய எதையும், காங்., தொடரக் கூடாது என்பது தான், எங்களின் நோக்கம்'னு வெளிப்படையாகச் சொன்னால் என்னங்கறது தான், மக்களின், 'டவுட்!'புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி:
புதுச்சேரி சட்டசபையில், மூன்று எம்.எல்.ஏ.,க்கள் நியமிக்கப்பட்ட விவகாரத்தை, அரசியலாக்க முற்படுகின்றனர்.டவுட் தனபாலு: நியமிக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களில் இருவர், மாநில பா.ஜ., நிர்வாகிகள்... அப்புறம் இந்த விஷயம் அரசியலாக்கப்படாமல் இருக்குமா... அரசியல்சார்பற்ற கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொருளாதார நிபுணர்களை நியமித்து இருந்தால், இது போன்ற எதிர்ப்பு வந்திருக்குமா என்பது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: 'கச்சத்தீவு குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம்' என்று, மத்திய அரசு, இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும்.
டவுட் தனபாலு: எல்லை தாண்டும் மீனவர்களுக்கு, 2 ஆண்டு சிறை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் மசோதாவை இலங்கை அரசு நிறைவேற்ற இருப்பதைக் கண்டு இவ்வளவு கொதிக்குறீங்க... கச்சத்தீவை தாரை வார்த்துக் கொடுத்து, அந்த எல்லையை அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொடுத்ததே, காங்கிரஸ் அரசு தானே... பொறுப்புக்கு வரும் எதிர்க்கட்சிகள் சரி செய்திடும்கற நம்பிக்கையில் தான், ஆட்சியில் இருக்கும்போது, தொடர் தவறுகளை செய்தீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன்:
இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது, எங்களின் விருப்பம். அதற்கு காலமும், பன்னீர் செல்வமும் தான் பதில் சொல்ல வேண்டும்.


டவுட் தனபாலு: 'சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கணும்; ஜெ., மரணத்துக்கு நீதி விசாரணை நடத்தணும்... இதுதான், அணிகள் இணைப்புக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை'ன்னு, ரொம்ப காலமா பன்னீர் சொல்லி வர்றாரு... தீர்வு உங்க கையில் தான் இருக்கு... அப்புறம் ஏன், அவரிடமும், காலத்திடமும் பொறுப்பைச் சாட்டுறீங்க என்பது தான், மக்களின், 'டவுட்!'முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம்:
குடியிருப்பு பகுதிகளில் மதுக் கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.டவுட் தனபாலு: படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம் என்ற ஜெ.,யின் வாக்குறுதியை நிறைவேற்றணும்னு வலியுறுத்துறீங்க... நீங்க முதல்வராக இருந்த காலத்தில் அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீங்க... பழனிசாமியாவது முதல்வராக பொறுப்பேற்ற உடனே, 500 கடைகளை மூடினாரே... மதுக் கடைகளுக்கு எதிரான போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் துாண்டுதலில் நடத்தப்படுவதாக அரசு தெரிவித்து வருதே... அதில், நீங்களும் அடக்கமா என்ற, 'டவுட்' எழுதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement