Advertisement

இது உங்கள் இடம்

நல்லரசு விரைவில் மலர வேண்டும்!
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: ஆறு மாதங்களாக, தமிழகத்தில் ஆட்சியே நடப்பது போல் தெரியவில்லை. உடைந்துப் போன, அ.தி.மு.க., அணிகள் இணைப்பு பற்றிய முயற்சிகள் தான் நடந்து வருகின்றன.இந்நாள் முதல்வர் பழனிசாமி தரப்பிற்கும், முன்னாள் முதல்வர் பன்னீர் தரப்பிற்கும் இடையே நடந்த இணைப்பு பேச்சு தோல்வியில் முடிந்தது; இன்று வரை, ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைத்து கொள்கின்றனர்.'ஓ.பி.எஸ்., நாடகமாடுகிறார்' என்கிறார், முன்னாள் அமைச்சர், பரிதி இளம்வழுதி. 'ஈ.பி.எஸ்., தான் நாடகமாடுகிறார்' என, பன்னீர் கூறுகிறார்; மொத்தத்தில், எல்லாமே நாடகம் தான்!'ஜெயலலிதா ஆட்சியை தொடருவோம்' என, பிளவுப்பட்ட அனைத்து பிரிவுகளும் கூறுகின்றன. ஜெயலலிதா குற்றவாளி; இன்று உயிரோடு இருந்திருந்தால், சிறை சென்றிருப்பார் என்பதை அனைவரும் மறந்து விட்டனர் போலும்.சிறை கைதி சசிகலா வழிகாட்டலில், ஆட்சியை வெட்கமின்றி நடத்திக் கொண்டிருக்கின்றனர். கோடிகளுக்கு விலை போகும் கேடு கெட்ட, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கின்றனர்.
இரட்டை இலையை மீட்பதும், அணிகள் இணைவதும் தான் தற்போதைய தலையாய பிரச்னை; மக்கள் பிரச்னைகள் பற்றி, பழனிசாமி தலைமையிலான, 'பினாமி' அரசுக்கு கவலை இல்லை.ஜெ., மர்ம மரணத்தை விசாரித்து உண்மையை கொண்டு வர வேண்டும்; சசிகலா, தினகரன் குடும்பத்தினரை அடியோடு கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்து, அரசியல் பண்ணுகிறார், பன்னீர்.ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, 'என் அத்தையை, காசுக்காக சசிகலாவுடன் சேர்ந்து, என் சகோதரன் தீபக் கொன்று விட்டான்' என்கிறார். அ.தி.மு.க., அரசு எவ்வளவு காலம் நடக்கும் என, தெரியவில்லை.தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் சொன்னது போல், நல்லது நடக்கட்டும்... அது, நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லதாய் இருக்கட்டும். ஒட்டுமொத்த தமிழர்களும் ஆசைப்படும் ஒரு நல்லரசு தமிழகத்தில் விரைவில் மலர வேண்டும்!
பொறுப்பைதட்டி கழிக்கும்தனியார் பள்ளிகள்!
எம்.எல்.ராகவன், பேராசிரியர் (பணி நிறைவு), திருப்பூரிலிருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: 'எவ்வளவுக்கு எவ்வளவு மொபைல் போன், லேப் டாப் போன்றவற்றை தவிர்க்கிறோமோ, அந்தளவிற்கு, கண்ணுக்கும், மூளைக்கும் நல்ல ஓய்வு கிடைக்கும். இதனால், உடலும் நல்ல ஆரோக்கியம் பெறும்' என, எல்லா மருத்துவர்களும், ஒரே மாதிரியான கருத்தையே கூறுகின்றனர்.சமீபகாலமாக, பல தனியார் பள்ளிகளில், எந்த விபரம், விளக்கம் கேட்டால், 'எங்கள் மெயிலில் போய் தரவிறக்கம் செய்து பார்த்துக் கொள்ளுங்கள்' என, சர்வ சாதாரணமாக கூறி, தப்பித்துக் கொள்கின்றனர்.அன்று, பள்ளிகளில் ஏதேனும் தகவல் கேட்டவுடன், தக்க​ பதில் சொல்வர். 'இன்னாரை அணுகுங்கள்' எனக் கூறி வழி அனுப்புவர்!இன்று, அதை மாற்றி, 'அறிவிக்கை பலகையை பாருங்கள்; குறிப்பேட்டில் தகவல் எழுதி அனுப்புகிறோம்' என்கின்றனர். அதையும் மாற்றி, 'எந்த தகவலுக்கும் எங்கள் வலைதளங்களையே பாருங்கள்' எனச் சொல்லி பொறுப்புகளை தட்டி கழிக்கின்றனர்.வலைதளங்களை தேடிப் பார்த்து, தகவல் தெரிந்து கொள்ளும் அளவிற்கு, வீட்டில் எல்லாருக்கும் விபரம் போதாது. விபரம் தெரிந்தாலும், அதை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்க எல்லாருக்கும் அவகாசம் கிடைக்காது. எல்லா மொபைலிலும், வலைதள வசதி இருக்கும் என, சொல்லவும் முடியாது.தகவலை குறிப்பேட்டில் எழுதி, அனுப்புவது அவ்வளவு கடினமானதா என தெரியவில்லை. தனியார் பள்ளிகள் எல்லாம் எதற்கு... கல்வியை வியாபாரமாக மாற்றவா...இதெல்லாம் போதாதென்று, 'புராஜெக்ட்' எனக்கூறி, மாணவர்களிடம் ஒப்படைகின்றனர்; அதை, கூடுதல் வேலை பளுவாக, பெற்றோர் தான் செய்ய வேண்டியுள்ளது.இன்றும், இளம் சிறார்கள் சுமக்க முடியாத அளவுக்கு பாடப் புத்தகங்களை சுமந்து செல்லும் காட்சி, பார்க்கவே பரிதாபமாக உள்ளது. இவ்வளவு சிரமங்களை ஏன் தாங்கி, தனியார் பள்ளிகளை நாட வேண்டும் எனக் கேட்கலாம்.என்ன செய்வது... அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள், வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகள் இல்லையே!தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளை நவீனமயமாக்க வேண்டும். இதைச் செய்தால் மட்டுமே சிறந்த, பயனுள்ள சுமையற்ற கல்வியை ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி, அனைவருக்கும் வழங்க இயலும்!
சிறுவனிடம்திருநங்கைகளின்பகல் கொள்ளை!
எல்.நாதன், நெல்லித்தோப்பு, புதுச்சேரி மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: புதுச்சேரி, சாரம் பகுதியில், பானி பூரி கடையில், சிலர் சாப்பிட்டு கொண்டிருந்தனர்; ௧௬ வயது சிறுவனும் இருந்தான்.அப்போது, நான்கு திருநங்கைகள் அங்கு வந்து, கை தட்டி காசு கேட்டனர். சிலர் காசு கொடுத்தனர். சிறுவனிடம் காசு கேட்டனர்; அவன், 'இல்லை' என்றான்.ஒரு திருநங்கை, அவன் சட்டை பையில் கையை விட்டு, ௧௦௦ ரூபாயை பறித்தார். பதறிப் போன சிறுவன், 'அக்கா... என் பணத்தை கொடுங்க...' என கெஞ்சியபடி துரத்தினான். ஆனால், அவர்கள் அங்கிருந்து சென்றனர்.சிறுவன் கண் கலங்கியபடி கடைக்காரரிடம், 'என்னிடம் பணம் இல்லை; நான் நாளை தருகிறேன்' என்றான்.கடைக்காரர், 'நீ ஏமாந்து காசை பறி கொடுப்பாய்; அதற்கு நானா பொறுப்பாக முடியும்; சாப்பிட்டதற்கு காசு வைக்காமல் நகராதே' என்றார்.சிறுவன் அழுதபடி நின்றான். சாப்பிட்டு கொண்டிருந்தோரில் சிலர், ௧௦, ௨௦ ரூபாய் என, சிறுவனிடம் தந்தனர். அதை, கடைக்காரரிடம் கொடுத்து, சிறுவன் சென்றான். சிறுவனின் பரிதாபத்தை கண்டு அதிர்ந்தேன்.
இன்று, திருநங்கைகளில் பலர், சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வருகின்றனர். அவர்கள் மீதான கேலி, கிண்டலும் சமுதாயத்தில் குறைந்து வருகிறது.பட்டப்பகலில் சிறுவனை மிரட்டி, சட்டை பையில் இருந்து பணம் பறிப்பது போன்ற அடாவடியில் ஈடுபடுவதால், ஒட்டுமொத்த திருநங்கைகள் மீதும் வெறுப்புணர்வு ஏற்படுகிறது. அவர்கள் மீது, போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Technology swallows our hard earned money. g.s .rajan Chennai

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    சிக்னல்களில், பேருந்துகளில், ரயில்களில் ஆங்காங்கு பிச்சையெடுத்தும் , பொருள்களைத் திருடியும் சமூகம் மதிக்க முன்வந்தால்கூட இவர்கள் தங்களைத் தாழ்த்திக்கொள்வதை நிறுத்துவதாகத் தெரியவில்லை

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement