Advertisement

அக்கம் பக்கம்

தலைவிதி இவ்வளவு தான்!

ஜனாதிபதி தேர்தலுக்கான நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில், காங்., துணைத் தலைவர் ராகுலின் செயல்பாடுகள், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளை அதிருப்திக்கு ஆளாக்கி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில், பலமான வேட்பாளரை நிறுத்த, எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும்
மெனக்கெடுகின்றனர்.

லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ், அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி போன்ற தலைவர்கள் எல்லாம், அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில், இத்தாலியில் உள்ள, தன் பாட்டி வீட்டுக்கு செல்லப் போவதாக ராகுல் அறிவித்துள்ளது, காங்., நிர்வாகிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 'ஏற்கனவே, ராகுலுக்கு தலைமை பண்பு இல்லை என, பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர். விரைவில் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில், சாமர்த்தியமாக காய் நகர்த்தி, சாதித்து காட்டுவதை தவிர்த்து, இத்தாலிக்கு ஓட்டம் பிடிக்கிறாரே' என, புலம்புகின்றனர்.
ராகுலோ, இதை பற்றி எல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. அவரை சந்தித்து, இது குறித்து பேச முயற்சித்த மூத்த தலைவர்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், நொந்து போன அவர்கள், 'நம்ம கட்சி யின் தலைவிதி இவ்வளவு தான்' என, தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்திக் கொள்கின்றனர்.

விரக்தியில் யோகி!

உ.பி., முதல்வராக, பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத், முதல்வராக பதவியேற்றபோது, 'மிகவும் செல்வாக்கான அரசியல்வாதி; பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித் ஷாவின் கைப்பாவையாக செயல்பட மாட்டார்; சுதந்திரமாக செயல்படுவார்' என, பரவலாக பேச்சு எழுந்தது.
இதை நிரூபிக்கும் வகையில், அவரது செயல்பாடுகளும் அதிரடியாக இருந்தன. தாமதமாக அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்களுக்கு, 'மெமோ' கொடுப்பது, பெண்களை கிண்டல் செய்யும் ரோமியோக்களை, 'பெண்டை' கழற்ற, தனிப் போலீஸ் படையை அமைத்தது என, அதிரடி காட்டினார்.
ஆனால், சமீபகாலமாக, யோகி ஆதித்யநாத், உற்சாகமின்றி காணப்படுகிறார். இதுபற்றி விசாரித்தபோது தான், மத்திய அரசுக்கும்,
அவருக்கும் மோதல் போக்கு இருப்பது தெரியவந்தது.
உ.பி., மாநில கேடர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவரின் செயல்பாடு, யோகி ஆதித்யநாத்துக்கு மிகவும் பிடித்து விட்டது.
அவர், தற்போது, மத்திய அரசு பணியில் உள்ளார். அவரை, உ.பி., மாநில முதன்மை செயலராக நியமிக்க விரும்பிய யோகி, அதுகுறித்து, சில வாரங்களுக்கு முன், பத்திரிகையாளர்களிடமே, தன் விருப்பத்தை தெரிவித்தார்.
ஆனால், 'அவரை மத்திய அரசு பணியிலிருந்து அனுப்ப முடியாது' என, மத்திய அரசு கைவிரித்து விட்டது.
இதனால், விரக்தி அடைந்துள்ள யோகி, 'எனக்கு விருப்பமான ஒரு அதிகாரியை, என் தேவைக்கு பயன்படுத்த முடியவில்லையே; நான், முதல்வராக இருந்து என்ன பயன்' என, புலம்புகிறார்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement