Advertisement

நேர்மை இல்லாதிருக்கும்வரை விவசாயிகளுக்கு வாழ்வில்லை!

விவசாயிகள் பக்கமிருந்து, கடன், வறுமை, வறட்சி என்ற குரல் மட்டுமே கேட்கிறது. விவசாயத்தில் லாபமே கிடையாதா, வெறும் நஷ்டம் மட்டும் தானா, அவர்களை நாலாந்தர மக்களாக அரசாங்கம் கைவிட்டு விட்டதா என்று அறிய, விவசாயத் துறை படிப்பு முடித்து, அதேத் துறையில் நேர்மையான அதிகாரியாக இருக்கும் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறிய தகவல்கள் நம் நெஞ்சை சுடுவதாக இருந்தது. அவை:
உண்மையில் உழவர்களுக்கு நன்மைப் பயக்கும் பல திட்டங்களை அரசாங்கம் செய்தபடி தான் இருக்கிறது. பூச்சிக்கொல்லி மருந்தில் இருந்து விதை, உழவுக் கருவிகள், பயிர் நடும் கருவி என, அனைத்து உதவிகளையும் அரசாங்கம் செய்கிறது. ஆனால், வழக்கம்போல் சில பெருச்சாளிகள் இங்கேயும் உள்ளே புகுந்து, உழவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலனை, தங்கள் பக்கம் திருப்பி, உழவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர்.
ஒரு விவசாயி தான் விருப்பப்பட்ட விதையை, கருவியை வாங்க முடியாது. அரசியல் செல்வாக்கு, அதிகாரிகள் பரிந்துரை செய்யும் நிறுவனத்தில் அல்லது ஆட்கள் மூலமாக மட்டுமே வாங்க வேண்டும் என்ற கட்டாய விதி இருக்கிறது.
உதாரணமாக, தோட்டக்கலைத் துறை மூலமாக, மானிய விலையில் வீரிய ஒட்டுரக விதைகள் விவசாயிகளுக்குத் தருகின்றனர். ஆனால், இதில் சில அதிகாரிகள், லஞ்சம் வாங்கி, தரமற்ற, முளைப்புத் திறன் குறைந்த விதைகளை வாங்கி விற்பனை செய்கின்றனர். அதிகாரிகள் விற்கும் இந்த விதை தரமற்றதா, தரம் வாய்ந்ததா என்பது, அப்பாவி விவசாயிக்குத் தெரியாது. விதைத்த விதை சரியாக முளைக்காமல், விளைச்சலும் இல்லாமல் நஷ்டத்திற்கு ஆளானப் பின் தான் அவனுக்குத் தெரிய வரும். ஆனால், அதை அவன் எங்கு சென்று முறையிட முடியும்?
அப்படியே வாங்கிய அலுவலரிடம் சென்று முறையிட்டாலும், விதை சரியாக முளைக்காமைக்கு தாங்கள் தான் காரணம் என்று எந்த அதிகாரியாவது பொறுப்பேற்பாரா என்ன! 'எங்களுக்கு வருவதே அப்படித்தான்! நாங்கள் என்ன செய்ய முடியும்? அடுத்த முறை நல்லதாகத் தருகிறோம்' என்பது தான் அவர்களின் பதிலாக இருக்கிறது.
விவசாயக் கருவிகளில் நடக்கும் முறைகேடு, இதை விட அதிகமானது. இனக்கவர்ச்சி பொறி, விசைத் தெளிப்பான் போன்றவை வெளிமாநிலங்களில், 5,000 ரூபாய்க்கு தரமானதாகக் கிடைக்கிறது. ஆனால், இங்கு அதையே, 8,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்து அரசாங்கப் பணத்தில் வாங்குகின்றனர். அதை உழவர்களுக்கு, 4,000 ரூபாய்க்கு மானிய விலையில் தருகின்றனர். அதுவும் ஏனோ தானோ என்று தயாரித்து, ஒட்டுமொத்தமாக கமிஷன் ரேட்டுக்கு வாங்கிய கருவிகள்.
ஒரு கருவிக்கே, 6,000 ரூபாய் வரை லாபம் என்றால், ஆயிரக்கணக்கான கருவிகளுக்கு எத்தனை லாபம் கிடைக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள். கருவி, மருந்து என எதுவாக இருந்தாலும், எந்தக் கம்பெனி அதிக கமிஷன் தருகிறதோ அதைத்தான் அதிகாரிகள் வாங்குகின்றனர்.
சமயத்தில் புதிதாக ஒரு கம்பெனியை இவர்களே போலியாக ஆரம்பித்து விடுவர். வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு கம்பெனியிடம், மொத்தமாக கமிஷன் ரேட்டுக்கு பேசி வாங்கி, அதில் இவர்கள் கம்பெனி பெயரைப் பதித்து விற்று விடுவர். கலப்பை, நெல் களையெடுக்கும் கோனாவிடார் கருவி, நடவு செய்யும் மார்க்கர் போன்றவை, இப்படித் தான் விற்பனை செய்யப்படுகின்றன.
சொட்டு நீர்ப்பாசனத்திற்கு பயன்படும், 'பைப் லைன்' கருவியிலும் இப்படி தான் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நாலு ஏக்கருக்கு சொட்டு நீர்ப்பாசனம் என்று எழுதி விடுவர். ஆனால், 2 ஏக்கர் நிலத்திற்கு தான் அந்த பைப் லைன் பொருத்தப்பட்டிருக்கும். மீதி இரண்டு ஏக்கர் நிலத்திற்கான காசு, அதிகாரிகளுக்கு மிச்சம். நுண்ணீர் பாசனத்தை முறைப்படி பின்பற்றி இருந்தால், இவ்வளவு வறட்சி வந்திருக்காது, வராது. அந்த நுண்ணீர் பாசனத்தில் ஏக்கர் கணக்கில் லஞ்சம் புகுந்து ஆடுவது தான் நஷ்டத்திற்குக் காரணம்.
விதைப் பண்ணைகளின் வேலை, விதை கொடுத்து வாங்கி சேமித்து வைப்பது தான். ஆனால், அதையும் அங்குள்ள அதிகாரிகள் சரியாகச் செய்வதில்லை. வெளியில், 40 ரூபாய் விற்கப்படும் விதைகளை, அதிகாரிகள், 60 ரூபாய் என்று வாங்குவர். அதையும் பாதுகாப்பாக வைத்திருக்க மாட்டார்கள். அதை யார் பாதுகாப்பது என்ற அலட்சிய மனப்பான்மையுடன் பாதுகாப்பதாக கணக்கில் காட்டி விட்டு, விவசாயிக்கு விற்றதாய் பொய்யான கணக்கு காட்டி, வெளிமார்க்கெட்டில் விற்று விடுகின்றனர்.
- இப்படிச் சொல்கிறார் அந்த
நண்பர். 'பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்கிறதே, அது எப்படி?' என, அவரிடம் கேட்டால், 'பயிர் இன்சூரன்ஸ் இடத்திற்கு இடம் மாறுபடும். உதாரணம், தஞ்சைக்கு நெல் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்திருந்தால் அவருக்கு இன்சூரன்ஸ் கிடைக்கும். பொள்ளாச்சியில் தென்னை மரங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் கிடைக்கும். அங்கு நெல் பயிரிட்டு நஷ்டம் அடைந்தவர்களுக்கு கிடைக்காது. 'இதுபோன்ற இட பாகுபாடும் விவசாயிகளுக்கு நஷ்டத்தையே தருகிறது. எந்த ஊரில் என்ன பயிர் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்தாலும், அவருக்கு இன்சூரன்ஸ் இருந்தால், இந்த நிலை மாறும்' என்றார் அந்த அதிகாரி. விதை, கருவி, மருந்து என்று கிடைக்கும் அத்தனை வழிகளிலும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டிருந்தால், அவர்கள் எந்தக் காலத்தில் முன்னேற முடியும்? எப்போதும் போல் அவர்கள், துண்டை தோளில் போட்டு, 'விளைச்சல் இல்லை' என்று வானம் பார்த்து கண்ணீர் வடிக்க வேண்டியது தான்.
நேர்மையான அரசு அமையும் வரை, விவசாயிகளுக்கு வாழ்வு இல்லை!
இ.எஸ்.லலிதாமதி
சமூக நல விரும்பி
இ-மெயில்: eslalitha@gmail.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (11)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement