Advertisement

ஆன்மீகப் பாதையில் நாம் காணும் காட்சிகள் உண்மையா? கற்பனையா?

கேள்வி: ஆன்மீகப்பாதையில் இருக்கும் ஒருவர், தான் காண்பது மாயக்காட்சியா அல்லது உண்மை நிகழ்வா என்பதை எப்படி அறிந்துகொள்வார்?
சத்குரு: உண்மையான நிகழ்வு, கற்பனைக் காட்சியை விடவும், பொய்யானது போலத் தோன்றக்கூடும். இன்றைய நரம்பியல் விஞ்ஞானிகளும், இயற்பியல் வல்லுனர்களும் பேசுவதைக் கேட்டால், அவைகள், நீங்கள் ஏற்கனவே அறிந்துள்ள கட்டுக் கதைகளைக் காட்டிலும், அதிக அமானுஷ்யம் நிறைந்ததாகத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இயற்கைக்கு மாறானதாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளன. யோகிகள் இதைப் பற்றிப் பேசியபோதெல்லாம், மக்கள் அது ஏதோ அசாதாரணமான மகத்துவமான விஷயம் என்றுதான் நினைத்திருந்தனர். ஆனால் அது ஒருவிதமான புரிதல் மட்டுமே; யோகிகள் தாங்கள் பார்த்ததை வெறுமனே விவரிக்க மட்டுமே செய்தனர்.
மனத்தோற்றம் அல்லது மாயத்தோற்றம் என்றால், நீங்கள் நம்பும் அளவுக்கு, நீங்களே ஆற்றலுடன் உருவாக்குவது. அது அபாயகரமானது. நீங்கள் உண்மையிலேயே மாயக் காட்சியைக் காண்கிறீர்கள் என்றால், தத்ரூபமாகத் தோன்றுமளவுக்கு நீங்கள், மனதில் காட்சிகளை உருவகப்படுத்துகிறீர்கள் என்றுதான் பொருள். உங்கள் மனதில் உருவாக்கிய காட்சிக்கு, விழிப்புணர்வுடன் சக்தியூட்டினால், அந்தக் காட்சி உயிர் பெற்றுவிடமுடியும்.
தந்த்ரா யோகம் கூறும் முழுமையான விஞ்ஞானம் இதுதான். நாம் “தந்த்ரா” என்ற வார்த்தையைக் கூறினாலே, மக்கள் மனதில் பாலுறவின் வித்தியாசமான நிலைகள்தான் நினைவில் எழுகின்றன. அன்னிய தேசங்களிலிருந்து அதிகபட்சமாக ஒன்றிரண்டு மாதங்கள் மட்டுமே பாரத தேசத்திற்கு வருகை தருபவர்கள்தான் இதற்குப் பொறுப்பாளிகள். அவ்வளவு குறுகிய காலத்திற்குள் தந்த்ராவில் “நிபுணத்துவம்” அடைந்து, அதைப்பற்றி புத்தகமும் எழுதத் துணிந்துவிடுவது உண்மையிலேயே மிகவும் அவலமானது.
தந்த்ரா என்ற வார்த்தைக்கு “தொழில்நுட்பம்” என்பது பொருள். ஒரு தொழில் நுட்பம் என்பது, உங்களுக்கு வேண்டியதை உருவாக்குவதற்கானது. நாம் அறிந்துள்ள எல்லா பௌதீகரீதியான தொழில் நுட்பங்களும், நாம் விரும்பியவாறு புறச்சூழல்களை உருவாக்குவதற்கானவை. மனித மனங்கள் தாங்கள் விரும்பும் புறச்சூழல்களை உருவாக்க, பல வேண்டுகோள்களை முன்வைக்கும். பெரும்பாலான நேரங்களில் அந்த வேண்டுதல்கள் நிறைவேறாமல் இருப்பதுதான் உங்களுக்கு நல்லது. ஏனென்றால், உங்களின் எல்லா பிரார்த்தனைகளும் பலித்துவிட்டால், உண்மையாகவே உங்கள் வாழ்க்கை நாசமாகிவிடும்.
'தந்த்ரா' என்னும் தொழில்நுட்பமானது, நீங்கள் விரும்பும் வகையில் புற வாழ்க்கைச் சூழல்களை உருவாக்கித் தருவதில் நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால், அது உருவங்கள் மற்றும் குறியீடுகளை உருவாக்குவதில் கவனம் கொள்கிறது. அந்த உருவங்களும் குறியீடுகளும் உங்கள் சொந்த புத்திசாலித்தனத்தையும் கடந்த வழிகளில் செயல்படக்கூடியது. தந்த்ரா, உங்கள் திறனையும் கடந்த ஒரு மனதை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. இதை நிகழ்த்துவதற்கான தொழில் நுட்பங்களே தந்த்ரா வழிமுறைகள் எனப்படுகின்றன. அதாவது, உங்கள் உடல், மனம் மற்றும் உங்களது சக்தி நிலைகளை, வாழ்வின் கருவிகளாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்கிறீர்கள். அதன்மூலம், மனிதத் திறன்களுக்கு அப்பாற்பட்ட மதிநுட்பம் கொண்ட ஒரு உயரிய சாத்தியத்திற்கு நீங்கள் உரியவர் ஆகிறீர்கள்.
சிக்கலான ஏதோ ஒன்றை படிப்படியாக வடிவமைக்க மனதைப் பழக்குவதற்கென்றே விரிவான தாந்திரீக செயல்முறைகள் உள்ளன. யோகா வகுப்புகளில் கூட “மனதளவில் செய்யுங்கள்” என்றுதான் நாம் ஆரம்பிக்கிறோம். இதுதான் தந்த்ராவை நோக்கிய முதல் படி. முதலில் உட்கார்ந்த நிலையில் மனதளவிலேயே உடற்பயிற்சிகளை செய்துகொண்டே இருப்பீர்கள். இப்படி செய்து கொண்டேயிருந்தால், சிறிது காலத்திற்குப் பின், உடலளவில் நீங்கள் செய்யவே தேவையில்லை. உடலளவில் செய்யும் அனைத்தையும் இப்போது மன அளவிலேயே செய்து முடிப்பீர்கள். இவ்விதம் உண்மையிலேயே நீங்கள் உங்களைப் பயிற்றுவித்தால், மனதளவில் செய்வதனால் மட்டுமே, உங்களுடைய உடற்கட்டு முன்னேற்றமடைவதை, சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் காண முடியும். ஏனென்றால், உங்கள் கற்பனைத்திறனோடு, உங்களது உயிர்சக்திகளை ஒன்றாக இணைத்துவிட முடிந்தால், அது வாழ்வில் கண்கூடான உண்மையாக ஆகிறது. அதன் பிறகு அது வெறும் கற்பனையாக மட்டும் இருப்பதில்லை.
இது அடிப்படையில் இரண்டு ஆரம்பப் படிகளைக் கொண்டது. ஒன்று, உங்களுக்கு வேண்டியது எதுவோ அதன் ஒவ்வொரு நுட்பமான அம்சத்தையும் தெளிவாக உங்கள் மனதில் உருவாக்குவது, பிறகு இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளி செய்ததைப்போல் தத்ரூபமாக அதைப் படைப்பது. மிகவும் அடிப்படையாக இதற்குக் குறிப்பிட்ட அளவுக்குப் பயிற்சியும், உங்களைக் குறித்த அகங்காரமின்மையும் இருக்கவேண்டியது அவசியம். அதாவது உங்களைப் பற்றி நீங்களே பெரிதாக நினைத்துக்கொள்ளாமல் இருப்பது. இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கான சாதனாவும், தயார்ப்படுத்துதலும் தேவைப்படுகிறது. அப்போது அவர் தன் ஆளுமையை முன்னிறுத்தாமல், மனதை அதன் பரந்த தன்மையில் பயன்படுத்தமுடியும்.
மிக அழகான நிகழ்வு ஒன்று இதற்குச் சான்றாக உள்ளது. தென்னிந்திய நகரத்தில் பூசலார் என்றழைக்கப்பட்ட ஒருவர் இருந்தார். அந்த நகரத்தின் அரசர் ஒரு மிகப் பெரிய சிவாலயத்தை எழுப்பினார். இக்கோவிலைக் கட்டுவதற்குப் பல வருடங்கள் ஆகிவிட்டன. அரசரின் வாழ்நாள் நோக்கமாக இருந்த அந்தக் கோவிலின் திறப்பு விழா அடுத்த நாள் நடக்க இருந்தது. அன்றிரவு அவரது கனவில் சிவன் தோன்றி, “நீ கட்டியுள்ள கோவிலின் திறப்பு விழாவிற்கு என்னால் வர இயலாது. ஏனெனில், பூசலார் இதே நகரத்தில் வேறொரு கோவிலை எழுப்பியுள்ளார். நான் அங்கே செல்லவேண்டியது அவசியம். அவரும் நாளைக்குத் திறப்பு விழா நடத்துகிறார்”, என்று கூறினார்.
அரசருக்குள் சட்டென்று ஒரு பயம் தோன்ற தூக்கத்திலிருந்து எழுந்துவிட்டார். ஏனென்றால் பல வருடங்களாக முயற்சி செய்து, ஏராளமான பணச் செலவில் கோவில் கட்டிய பிறகு, பூசலார் கட்டிய கோவிலுக்குச் செல்வதாக சிவன் கூறுகிறார். “யார் இந்தப் பூசலார்? எனக்குத் தெரியாத அந்தக் கோவில் எது?” என்றவாறு அரசர் பூசலாரைத் தேடிப் புறப்பட்டார்.
அரச பரிவாரத்தின் நீண்ட தேடலுக்குப் பிறகு, ஒரு சிறிய குடிசையில், செருப்பு தைப்பவராக பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த பூசலாரைக் கண்டனர். அந்த நாட்களில் செருப்பு தைக்கும் வேலை மிகவும் கீழானதாகப் பார்க்கப்பட்டது. அங்கே சென்ற அரசர், “உன்னுடைய கோவில் எங்கே? நான் கட்டியுள்ள கோவிலுக்கு வராமல், உனது கோவிலுக்கு செல்லப் போவதாக சிவன் கூறுகிறார். எங்கே இருக்கிறது உன் கோவில்?” என்று கேட்டார்.
பூசலார், “நான் என் மனதிற்குள்தான் கோவில் கட்டினேன்” என்று கூறினார்.
ஒவ்வொரு செங்கல்லாக, ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து, பல வருடங்களாக அவர் தன் மனதில் கட்டி வந்த கோவில், நிஜமான கல்லிலும், செங்கல்லிலும் கட்டுவதை விட, அதிக உண்மைத் தன்மையுடன் இருந்தது.
இவ்விதம் நீங்கள் ஒன்றைக்கட்டமைத்தவுடன், உயிர்சக்திகளால் அதற்கு சக்தி ஊட்டச் செய்வது அடுத்தபடியாக உள்ளது. சக்தியூட்டுவதனால் அது ஒரு உயிரோட்டமான செயல்முறையாகிறது. பாரதத்தின் தாந்த்ரீகப் பாரம்பரியங்கள், பலவிதமான கடவுளையும், குறிப்பாக பெண்தெய்வங்களையும் கொண்டிருக்கிறது. இத்தகைய பெண் தெய்வங்கள் மக்களால் உருவாக்கப்பட்டவை. அவர்கள் தத்ரூபமாக உருவாக்கி, உயிர் கொடுத்து, உயிருள்ள தெய்வங்களாக அமைத்தனர். இன்றைக்கும் கூட, அதற்கான ஒரு குறிப்பிட்ட சங்கேதக் குறியீடு கொண்டு அழைத்தால், நீங்கள் இந்தப் பெண்தெய்வங்களைத் தோன்றச் செய்யலாம். ஒரு தெய்வத்தை எப்படி உருவாக்குவது என்பதைக் குறித்த முழுமையான விஞ்ஞானமும், பாரம்பரியமும் வளர்ச்சி அடைந்திருந்தது. தாந்த்ரீக பாரம்பரியங்கள் இவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தது. இது குறித்த நுணுக்கங்களை நான் வெளிப்படுத்தினால், அதை ஜீரணிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
பொதுவாக, எப்போதும் மிகவும் ஆற்றல் வாய்ந்த, ஆனால் பார்ப்பதற்கு விகாரமான உருவங்களை அவர்கள் உருவாக்கினார்கள். ஏனெனில் இந்தப் பெண் தெய்வங்கள் அதீதமான ஆற்றல் கொண்டிருந்த நிலையில், அவைகள் அழகாகவும் இருந்துவிட்டால், அவர்கள் அந்த வடிவங்களுடன் பற்றுக்கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. வெகுசிலர் மட்டும் அழகிய வடிவங்களை உருவாக்கினார்கள். பெரும்பாலானவர்கள் திகிலூட்டும்படியான தோற்றமுடைய பெண்தெய்வங்களையே உருவாக்கினர். இதன்மூலம், அவர்களின் அழைப்பை அந்த தெய்வங்கள் ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அச்சமூட்டும் அந்த பெண்தெய்வங்களின் தோற்றத்துடன் அவர்கள் பற்றுக்கொள்ள விரும்பமாட்டார்கள்.
கற்பனைக் காட்சியானது அற்புதமான விஷயங்களைச் செய்யமுடியும். உங்களுடைய உயிர்சக்திகளின் மீது ஆளுமை கொண்டு, உங்கள் கற்பனைக் காட்சிக்கு உயிரூட்ட முடிந்தால், அது ஒரு உண்மைக் காட்சியாகிவிடும். பல யோகிகளும், தங்களுக்கே உரிய உலகத்தில் தமக்கே சொந்தமாக கிரகங்கள், பூமி போன்றவைகளை சிருஷ்டி செய்து வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வாழ்வது குகைகளில்தான் என்றாலும், தங்களது கற்பனா சக்தியையும், உயிர் சக்திகளையும் பயன்படுத்தி வாழ்வின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் அங்கே உருவாக்கியிருக்கின்றனர். ஒரு குகைக்குள் ஒரு பிரபஞ்சமே இருக்கிறது. தனக்கான புதிய உலகத்தில் அவர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார். குகைக்குள்ளே அடக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஊடாக அவர் நடக்கமுடியும். இதைத்தான் நவீன இயற்பியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கணத்தில், இதே இடத்தில் உண்மையின் பல பரிமாணங்கள் நிகழ்ந்து கொண்டேயிருப்பதாக இன்றைக்கு நரம்பியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். உங்களுடைய புரிதலில், அது ஒரு கூட்டுக் கலவையான உணர்தலாக நிகழ்கிறது. ஆனால் உங்களுக்கு போதுமான புரிதல் இல்லாத காரணத்தினால், உங்களால் அதை ஒருங்கிணைத்து, அர்த்தமுள்ள ஒரு காட்சியாக உருவாக்க முடியவில்லை.
யோகத்தில், ஒரே நேரத்தில், 21 வெவ்வேறு உண்மை நிலைகள் நிகழமுடியும் என்று நாம் எப்போதும் கூறிவந்திருக்கிறோம். இப்போது, இங்கே, உண்மையின் 21 நிலைகள், பூகோள ரீதியாக எந்த தூர வித்தியாசமும் இன்றி நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் அது உங்களுடைய உணர்தலில் இல்லை, அவ்வளவுதான்.
உதாரணமாக, உங்கள் தலையில் நான் கடுமையாக மூளை கலங்குமளவுக்கு அடித்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். அப்போதும் உங்களால் என்னைப் பார்க்கமுடியும். ஆனால் உங்கள் கண்களில் என் பிம்பம் கலங்கலாகத்தான் தெரியும். உங்கள் மூளை, காட்சியை ஒருங்கிணைக்கும் திறனை இழந்துவிட்டது. ஒருங்கிணைக்கும் செயல்முறை பாதிக்கப்பட்டதால், காட்சியானது சிதைவுபட்டு கண்ணுக்குத் தெரிகிறது. இப்போதுகூட இதுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அனைத்துப் பரிமாணங்களின் தகவலும் உங்களுக்குக் கிடைக்கின்றன. ஆனால் உங்களால் அதை ஒருங்கிணைத்துப் பார்க்க முடியவில்லை. இங்கிருக்கும் ஒவ்வொன்றும் உங்களுக்குள் செல்கிறது. புரிதலும் இருக்கிறது. ஆனால் உங்களால் அதைத் தொடர்புபடுத்தி ஒருங்கிணைக்க முடியவில்லை. நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டியதெல்லாம், சற்றுக் கூடுதலான ஒருங்கிணைக்கும் திறனைத்தான். அதற்கு சிறிது அதிகமான பயிற்சி தேவைப்படுகிறது.
ஒரு மனிதர் தான் செய்யும் எந்தச் செயலிலிருந்தும் நான் என்பதை முற்றிலும் விலக்கி செயல்படும் ஸ்திரத்தன்மையைப் பெற்றிருந்தால், அவரது செயலின் வீச்சுத்திறன் சட்டென்று முற்றிலும் வேறு ஒரு வித்தியாசமான பரிமாணத்திற்கு அதிகரிக்கும். ஆனால் தங்களுக்கு பயனற்ற அல்லது தாங்கள் பங்குபெறாத செயல்களில் எப்படி ஈடுபடுவது என்பது பொதுவாக மக்களுக்குத் தெரிவதில்லை. இது, ஒவ்வொரு மனிதரும் தனக்குத்தானே விதித்துக்கொண்ட மோசமானதும், முடக்கக் கூடியதுமான எல்லையாக உள்ளது. “தான்” மற்றும் “தன்னுடையது” என்று சொந்தம் கொண்டாட முடியாத எந்த ஒரு செயலையும் மனிதரால் செய்யமுடியவில்லை. இந்த ஒரு வரையறையை நாம் கடந்துவிட முடியுமென்றால், கட்டுக்கதையோ என மக்கள் வியக்கும் அளவுக்கு, நாம் பல அற்புதங்களை நிகழ்த்தமுடியும். நமது எண்ணம், நமது உணர்ச்சி, நமது செயல் மற்றும் சக்தியிலிருந்து நமது தனித்தன்மையை மட்டும் முற்றிலும் நீக்கிவிட்டால், அதிசயமான செயல்களை நம்மால் உருவாக்கமுடியும்.
இன்றைக்கு, மனிதர்கள், தங்களுக்கே உரித்தான இயல்புத்தன்மையிலிருந்து முற்றிலும் தடம் மாறிவிட்டனர். ஏனெனில் அந்த அளவுக்கு தனிப்பட்ட அடையாளம் என்பது மக்களுக்குள் வலிமையாக இடம் பிடித்துள்ளது. இதனால், ஒரு உயிராக வாழக்கூடிய தன்மையை மனிதர்கள் இழந்துவிட்டனர். ஒரு உயிராக, உயிராக மட்டுமே மனிதர்கள் செயல்படும்போது, அவர்கள் அளப்பரிய திறன்கள் பெறுகிறார்கள். எந்த ஒரு சக்தியையும் பெறக்கூடிய ஆற்றல் பெறுகிறார்கள். அப்போது மனிதருக்கே உரித்தான வரையறைகள் எதுவும் அவர்களுக்கு இருக்காது. ஒட்டுமொத்த தந்த்ரா யோகாவும் இதைப் பற்றியதுதான். அதாவது தனித்தன்மை என்ற ஓடு உடைக்கப்படுகிறது. அதனால் உங்களது எந்த ஒரு செயலும், தனிமனிதருக்கான சிறிய நிகழ்வாக இல்லாமல், அனைவரும் பயன்பெறக்கூடிய அளவில், ஒரு ஒட்டுமொத்த நிகழ்வாக இருக்கிறது.
சுமார் ஏழு அல்லது எட்டு வயதிலிருந்து சுமார் பதிமூன்று வயது வரையிலும், இது எனக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. நான் பள்ளி சென்று வீடு திரும்பியதும், பல மணி நேரமானாலும் யாரும் என்னைத் தொந்தரவு செய்ய முடியாத ஒரு இடமாகப் பார்த்து உட்கார்ந்து கொள்வேன். அநேகமாக, இது எவருடைய கைக்கும் எட்டாத வகையிலான, உயர்ந்த கட்டிடத்தின் உச்சியாகவோ அல்லது ஓங்கி வளர்ந்த மரத்தின் உச்சியாகவோ இருக்கும். யாரும் அங்கே வரமுடியாது, அவர்களது கூக்குரல்கூட என் காதுகளை எட்டமுடியாது. ஏனெனில், நான் எனக்கே உரித்தான, சொந்த உலகத்தைக் கட்டமைப்பதில் மட்டுமே முற்றிலும் முனைப்பாக இருந்தேன்.
அங்கே அமர்ந்துகொண்டு, முழுக்க முழுக்க எனக்கான, வேறொரு உலகை, மிகவும் நுட்பமாகக் கட்டமைத்தேன். இதை மற்றவர்கள் புரிந்துகொள்வது மிகவும் சிரமம். நான் ஒரு பூவை உருவாக்க விரும்பினால், அதை ஒவ்வொரு அணுவாகக் கட்டமைத்தேன். இந்த ஒரு பூவை மனதளவில் உருவாக்குவதற்கு எவ்வளவு நேரமாகும் தெரியுமா? இதேவிதமாக, ஒவ்வொரு அணுவாக, புள்ளி புள்ளியாக எனக்கே எனக்கென்று சொந்தமான ஒரு முழு உலகையே நான் படைத்துக் கொண்டேன். அந்த வயதில், நீர்யானை எனக்கு மிகவும் விருப்பமான விலங்காக இருந்தது. நான் சிருஷ்டித்துக்கொண்ட உலகில் ஏராளமான நீர்யானைகள் சிறியது, பெரியது, நட்பான நீர்யானை, முரட்டுத்தனமான நீர்யானை என்று விதவிதமான நீர்யானைகளும் மற்றும் பற்பல விலங்குகளும் இருந்தன. ஒரே இடத்தில் உட்கார்ந்து, ஐந்தாறு மணி நேரங்கள் அசையாமல் இருந்து, அணு அணுவாகக் கட்டமைப்பேன். அது எனக்கு அவ்வளவு தத்ரூபமாக, நூறு சதவிகிதம் உண்மையாக இருந்தது.

என்னுடைய சகோதர உறவுமுறைச் சிறுவன் ஒருவன், என்னைவிட ஒரு வயது இளையவன், அப்போது என்னுடன் வீட்டில் இருந்தான். அவனது கிராமத்துப் பள்ளியில் அவன் சரிவரப் படிக்காத காரணத்தால், இங்கே எங்கள் வீட்டிற்கு வந்து தங்கிப் படித்து வந்தான். எனது தந்தையார் கண்டிப்புடன் ஒழுக்கம் மற்றும் கல்வி கற்பிப்பவர் - என்னை மட்டும் அவரால் நிர்வகிக்க இயலவில்லை என்றாலும் - என்று உறவினரிடையே பெயர் பெற்றிருந்தார். எனவே அவன் எங்கள் வீட்டில் தங்கிப்படிக்க அனுப்பி வைக்கப்பட்டான். ஒரு நாள், என்னுடைய உலகிற்கு அவனை சுற்றுலா அழைத்துச் சென்றேன். அதன் பிறகு அவன் அந்த உலகின் மீது பைத்தியமாகி, தினமும் அதற்குள் செல்ல விரும்பினான். ஒரு நாள் நான் அவனை அழைத்துச் செல்லாமலிருந்தாலும், அழுது, கத்தி, ஆர்ப்பாட்டம் செய்வான். எனது தாயார் என்னிடம் வந்து, “இவனை நீ என்ன செய்துவிட்டாய்?” என்று கேட்பார்கள். அந்த அளவுக்கு அவனுக்கு அது அவ்வளவு தத்ரூபமான உண்மையாக இருந்தது.
இதுதான் கற்பனை எனப்படுவது. நவீன இயற்பியல் மற்றும் நரம்பியல் விஞ்ஞானத்தின்படி, கற்பனைக்கும், பிரமை அல்லது மனத்தோற்றத்திற்கும் உள்ள இடைவெளி மிக மெல்லியது. ஆனால் நிச்சயம் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. என்ன வேறுபாடு என்றால் - கற்பனைக்காட்சி என்பது தன்னுணர்வற்ற நிலையில் உங்களுக்குள் எழுவது, அது விழிப்புணர்வான செயல்பாடு அல்ல. ஆனால், அதே கற்பனையை நீங்கள் முழு விழிப்புணர்வுடன் உருவாக்கி, உங்களது உயிர்சக்தியால் அதற்கு உயிரூட்டினால், அது உண்மைக் காட்சியாக மாறமுடியும்.
மனப்பிரமை என்பது என்ன? உண்மைக் காட்சி என்பது என்ன? பிரமையின் முக்கியமான எதிர்மறை அம்சம் என்னவென்றால், அது கட்டுப்பாடில்லாமலும், தன்னுணர்வற்ற நிலையிலும் நிகழ்கிறது. பிரமை என்பது உங்களை எந்தக் கட்டத்திற்கும் அழைத்துச் சென்று, உங்களது வாழ்வை அழிக்கக்கூடியது. ஏனெனில் உங்கள் கற்பனையின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இல்லை. அதுதான் இதில் உள்ள பிரச்சனை. உங்கள் கற்பனை உயிர்சக்தியினால் செறிவூட்டப்படவில்லை. ஆகவே அது உண்மைக்காட்சியாக மாறவில்லை. அது உண்மைக் காட்சிக்குள் உங்களைக் கொண்டு நிறுத்துவதுமில்லை அல்லது வேறொரு உண்மைக் காட்சியை உருவாக்குவதுமில்லை. உண்மை நிலையிலிருந்து உங்களை அது விலக்கி அழைத்துச் செல்கிறது. இதுதான் பிரமை நிலையில் இருக்கின்ற ஆபத்து. உங்களது பிரமையை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால், அழகான பிரமைக்காட்சிகளை மட்டும் காண முடியுமென்றால், அதில் என்ன தவறு உள்ளது? எப்போதும் நீங்கள் பிரமையிலேயே இருக்கலாம். ஆனால் இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால், பிரமைக்காட்சியை உங்களால் கட்டுப்படுத்த முடியாது, அது தன்னிச்சையாக அதன் போக்கில் வளரக்கூடியது. இன்றைக்கு அது அற்புதமாக இருக்கும், நாளைக்கே உங்கள் மீது தேவையற்றவைகளைத் திணித்து, உங்களை மந்தப்படுத்தும். பிறகு சிறிது காலம் கழித்து அது முற்றிலும் கட்டுப்பாடற்றுவிடுகிறது. இறுதியில் உங்களை பைத்தியக்கார நிலைக்குள் தள்ளுகிறது.

நீங்கள் காணும் கற்பனை உங்கள் கட்டுப்பாட்டை மீறி ஒருவித வெறித்தனத்தை எட்டும்போது, அதை பிரமைத் தோற்றம் என்கிறோம். ஆனால் விழிப்புணர்வோடு கற்பனை செய்யும்போது, அது வெறுமனே கற்பனை மட்டுமே. ஒருவரின் கற்பனையானது உண்மையில் மூர்க்கத்தனத்தை அடையும்போது, அதற்கும் அவர் தன்னையே பாராட்டிக் கொள்கிறார். உண்மையில் கட்டுப்பாடற்ற கற்பனைக்கும் விழிப்புணர்வான கற்பனைக்கும் இடையிலான வித்தியாசம் முற்றிலும் வெவ்வேறானது. விழிப்புணர்வுடன் கற்பனை செய்வது, உங்கள் மனதின் திறனை பெருமளவு மேம்படுத்தும்.
ஒரு எறும்பைக் கவனித்து, அதன் ஒவ்வொரு பாகத்தையும் மனதளவில் மறுஉருவாக்கம் செய்துதான் பாருங்களேன். அதற்கு எவ்வளவு கவனமும், திறனும் தேவைப்படுகிறது என்பது புரியும். மிகவும் சின்னஞ்சிறு உயிரினமான ஒரு எறும்பை மனதில் மறு உருவாக்கம் செய்வதற்கு எத்தனை விஷயங்களைக் கையாள வேண்டியுள்ளது? இதை நீங்கள் எப்போதாவது செய்ததுண்டா? எறும்போடு இல்லையென்றாலும் வேறு எதையாவது முயன்று பார்த்ததுண்டா? உங்களது சுண்டு விரலை மட்டுமாவது, ஒவ்வொரு அணுவாக உங்கள் மனதில் மறு உருவாக்கம் செய்து பாருங்கள். அது ஒரு அபூர்வமான முயற்சி என்பதுடன், இந்த முயற்சியை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு எடுத்துச் சென்றால், தன்னளவில் அது ஒரு பிரம்மாண்டமான செயல்முறையாக இருக்கக்கூடும். ஒரு மனிதருக்கு அது பிரமிக்கத்தக்க விதத்தில் சக்தி ஊட்டமுடியும்.

நீங்கள் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்யும்போது, உங்களுக்குள் ஏற்படுகின்ற உணர்தல்கள் பிரமையா அல்லது உண்மையான உணர்தலா என்பதை எப்படி அறிவது? உங்களுக்கு பிரமையா என்ற சந்தேகம் எழுந்தால், அது உண்மையான உணர்தல் என்பதை விட மனப்பிரமையாகவே இருக்கும். ஏனெனில் உண்மையான உணர்தலாக இருந்தால், இயல்பாகவே உங்களுக்குள் சிறிதளவேனும் உள்நிலை மாற்றம் நிகழும். உங்கள் உணர்தல் பிரமைதான் என்றால், எப்படியும் அது கால விரயம்தான். எனவே உங்களது நிலையை சந்தேகித்தால், நீங்கள் அதை பிரமையாகப் பார்ப்பதே மிகவும் மேலானது. ஏனெனில், பிரமையை நீங்கள் உண்மை என்று நம்பத் தொடங்கிவிட்டால், அதன் பிறகு மனப்பிரமையின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு இருக்காது. அது கட்டுக்கடங்காமல் போய்விடும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (4)

 • R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா

  ஒண்ணே ஒண்ணு தான் புரியவில்லை. எங்கள் சோழ மகாராஜா, இன்றைய தேவையை நன்கு உணர்ந்து, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே, என்றும் அழியாத கோவில்களை கட்டிவிட்டு சென்று விட்டார்கள். அதை நன்றாக பேணி பாதுகாத்தலே போதும். இது மாதிரி டூபாக்கூரு ஆசாமிகள் கிளம்புவது கலி காலத்தின் கோலம். அவ்வளவு தான்.

 • Reality - India,இந்தியா

  Even if an individual doesn't bother much about god and spiritual experiences, a human has to strive to speak the truth, be honest, and always be conscious in controlling the urge to spoil other's life. If not, they can better occupy a place in forest and join forest habitation. They don't' belong to civil group.

 • Govindan - India,இந்தியா

  Genuine spiritual experiences can be partial truth, wich if carefully solidified with attention, may lead to Mahavishwasam (100% faith in God). You may take it as divine is just helping you with a chance to develop faith in your heart.

 • Vijay - India,இந்தியா

  There is one truth, which is God. Everything is deba, and can be discussed. It is an individual’s effort for which God responds to. To qualify yourself for such response, you have to listen to God realised Mahatmas, who are plenty in India.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement