Advertisement

'டவுட்' தனபாலு

திருவாடானை, எம்.எல்.ஏ., கருணாஸ்: அம்மா என்னை திருவாடானை தொகுதியில் வெற்றி பெற வைத்தார். அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்க, மிக முக்கிய காரணமாக இருந்தவர், சின்னம்மா தான்.

டவுட் தனபாலு:
ஜெ., இருந்த போது, சட்டசபையில் அவரை பாராட்டி, பல பாடல்கள் பாடினீங்க... எம்.எல்.ஏ., விடுதி வளாகத்தில், நாய்கள் படுக்கும் இடத்தில் துாங்கிய என்னை, எம்.எல்.ஏ.,வாக்கினாருன்னு, ஜெ.,வுக்கு நன்றி தெரிவித்தீங்க... அதற்கெல்லாம் வாய்ப்புக் கொடுத்த சசிகலாவை, ஏன் அப்போ ஒரு வார்த்தை கூட குறிப்பிடலை... மறந்துட்டீங்களா... மறைச்சுட்டீங்களா என்பது தான், மக்களின், 'டவுட்!'

லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை: ஜனாதிபதி தேர்தலில், யாருக்கு ஆதரவு என்பது குறித்து, கட்சி தலைமை ஓரிரு நாட்களில் முடிவு செய்யும்.

டவுட் தனபாலு: எந்த கட்சித் தலைமை... பா.ஜ.,வின் தலைமையா... ஏன் இந்த, 'டவுட்'னா, பா.ஜ., வேட்பாளரை, அ.தி.மு.க., ஆதரிக்கும்னு, அக்கட்சி நிர்வாகிகள் அடித்துச் சொல்லி வர்றாங்களே... ஜனாதிபதி தேர்தலில், கட்சிகளின் ஆதரவைத் திரட்ட அமைக்கப்பட்ட மூவர் குழுவும், ஒற்றை இலக்க, எம்.பி.,க்களை கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்களை எல்லாம் வீடு தேடிச் சென்று, சந்தித்து வர்றாங்க... 50 எம்.பி.,க்களை கொண்ட உங்களை, இன்னும்
சந்திக்க வராததை பத்தி என்ன நினைக்குறீங்க...!

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: 2009 லோக்சபா தேர்தலில், மதவாத சக்திகளின் கோட்டையாக இருந்த, உ.பி.,யில், 80 தொகுதிகளில், 21 தொகுதிகளில், காங்கிரசை வெற்றி பெற செய்த பெருமை, ராகுலுக்கு உண்டு.

டவுட் தனபாலு:
அதென்னங்க, 2009ம் வருஷத்தோடு நின்றுட்டீங்க... அதன்பின், 2014ம் ஆண்டுல லோக்சபா தேர்தலும், மூணு மாசத்துக்கு முன்னாடி சட்டசபை தேர்தலும் நடந்துச்சே... அதுல, ராகுல் என்ன சாதித்தாருங்கற விபரத்தையும் சொன்னாத்தானே, நாளுக்கு நாள் அவரின் பெருமை வளருதா, சரியுதா என்பதை, 'டவுட்' இல்லாம புரிஞ்சிக்க முடியும்...!

காங்., -- எம்.எல்.ஏ., பிரின்ஸ்: தமிழக மீனவர்கள் பிரச்னையில், மத்திய அரசு எந்த நடவடிக்கையும்எடுக்காமல் உள்ளது.

டவுட் தனபாலு: இதை, ஆளும், அ.தி.மு.க., அரசு சொன்னால் பரவாயில்லை... நீங்க சொல்லலாமா... கச்சத்தீவை காங்கிரஸ் அரசு தாரை வார்த்தது தான், இத்தனை பிரச்னைக்கும் காரணம்... இதற்கு தீர்வு என்ன... 'அடுத்த நாட்டு மீனவர்கள் என்பதால் தான், இலங்கை கடற்படை கைது செய்யுது... புதுக்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளையும் தாரை வார்த்துக் கொடுத்திடலாம்'னு ஏதும் சொல்லிடுவீங்களோ என்ற, 'டவுட்' வருதே...!

முதல்வர் பழனிசாமி:
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு, நிதி ஆதாரம் பெறவே, பிரதமர் மோடியை சந்திக்கிறேன்.

டவுட் தனபாலு: சமீபத்தில், உங்க உறவினரை அழைத்துக் கொண்டு, பிரதமரை சந்தித்தீங்களே... தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த, அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு உள்ள அக்கறையை விட, அவருக்குத்தான் அதிகமா இருக்கான்னு, இனி, 'டவுட்' வருமே, அதை எப்படிச் சமாளிப்பீங்க...!

த.மா.கா., தலைவர் வாசன்: உள்ளாட்சி தேர்தலை எதிர்பார்த்து உள்ளோம். தேர்தல் நேரத்திலேயே, கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

டவுட் தனபாலு: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பன்னீர் அணிக்கு ஆதரவு தெரிவித்த நீங்க, இந்தக் கூட்டணி நிலைக்கும்னு பேசினீங்களே... இப்போ என்ன திடீர்னு, ஜகா வாங்குறீங்க... இடைப்பட்ட இந்த ரெண்டு மாசத்துல, பன்னீர் அணி பலவீனமாகிடுச்சா... இல்லை, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு உங்க கட்சி பலமாகிடுச்சா என்ற, 'டவுட்' ஏற்படுதே...!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement