Advertisement

இது உங்கள் இடம்

மொழி வாதம் செய்வோர் தேறாத அரசியல்வாதிகள்!


சுப்ர.அனந்தராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பிழைப்பு தேடி வந்தோர் எல்லாம் தமிழ் புலவர்களா?' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்; அவர் கருத்து ஏற்கத்தக்கது!ஹிந்தி மொழி வகுப்பு மூலம், கற்றுக் கொண்டோர் எல்லாம், பிழைப்பு தேடி வட மாநிலங்களுக்கு செல்வதாக வைத்துக் கொள்வோம்... அவர்கள் ஹிந்தி மொழியில் உரையாடி, அவ்வளவு எளிதில் யாருடனும், 'கம்யூனிகேஷன்' செய்து கொள்ள முடியாது.
ஹிந்தியை, வகுப்புகளில் உட்கார்ந்து கற்றுக் கொள்பவர்களால், ஏட்டுச் சுரைக்காய் அளவு, மொழி அறிவை மட்டுமே பெற முடியும். வட மாநிலங்களில், ஹிந்தி மொழியில் உரையாடி சமாளிக்க முடியாது. ஹிந்தி மொழியைக் கற்று தான், வட மாநிலங்களில் பிழைக்கவோ, வேறு வியாபாரம் சம்பந்தமாகவோ, காலம் தள்ள முடியும் என்பதும் இல்லை.அங்கே போனால், தட்டு தடுமாறி பேசி, ஒரு வார அவகாசத்தில் பேச்சு மொழியான, ஹிந்தியைக் கற்று விட முடியும். அது, ஹிந்திக்கு மட்டுமல்ல, உலகின் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும்.பிற மாநிலங்களில் இருந்து வயிற்றுப் பிழைப்புக்காக, தமிழகம் வருவோர் எல்லாம், தமிழ் வாத்தியாரை நியமித்து, தமிழ் கற்று கொள்வதில்லை. 'மொழி கற்றே ஆக வேண்டும்' என வாதம் செய்வோர், வெட்டியாக பொழுதை கழிக்க வாதம் செய்வோர் என்று தான் எண்ணத்
தோன்றுகிறது.தாய்மொழியில் பேச மட்டும் இல்லை, எழுதவும், படிக்கவும் நிச்சயம் நல்ல பயிற்சி பெற வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. பல இந்திய மொழிகளையும், வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக் கொள்வோர், பிழைப்பு கருதியே கற்றனர் என்ற கூற்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.எந்த மொழியையும் யாரும் யார் மீதும் திணிக்க முடியாது. ஹிந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு என அலறுவோர், இம்மாதிரி அலப்பரை பண்ணினால் ஓட்டுகளை குவித்து விடலாம் என, எண்ணுகின்றனர். அந்த எண்ணம் உடையோர் எல்லாம், 'பெயிலியர்' அரசியல்வாதிகள்!


கடும் தண்டனைவாங்கி தரதயங்கக் கூடாது!மு.சுந்தரமூர்த்தி, கடலுாரிலிருந்து எழுதுகிறார்: 'சிறுவனிடம் திருநங்கையரின் பகல் கொள்ளை' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதி இருந்தார்.அதில், சாலையோர ஓட்டலில் சாப்பிட்ட, சிறுவனின் சட்டை பையில் கையை விட்டு, ௧௦௦ ரூபாயை திருநங்கையர் வழிப்பறி செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். இது, மிகவும் கண்டிக்கத்தக்கது.இதே போல், என் கண்ணெதிரே நடந்த சம்பவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...கடலுாரில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தேன். விழுப்புரம் ரயில்வே ஸ்டேஷனில், ஐந்து திருநங்கையர் கவர்ச்சிகரமான உடையமைப்பு மற்றும் அளவுக்கு அதிகமான ஒப்பனைகளுடன், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ஏறினர். பயணிகளிடத்தில் கை தட்டி காசு கேட்டனர்.காசு தராத இளைஞர்களின் சட்டை பையில் கையை விட்டு காசு எடுத்தனர். அவர்களின் கன்னம் மற்றும் இடுப்பு பகுதிகளை கிள்ளினர். நாகரிகமற்ற செயல்களில் ஈடுபட்டதுடன், இரட்டை அர்த்தத்தில் பேசினர்.இதனால், ரயிலில் பயணம் செய்த பெண்கள், தர்மசங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டனர்.இதில், 'ஹைலைட்'டான விஷயம் என்னவெனில், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பயணியர் பாதுகாப்பிற்காக உடன் வந்த போலீசார், அவர்களை கண்டு கொள்ளவே இல்லை.தமிழகத்தில் உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கு, திருநங்கை ஒருவர் முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்திய அளவில் மருத்துவ மாணவர்களுக்காக, சமீபத்தில் நடந்து முடிந்த, 'நீட்' தேர்வில், தமிழகத்தை சேர்ந்த ஐந்து திருநங்கையர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இன்னும் பல்வேறு துறைகளில், திருநங்கையர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை கேவலப்படுத்தும் வகையில், திருநங்கையரில் சிலர், இது போன்ற அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுகின்றனர்.வழிப்பறியில் ஈடுபடும் திருநங்கையருக்கு கடும் தண்டனை வாங்கி தர, போலீசார் தயங்கக் கூடாது!


இவற்றிற்குகடிவாளம்போடுங்கள்!


முனைவர் ஜி.சண்முகம், பேராசிரியர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: சுயநிதி கல்லுாரிகளின் வருமானத்திற்கு என்றும் குறைவில்லை. ௧,௫௦௦ மாணவர்கள் படிக்கும் ஒரு சுயநிதி கல்லுாரியில், ஒரு மாணவருக்கான ஆண்டு கல்விக் கட்டணம், ௨௫ ஆயிரம் ரூபாய் என வைத்தால் கூட, அக்கல்லுாரியின் ஆண்டு வருமானம், ௩.௭௫ கோடி ரூபாய்!இக்கல்லுாரிகளில், ஓராண்டுக்கு நிகர செலவு, ஒரு கோடிக்குள் தான் வரும்; அதில், பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதியம், இதர செலவுகள் அடங்கும்.இப்படி கோடிக்கணக்கில் லாபம் ஈட்டினாலும், பாடுபட்டு உழைக்கும் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஊதியத்தை கிள்ளித் தான் வழங்குகின்றனர்.யு.ஜி.சி., விதிப்படி, ஒரு ஆசிரியர் வாரத்திற்கு, ௧௬ மணி நேரம் வகுப்பு எடுக்க வேண்டும்.ஆனால், இக்கல்லுாரிகளில் தேவைக்கும் குறைவான ஆசிரியர்களை மட்டுமே நியமிக்கின்றனர். அவர்களை, வாரத்திற்கு, ௨௪ மணி நேரம் வரை வகுப்பு எடுக்க
அறிவுறுத்துகின்றனர்.இக்கல்லுாரிகள் வாரத்திற்கு, ஐந்து நாட்கள் செயல்பட வேண்டும் என, பல்கலைக் கழகங்கள் நிர்ணயம் செய்கின்றன. ஆனால், வாரத்திற்கு ஆறு நாட்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் வேலை செய்கின்றனர்; அரசு விதிமுறைகளும், முறையான சலுகைகளும் மறுக்கப்படுகின்றன.இக்கல்லுாரிகளில் பெரும்பாலும், பி.காம்., - பி.பி.ஏ., போன்ற பாடப் பிரிவுகளை துவக்குகின்றனர். செய்முறை பயிற்சி உள்ளடக்கிய எந்த பாடப்பிரிவுகளுக்கும் வகுப்புகளை துவக்க மறுக்கின்றனர்.பி.காம்., படிப்பில் பல பிரிவுகளை துவக்கி, ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், ௭௦ மாணவர்களை சேர்த்து, தங்கள் கல்லாவை கட்டி கொள்கின்றனர். இக்கல்லுாரிகளில் உடற்பயிற்சி ஆசிரியர் இருக்க மாட்டார். தகுதி வாய்ந்த நுாலகம் கிடையாது. குடிநீர், கழிப்பறை வசதிகள் சரிவர இல்லை.எனவே, சுய நிதி கல்லுாரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், ஷிப்ட் - ௨ அடிப்படையில் நடத்தப்படும், ஒவ்வொரு பாடப்பிரிவு மாணவர்களிடமும் இருந்து வசூலிக்க வேண்டிய ஆண்டு கல்வி கட்டணம் எவ்வளவு என்பதை, நிர்ணயிக்க வேண்டும்.இக்கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் மாத ஊதியம், அலுவலர்களின் ஊதியம், வார வேலை நாட்கள், ஒரு வாரத்திற்கு பாடம் எடுக்க வேண்டிய மணி நேரங்கள் ஆகியவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும்.குறைந்தபட்ச உள்கட்டமைப்பு வசதிகள் என்னென்ன இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து, அவற்றை நடப்பாண்டு முதலே நடைமுறைப்படுத்த, தமிழக அரசின் உயர் கல்வித் துறையும், அனைத்து பல்கலைக் கழகமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (7)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement