Advertisement

அடுத்த பூதம் வருகிறது உஷார்

‛ஆர்செப்' என சுருக்கமாகவும்,ஆர்.சி.இ.பி., - 'ரீஜினல் காம்ரிஹென்சிவ் எகானமிக் பார்ட்னர்ஷிப்' எனும், மண்டல பொருளாதார புரிந்துணர்வு கூட்டமைப்பு தான் அந்த புதிய பூதம்!
டபிள்யு.டி.ஓ., எனப்படும், உலக வர்த்தக மையத்தின் ஆட்டங்களையும், அதன் கேடுகளையும் நாமறிவோம். அதனால் வந்த பல உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், அவற்றின் பின்விளைவுகள், கேடுகளையும் நன்கு அறிவோம்.
(உலகமயமாக்கல், திறந்த பொருளாதாரம் என்றெல்லாம் கதை விட்டு, இதன் பிறகே பல கேடுகளும் வரத் துவங்கின. பகாசுர பன்னாட்டு நிறுவனங்கள், பல சந்தைகளை கைப்பற்றுவதும், ஆளுமை செய்யும் யுக்திகளுடன் இயங்குவதும், இதற்கு பிறகே.
சுரண்டலும், எளியோரை விரட்டுதலும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதும், சிறு அங்காடிகளை அழிப்பதும், இதன் பிறகே பெரிதாக உருவெடுத்தது)
ஆனாலும், நம் அரசுகள் கற்றதாக தெரியவில்லை. அரசு மாற்றம் ஏற்பட்டாலும், தீங்கு விளைவிக்கும் கொள்கைகளிலும், பேராபத்தான ஒப்பந்தங்களிலும் மாற்றம் இருப்பதில்லை.
இந்தியா, சீனா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஜப்பான், கொரியா மற்றும் பத்து தெற்காசிய நாடுகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு இது; பல நாடுகளுக்கான புரிந்துணர்வு- ஒப்பந்தம் இது.
இதனால் பல பிரச்னைகள் வரும் என, பல வல்லுனர்களும் எச்சரிக்கை விடுகின்றனர். பெரிய நிறுவனங்களுக்கு சாதகமான பல ஷரத்துகள் இதில் உள்ளன.
அவை, பெரும் சக்தி பெற்று, அரசுகளின் மீது சர்வதேச அரங்கில் வழக்கு தொடர சாதகமான ஷரத்துகள் அவை. அவர்களின் நிறைவேற்றாத ஒப்பந்தங்களுக்கு, தவறான பொருள்களுக்கு, அபராதமோ, தண்டனையோ இல்லை.
முதலில், இம்மாதிரி ஒப்பந்தங்களில் இறக்குமதி வரிகள் தகர்க்கப்படும். உதாரணமாக, சமீபத்தில் கோதுமை. கடந்த செப்டம்பரில், 25 சதவீத இறக்குமதி வரியிலிருந்து, 15 சதவீதமாக குறைக்கப்பட்டு, பின், டிசம்பரில், வரியே இல்லாமல்ஆக்கப்பட்டது.
அப்படியென்றால், மகசூலின்போது நம் நாட்டில் விளையும் கோதுமைக்கு என்ன விலைகிடைக்கும்?
இந்த, ஆர்செப்-ஆல், நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவின் பாலுக்கு சந்தை ஏற்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும், பெரிய அடி விழும்.
உள்நாட்டு முதலீட்டாளர் போல, பன்னாட்டு நிறுவனங்களும் நடத்தப்பட வேண்டும் என்கிறது, ஒரு ஷரத்து.
அரசு உதவியுடன், நில அபகரிப்பு நிகழும். பல நாடுகளில், அன்னியர் நிலம் வாங்குவது கடினம். அந்த ஷரத்துகள் அசைக்கப்படும்; மாற்றப்படும். மொத்தத்தில், சிறு, குறு விவசாயிகளும், பழங்குடியினரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாவர்.
விதை -- ஒரு பெரிய சந்தை. இன்று, உலகின் பெரிய, ஆறு நிறுவனங்கள், ஒன்றை ஒன்று வாங்கி, மூன்றே மூன்று நிறுவனங்களாக திகழ்கின்றன. அவர்களின் சந்தை பசியும், கோர தாண்டவமும், மேலும் பெருகும்.
விதை, அதுவும், அடுத்த தலைமுறைக்கு தாக்கு பிடிக்க முடியாத சோதா விதைகளும், மரபணு விதைகளும் திணிக்கப்படும். விதை சட்டத்திற்கு வழி வகுக்கப்படும் என, தெரிகிறது.
கொலம்பியா மற்றும் பல நாடுகளில் இப்போது கொண்டு வரப்பட்ட தீவிர விதை சட்டங்கள்,- விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, பரிமாறவோ, விற்கவோ கூடாது என்பது போல கொண்டு வர, திட்டமிருப்பதாக தெரிவிக்கின்றன.
இதனால், நம் விதை இறையாண்மை மட்டுமல்லாது, விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும், நம் கை விட்டு செல்லும். விதைகளின் விலையும், 200 - -400 சதவீதம் அதிகரிக்கும் எனவும்,வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
காப்புரிமை, அறிவுசார் சட்டங்கள் என, பல வடிவிலும் அழுத்தங்கள்.விதை பன்மயம் மற்றும் உயிரிபன்மயமும் அழியும் அபாயம்.
நியூசிலாந்தின், பொன்டெர்ரா எனும், பெரிய, அரக்கன் போன்ற, பால் நிறுவனம், நம் நாட்டுக்குள் இவ்வளவு நாள் வர முடியவில்லை. உலகின் பெரிய பால் ஏற்றுமதிநிறுவனம் இது.
நம் சந்தையின் மீது நெடுங்காலமாக கண் வைத்திருந்தது. இப்போது வெளிப்படையாகவே நம் பால்சந்தையை, 'அமுல்' போன்ற நிறுவனங்களிடம் இருந்து, பறிப்போம் என, சவால் விடுகிறது, இந்த ஒப்பந்தம்.
சிறு, குறு விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் கதி என்னவாகும்?
தரக்கட்டுப்பாடு எனும் பெயரில், ஜப்பான், ஆஸ்திரேலியா நிறுவனங்களுக்கு, கம்பளம் விரிக்கப்படும். தரம் மற்றும் சுகாதாரம் தேவை தான். ஆனால், அவையே சிறு வியாபாரிகளால் கையாள முடியாத ஷரத்துகளாக மாறினால், கஷ்டம் தான்.

ரசாயன விவசாயத்திற்கு கடை விரிப்புஇன்று, உலகின் பெரிய விவசாய, ரசாயன உற்பத்தி நிறுவனம், 'சைனீஸ் கெம்!' அவர்களது கொடிய ரசாயனங்களுக்கு சந்தை தேடுவர்... இல்லையா?
அதனால், கொடிய ரசாயன விற்பனை, உபயோகம் பெருகி, மேலும் பல இன்னல்கள் பெருகும். கால்நடை மருந்துகள், பண்ணை இயந்திரங்கள் என, எல்லாவற்றிலும் சுரண்டல், ஆதிக்கம் பெருகும்.
பெரிய அரக்கன் போன்ற நிறுவனங்கள், பெரிய அளவிலான வியாபாரம் போன்றவற்றால், சிறு வியாபாரிகள், தெருமுனை கடைகள் அழியும்.
இதனால், சாதாரண நுகர்வோரான நமக்கு பெரும் நஷ்டம். தொலை நோக்கில் பல பெரிய பிரச்னைகள் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கான சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள் புறம் தள்ளப்படுவர். பலரின் வாழ்வாதாரங்கள் அழியும். விவசாயிகளும் பெருமளவில் பாதிக்கப்படுவர்.
இப்படி, பெரிய வணிகம் அமைந்த நாடுகளில், விவசாயிகளுக்கு பெரும் இன்னல்களே- கிடைத்துள்ளன.
ஆன்லைன் சில்லரை வியாபாரம் வேறு, பல இன்னல்களை கொண்டு வரும். மொத்தத்தில், சில மேலை நாட்டு நிறுவனங்களின் வியாபாரமும், கொள்ளை லாபமும் பெருக, நம் அனைவரது நல்வாழ்வும், வாழ்வாதாரமும், வாழ்கை தரமும், சமரசம் செய்யப்படும்.
இதில், சம்பந்தப்பட்ட பங்குதாரர்களான விவசாயிகள், பொதுமக்கள், நுகர்வோர் மற்றும் மாநில அரசுகள் என, யாரையும் கலந்து ஆலோசனை செய்யாமல், ஒளிவு மறைவுடன் நடக்கும் இந்த ஒப்பந்தங்கள், நல்லதே அல்ல. நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

நாம் என்ன செய்யலாம்?நாம் அனைவரும் முதலில், இந்த மாதிரியான திருட்டு ஒப்பந்தங்களின் மறைமுக செயல்திட்டத்தையும், கொடிய விளைவுகளையும் பொதுதளத்தில் அலசி, அரசுக்கும், ஊடகங்களுக்கும், இவற்றை எதிர்த்து குரல் கொடுத்து எழுத வேண்டும்.
பிரதமருக்கும், வர்த்தக அமைச்சருக்கும் நம் ஆட்சேபங்களை எழுதி, தெரிவிக்க வேண்டும். மிகவும் சதித்திட்டம் நிறைந்த மற்றும் ஜனநாயக விரோதமான ஒப்பந்தம் இது என, பறைசாற்ற வேண்டும்.
விவசாய தலைவர்கள், வி வசாய சங்கங்கள், வணிகர் சங்கங்களும், உடனே அரசுக்கு எழுத வேண்டும். இவற்றை பொது அரங்கில் விவாதிக்க வேண்டும்.
நம் மாநில அரசை, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எழுத சொல்ல வேண்டும். நம் அண்டை மாநிலமான கேரளா ஏற்கனவே, ‛ஆர்செப்'பை எதிர்த்தும், கண்டித்தும், மத்திய அரசுக்கு எழுத வேண்டும்.
பலதளங்களில் இதன் கேடுகளை எடுத்துரைத்து, உண்மையை பரப்பி, இது வந்துவிடாமலிருக்க ஆவண செய்ய வேண்டும்.
சரி செய்ய முடியாத, மீட்டெடுக்க முடியாத, பல ஷரத்துகள் நிறைந்தது இது. ஆகவே,‛ஆர்செப்'பில் மாற்றங்களை நாம் கேட்க வேண்டாம். ஒட்டு மொத்த ரத்து தான், நம் கோரிக்கையாக இருக்க வேண்டும்.
அனந்து,
ஒருங்கிணைப்பாளர்,
பாதுகாப்பான உணவிர்கான கூட்டமைப்பு

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (10)

 • சுவாமி சுப்ரஜனாந்தா - Kualalumpur,மலேஷியா

  இது மிகவும் ஆபத்தான சூழலில் நம் விவசாயம் இருப்பதாய் ஆழமாக செழிக்கிறது.இதில் எல்லாம் கவனம் செலுத்தாமல் தமிழன் Pig Boss பார்த்து கொண்டு இருக்கிறான்.

 • Nallavan Nallavan - Kolkata,இந்தியா

  அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை .... மிக முக்கியமான சமூகப் பிரச்னை ...

 • Rajarajan - Thanjavur,இந்தியா

  ஆகமொத்தம், இந்தியா விற்பனைக்கு. இந்த ஏலத்தில் உலக ஏலதாரர்கள் பங்கு கொள்ளலாம்.

 • ஓணான் - chennai,இந்தியா

  //விவசாயிகள் விதைகளை சேமிக்கவோ, பரிமாறவோ, விற்கவோ கூடாது என்பது போல கொண்டு வர, திட்டமிருப்பதாக தெரிவிக்கின்றன.// இம்மாதிரி ஒப்பந்தங்கள் மிகவும் அபாயகரமானவை. தலைமுறைகளையே ஒரு சில வருடங்களில் ஒழித்துவிடக்கூடியவை. விவசாயம் சார்ந்த விஷயங்களில் நாம் அடுத்தவர்களை சாராமல், நம் பாரம்பரிய முறைகளை மட்டுமே கடைப்பிடித்து, குறிப்பாக விதை விஷயங்களில் எந்த பன்னாட்டு கம்பெனிகளை உள்ளே நுழையவிடாமல், மரபணு மாற்றம் செய்யப்பட எந்த விதையானாலும் அவற்றை புறந்தள்ளி, இயற்கை விவசாயத்துக்கு ஆதரவளிப்போம். இதற்கு ஒத்துவராத எந்த அரசாங்கமும் நமக்குத் தேவையில்லாத ஒன்று. இன்றைய வாழ்க்கை முறையை நம் எதிர்காலத்திற்காக நாம் குறைத்துக்கொள்வது தயார்தான். ஆனால், அதையே பன்னாட்டு நிறுவனங்களுக்கு பாட்டுக்கம்பளம் விரிக்கும் வாய்ப்பாகப் பயன்படுத்த நினைத்தால், நம் எல்லோருக்கும் அழிவு உறுதி. மக்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச்செல்லாத ஆட்சிகள் மாறும். அவ்வளவு தூரம் செல்லாமல், சீக்கிரம் நல்லதே நடக்குமென்று நம்புவோம். இந்திய பாரம்பரிய விவசாயம் உலகில் மிகச்சிறந்த முறையென்று உலகிற்கு பறைசாற்றுவோம்.

 • annaidhesam - karur,இந்தியா

  அனந்துவின் கருத்தை ஊடகங்கள் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும்..அதேபோல் நம் உள்நாட்டில் இருக்கும் நிறுவனங்களுக்கின் தரம் உயரவேண்டும்..இல்லாவிட்டால் அந்நியநாடுகளின் குறுக்கீடு இருக்கத்தான் செயும்..

 • Mayilcity Ragu Raman - Mayiladuthurai,இந்தியா

  , நம் விதை இறையாண்மை மட்டுமல்லாது, விவசாயிகளின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும், நம் கை விட்டு செல்லும். விதைகளின் விலையும், 200 - -400 சதவீதம் அதிகரிக்கும் எனவும்,வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.ப்ளீஸ் ஊடகம் இதற்கு முன்னுரிமை எடுக்க வேண்டும் ப்ளீஸ்

 • m.arunachalam - trichy,இந்தியா

  Our politicians always behaved with know it all attitude. This has lead to lot problems previously also. Only big noise like an empty vessel on useless things. Real issues are not handled well. The after effects must be analyzed well before signing anything of this sort now . Not after losing our identity and rights

 • Mayilcity Ragu Raman - Mayiladuthurai,இந்தியா

  நதி நீர் இணைப்பு செய்ய மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் பழனி சாமீ இது குறித்து பேசவேண்டும்

 • Mayilcity Ragu Raman - Mayiladuthurai,இந்தியா

  மிக மிக முக்கியமான விஷயம் இது இதனை ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் மக்களுக்கு தெரியப்படுத்தி மத்திய அரசுக்கு முறையான அழுத்தம் தரவேண்டும். நன்றி அனந்து சார்.

 • B M Jawahar Muthukrishnan. - Nagapattinam,இந்தியா

  மிக மிக முக்கியமான விஷயம் இது இதனை ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் மக்களுக்கு தெரியப்படுத்தி மத்திய அரசுக்கு முறையான அழுத்தம் தரவேண்டும். நன்றி அனந்து சார்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement