Advertisement

இது உங்கள் இடம்

மணிகண்டனுக்கு பெரிய சபாஷ் போடலாம்!

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்தோர், ஆரம்ப கல்வி முதல், உயர் கல்வி வரை, தரமான கல்வி கற்க வேண்டும் என்றால், அது, இன்று இயலாது; அதை தகர்த்தெறிந்தவர், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த, மாணவன் மணிகண்டன்!தன் சொந்த முயற்சியால் படித்து, அதிலும் தமிழில் தேர்வு எழுதி, இந்தாண்டு நடந்த, ஐ.ஏ.எஸ்., தேர்வில் பங்கேற்றார்.

அகில இந்திய அளவில், 1,099 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதில், 332வது, 'ரேங்க்' எடுத்து வெற்றி பெற்றுள்ளார், மணிகண்டன். அவர், எந்த ஒரு பயிற்சி மையத்திலும் சேரவில்லை; இது, ஒவ்வொரு தமிழனையும் தலை நிமிர செய்து விட்டது.இன்று, ஆரம்பக் கல்வி முதல், உயர் கல்வி வரை, வங்கிக் கடன் வாங்கி, பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்; குறிப்பாக, ஆங்கில வழி கல்வியில் பயில வைக்கின்றனர்.

ஆங்கில வழியில் கல்வி கற்றால் தான், தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில், சிறந்த பணிகளுக்கு செல்ல முடியும் என, தப்புக் கணக்கும் போடுகின்றனர்.அவர்கள் அறியாமைக்கு விடை தேடும் வகையில், தற்போது, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ளார், மணிகண்டன்.
அவர், தாய் கூலித் தொழிலாளி. மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் கூறியது போன்று, கனவு கண்டவர், மணிகண்டன். 2012ல், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு எழுதி பணிக்கு சென்றவர். தன் கனவே, ஐ.ஏ.எஸ்., ஆக வர வேண்டும் என, உயர்த்திக் கொண்டவர்.

அவரின், தமிழ் ஆசிரியர் முத்துசாமி கொடுத்த ஊக்கத்தால், ஐ.ஏ.எஸ்., தேர்வை தமிழில் எழுதி, இன்று வெற்றி பெற்றும் விட்டார். அவர், ஒட்டு மொத்த தமிழக மாணவர்களுக்கே, முன் உதாரண புருஷனாக திகழ்கிறார்.ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற, மொழி தடையல்ல என்பதையும், பணம் உள்ளோர் தான், ஐ.ஏ.எஸ்., படிக்க முடியும் என்பதையும் தகர்த்து எறிந்து விட்டார்; சகாயம் ஐ.ஏ.எஸ்., போன்று, ஒரு நேர்மையான அதிகாரியாக, மணிகண்டன் வர வேண்டும்!

பூச்சியியல் துறையைதனியே இயங்கவிடுங்கள்!

கோ.மங்கையர்க்கரசி, மணவாளநல்லுார், கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
பொது சுகாதார துறையின் அங்கமான, பூச்சியியல் துறையில், தமிழகம் முழுவதும், 200க்கும் குறைவான பூச்சியியல் வல்லுனர்கள் பணியாற்றி வருகின்றனர்; இவர்கள் பணி கடும்
சிரமமானது.

எந்த ஒரு இடத்திலும், 'டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா, பன்றிக் காய்ச்சல், யானைக்கால் நோய், எலிக் காய்ச்சல், ஆந்த்ராக்ஸ்' பாதிப்பு இருந்தாலும், இவர்கள் அங்கு வந்து விடுவர்; பூச்சியால் பரவும் நோய்களை கட்டுப்படுத்துவர்.குறைவான எண்ணிக்கையில் உள்ளதால், இவர்களின் கோரிக்கைகள் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. உழைப்புக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறவில்லை.உதாரணமாக, 30 ஆண்டுகளுக்கு முன், மற்ற சுகாதார துறை பணியாளர்களை விட, இவர்கள் அதிக ஊதியம் பெற்றனர்.

ஆனால், அவர்களின் நிலை படிப்படியாக கீழிறங்கி, தற்போது அவர்கள் செய்யும் பணிக்கு, குறைவான ஊதியம் பெற்று வருவதுடன், எந்த பணியில் சேர்ந்தனரோ, அப்பணியிலேயே நீடிக்கின்றனர்; எவ்வித பதவி உயர்வும் இன்றி ஓய்வும் பெறுகின்றனர்.சுகாதார துறையில், அங்கமாக இருந்த உணவு பாதுகாப்பு துறை, தற்போது, தனித்து இயங்கி வருகிறது. அதுபோல், பூச்சியியல் துறையையும் தனித்து இயங்க செய்தால், அவர்கள் பூச்சியால் பரவும் நோய்களை உடனுக்குடன் கட்டுப்படுத்த வழி ஏற்படும்.

இதுவரை, பூச்சியியல் துறையை தனித்து இயங்க, அரசு முயற்சி செய்யவில்லை. ஏழாவது ஊதியக் குழுவில், பூச்சியியல் துறையினரின் பணி, அவர்கள் பெற்ற கல்வி தகுதி, இவைகளை தீர ஆராய்ந்து, அவர்களுக்கு உரிய ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர் சங்கங்கள் பல போராட்டங்களை நடத்தி, அவர்களின் கோரிக்கையை ஏற்க செய்கின்றனர். ஆனால், குறைந்த அளவே பணியில் உள்ள பூச்சியியல் வல்லுனர்களின், நியாயமான கோரிக்கையை ஏற்று, அதை அரசு நிறைவேற்ற வேண்டும்!

விவசாயிகளிடம்வேண்டாம் அரசியல்!

அ.நசீமுதீன் சித்திக், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
கடன் தள்ளுபடி செய்யும் அரசு தான், விவசாயிகள் நலனை பாதுகாக்கிறது என்ற தவறான கண்ணோட்டத்தை, அரசியல் கட்சிகள் பரப்பி விட்டன.அழிந்து வரும் விவசாய தொழிலை காப்பாற்ற, எந்த அரசியல் கட்சி தலைவரும் திட்டவட்டமான தீர்வுகளை முன் வைக்கவே இல்லை.

கடன் தள்ளுபடியாகும் என்ற எதிர்பார்ப்பில், விவசாயத்தில் நல்ல வருமானம் பார்த்த விவசாயி கூட, கடனை திருப்பி செலுத்துவதில்லை.'பசுமை புரட்சி உருவாக்க வேண்டும்; ஆனால், கடன் தள்ளுபடிகளால் அல்ல. விவசாய தொழிலை லாபகரமாக்குவதே என் அரசின் குறிக்கோள்' என, அன்றைய பிரதமர் வாஜ்பாய் தெரிவித்தார்.தமிழகத்தில், ௨௦௦௬ல், கருணாநிதி தலைமையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றது. முதல் கையெழுத்தாக, விவசாய கடனை தள்ளுபடி செய்து
உத்தரவிட்டார்.
விவசாயிகளின் துயரம், கடன் சுமையை குறைக்க, நீண்ட கால கண்ணோட்டத்துடன் திட்டமிட வேண்டும்; அதில், அரசியல் லாபம் இருக்கக் கூடாது.திராவிட கட்சிகளின் ஆட்சிகளில், கடன் தள்ளுபடி, உண்மையான பயனாளிகளுக்கு சென்றடைவதில்லை. நஷ்டமடைந்த, சிறுகுறு விவசாயிகள் கடன் தள்ளுபடி பெறும் நடைமுறையைஅறிவதில்லை.

தரமான விதைகளை, தொழிலில் தொடர்ந்து இருக்கும் விவசாயிகளுக்கு, அரசு இலவசமாக வழங்கலாம்; இத்துடன், 'ஆர்கானிக்' உரங்களையும், பயிர் காப்பீடு பாலிசிகளையும் தரலாம்.
விவசாய உபகரணங்கள் வாங்க மானியம் தரலாம். வேளாண் பல்கலை மாணவர்களை, கள ஆய்வுக்கு அனுப்பி, விவசாயிகளின் பிரச்னைகளை நேரடியாக கேட்டறிந்து, உரிய
தீர்வுகளை அறிவுறுத்தலாம்.

நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆற்று மணல் கொள்ளை, காடுகள் அழிப்பு, இவற்றுக்கு எதிரான, விழிப்புணர்வு ஊட்ட, பள்ளி மாணவர்களை பயன்படுத்தலாம்.காங்கிரஸ் ஆட்சியில் இருந்த, கிராம விவசாய சொசைட்டிகளை உயிர்ப்பிக்க வேண்டும்.வேளாண் மேம்பாட்டு கருத்தரங்குகளை, மத்திய, மாநில அரசுகள், கிராமங்களில் தான் நடத்த வேண்டும். விவசாய கடன் என்ற பெயரில், இனியும் வேண்டாம் அரசியல்!


இவர்களும் 'ஓசி' கேட்டால் நாடு உருப்படுமா?

செ.சிவசுப்ரமணியன், சென்னையிலிருந்து எழுதுகிறார்:
வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு, ரேஷனில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. ஆண்டு வருமானம், ௨௪ ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ளோருக்கும், சம்பாதிக்க முடியாமல் தவிப்போருக்கும், உதவிகரமாக உள்ளது.
இலவச அரிசியை, மாதம், 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுவோரும், கடை, தொழில் செய்து நிறைய வருமானம் ஈட்டுவோரும் வாங்குகின்றனர்.
அவர்களிடம் கேட்டால், 'எங்களுக்கும் இலவச அரிசி வேண்டும்; அரசின் சலுகையை, நாங்கள் ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்' என்கின்றனர். இந்த மனநிலையை அகற்றி விட்டு, தேவை உள்ளோருக்கு விட்டுக் கொடுக்கும் மனநிலை என்று தான் வரப் போகிறதோ!
மத்திய அரசு, எரிவாயு மானியம் தருகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும், மாதத்துக்கு ஒன்று அல்லது இரண்டு சிலிண்டர்கள் உபயோகப்படுத்துவர். அரசின் மானியம், 500 - 600 ரூபாய் கிடைக்கும்.
இதை விட்டுக் கொடுக்க முடியாத லட்சாதிபதிகளும், கோடீஸ்வரர்களும், தமிழகத்தில் வாழ்கின்றனர். அவர்கள் விட்டுக் கொடுத்தால், வறுமையில் உள்ளோருக்கு உதவியாக இருக்கும்; அதற்கு, யார் முன்வருவர்!இலவச பஸ் பாஸ் கோரி, போக்குவரத்துக் கழக கவுன்டரில், வரிசையில் பலர் நின்றனர். அதில், உயர்ந்த அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றோரும், சொந்த வீடு, பங்களா வைத்திருப்போரும் நிற்கின்றனர்; அதை பார்த்த எனக்கு, மனது மிகவும் சங்கடமாக உள்ளது.

அவர்கள் மாத பென்ஷன் கை நிறைய வாங்குகின்றனர். அவர்களின் மகன், மகள்கள், மாதந்தோறும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். போக்குவரத்துக் கழகங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.உண்மையான பயனாளிகள் பயனடைய, அரசு போக்குவரத்துக் கழகங்களில் திட்டம் கொண்டு வந்தால், அதை வசதி படைத்தோரும் உபயோகப்படுத்த முயன்றால், நாடு உருப்படுமா...ஏன் இந்த மனநிலை... வசதியே இல்லாதோருக்கு வேண்டுமானால் கொடுக்கலாம்; எல்லா வசதியும் உள்ளோரும், இலவச சலுகை கேட்பது, பெறுவது என்ன நியாயம்...
பஸ்சில் பணம் கொடுத்து பயணிப்பது ஒவ்வொருவரின் கடமை. அதில் எவ்வளவு செலவாகி விடும். 'ஓசி' என்ற மனநிலையை மாற்றியே தீர வேண்டும்!

என்.எஸ்.எஸ்.,கட்டாயமாகசட்டம் தேவை!

வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
மாணவர்கள் படிக்கும் காலத்தில், சமூகத்திற்கு நல்ல பல வேலைகளை செய்ய வேண்டும்.
மாணவர்கள் மனங்களில், பிறருக்கு உதவுதல், பொதுச் சொத்துகளை பாதுகாத்தல், சமூகப் பணிகள், துாய்மைப் பணியில் ஈடுபடுதல், சுற்றுச்சூழல் காத்தல், மரம் வளர்ப்பில் ஆர்வம் ஏற்பட வைப்பது, பள்ளிகளின் தலையாய கடமை.
பாடப் புத்தகம் தாண்டி, மாணவர்களுக்கு, இன்று நிறைய விஷயங்கள் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய நிலையில், பள்ளிகளும், அரசும் இருக்கின்றன. மேல்நிலைக் கல்வி வகுப்புகளில் மட்டுமே, என்.எஸ்.எஸ்., எனப்படும், நாட்டு நலப் பணித் திட்டம் உள்ளது.
அதில், சில மாணவர்கள் மட்டுமே உறுப்பினர்களாக இருந்து அவ்வப்போது, சமூகப்பணி, முகாம் பணிகளில் கலந்து கொள்கின்றனர். இதுவும், பல மேல்நிலைப் பள்ளிகளில் பெயரளவில் தான் நடக்கிறது.
மாணவர்களுக்கு சமூக கடமைகள் உண்டு. மாணவர்களின் கல்விக்காக, அரசு பல ஆயிரம் கோடி ரூபாயை செலவிடுகிறது.
கல்வித் துறையில் நல்ல பல மாற்றங்களை சமீப காலமாக வழங்கி வரும் அரசு, ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, நாட்டு நலப்பணித் திட்டம் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இதற்குப் பகுதி நேர ஆசிரியர்களை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும்.
வகுப்புவாரியாக குழு
வாகப் பிரித்து, பள்ளி அமைந்த ஊர், அதைச் சுற்றியுள்ள ஊர்களில் துாய்மைப் பணி, பாலித்தீன் ஒழிப்பு, மண் வளம், மரம் வளர்ப்பு, இயற்கை வேளாண்மை, மூலிகை பயிர் நடவு, திடக்கழிவு அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

ஆண்டுக்கு எத்தனை நாள், எத்தனை மணி நேரம் சமூகப் பணியாற்ற வேண்டும் என்பதை துறை, வரையறை செய்ய வேண்டும். இப்பணியில் மாணவர்களை ஆர்வத்துடன் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாணவர்களை பயன்படுத்தி பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும். பள்ளிகளில் நாட்டு நலப் பணி என்பதை கட்டாயமாக்கி, மலர்ச்சி காண வழி செய்யுங்கள்!

பிரச்னைகளைகிளற பார்க்கிறார்ராகுல்!

எஸ்.காதர்பாட்ஷா, பேகம்பூர், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யில் போராடிய விவசாயிகள் - போலீசார் இடையே நடந்த மோதலில், விவசாயிகள் சிலர் உயிரிழந்தனர்.

அதை, காங்கிரசுக்கு சாதகமாக திசை திருப்ப, மூத்த தலைவர்கள் யுக்தி வகுத்தனர். கலவரம் நடந்த பகுதி, பாதிக்கப்பட்டோர் குடும்பங்களை சந்திப்பது என, இரண்டுக்கும் செல்ல திட்டமிட்டார், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்.
துப்பாக்கிச் சூடு நடந்த கிராமத்துக்கு, 100 கார், 1,500 பேருடன் புறப்பட்டார்; ம.பி., போலீஸ் தடுத்து நிறுத்தியது.
தடுப்புகளை மீறி, ஒரே டூவீலரில், ராகுல் உட்பட மூன்று பேர் நுழைய முற்பட்டனர். வாகனத்தை ஓட்டியவர், ஹெல்மெட் அணியவில்லை; இது, என்ன அசட்டு தைரியம்!
உச்சக்கட்ட பாது
காப்பில் உள்ள ஒரு தேசிய கட்சியின் துணைத் தலைவர் பாதுகாப்பு விதிகளை மீறலாமா... நாளைய பிரதமர் என அழைக்கப்படுபவர், போக்குவரத்து விதிமீறி செயல்படலாமா...
கடந்த, 1998ல், ம.பி.,யில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, திக்விஜய் சிங் முதல்வராக இருந்தார். அப்போது, 24 விவசாயிகள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்; அவர் பதவி விலகவில்லை.
விவசாய பொருட்களின் உற்பத்தி அதிகமானதால், விவசாயிகளுக்கு விலை கிடைக்கவில்லை; இதுதான், இன்று, ம.பி., விவசாயிகளின் பிரச்னையாக உள்ளது.
விவசாய சங்கங்கள் முன்வைத்த, 13 கோரிக்கைகளில், 11ஐ, முதல்வர், சிவராஜ் சவுகான் ஏற்றுக் கொண்டார்.நீர்ப்பாசன வசதி இருந்த நிலங்களின் பரப்பளவு, 7.5 லட்சம் ஹெக்டேரில் இருந்து, 40 லட்சம் ஹெக்டேராக அதிகரித்து விட்டது.

'பலியானோர் குடும்பங்களுக்கு, ஒரு கோடி ரூபாய் நிவாரண தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் தரப்படும்' என, ம.பி., முதல்வர் அறிவித்து விட்டார். பிரச்னை முடிவுக்கு வந்து விட்டது; அதை, கிளற பார்க்கிறார், ராகுல்.மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடந்த, 10 ஆண்டுகளில், கர்நாடகாவில் இறந்த விவசாயிகளின் குடும்பத்தாரை, ராகுல் சந்திக்கவில்லை.கட்சி பலவீனமாக உள்ள தமிழகம், உ.பி., மாநிலங்களுக்கு கூட அடிக்கடி விஜயம் செய்யவில்லை. ம.பி., மீது மட்டும் அவருக்கு ஏன், இந்த கரிசனம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Darmavan - Chennai,இந்தியா

    இலவசங்கள்: .இவர் சொல்வது சரிதான்.அரசாங்கமே அதிக வருமானமுள்ளோருக்கு இவைகளை மறுக்கலாம் . முதலில் கேவலமான அரசியல்வாதிகள் /தேர்தெடுக்கப்பட்டவர்கள் தன்னுடைய வசதிகளை விட்டுக்கொடுக்க வேண்டும்.இவர்கள் எந்த வேலையும் செய்யாமல் ராஜ போகம் மக்கள் பணத்திலே அனுபவிப்பது வெளிப்படையான திருட்டு /கொள்ளை .சாதாரண வரி கட்டுபவனுக்கு இதை போதிப்பது கேவலமானது. இது. கொடுக்கப்பட்ட அதிகாரத்தில் மக்கள் சொத்தை கொள்ளை அடிக்க யார் அனுமதி கொடுத்தது..இந்த கேடுகெட்டவர்கள் திருந்தினால் மற்றவர்கள் திருந்துவார்கள்

  • g.s,rajan - chennai ,இந்தியா

    Hats off' to Manikandan I.A.S. . g.s. rajan,chennai.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement