Advertisement

30 நாளில் மூன்று உயிர்கள்; பிரச்னை எங்கே?

இந்த காலத்து பிள்ளைகளின் மன நிலையை அறிந்து கொள்ளவே முடியாதோ என்ற பயமும், பரிதவிப்பும், கோபமும், வருத்தமும், மாறி, மாறி ஏற்படுகிறது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெரியாமலேயே, வாழ்க்கையை நடத்தி வரும் பெரியவர்கள், சமுதாயத்தில் நிரம்பியிருப்பதால், இளையோருக்கு வழி காட்டவோ, தவறை திருத்தி, நல்வழிப்படுத்தவோ யாருமே இல்லை என்ற நிதர்சனம், முகத்தில் அறைகிறது
வட சென்னையின், தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகர் பகுதியில், 19, 17, 16 வயது குழந்தைகள், துாக்கில் தொங்கி விட்டனர்; 30 நாட்களுக்குள்.
மே 5ல், ஜான்சன், 19. பத்தாவது படிப்பை பாதியில் நிறுத்திய, ஆட்டோ ஓட்டுனரான அப்பா. 'கிடைத்த வேலைகளுக்கு போய் சம்பாதிக்கலாமே...' என சொன்ன, வீட்டோடு இருக்கும் அம்மா.
நண்பர்கள், கையில் காசு, போதை என, கொஞ்சம், கொஞ்சமாய் சென்றவன், மீளவே முடியாத கஞ்சா போதைக்குள் போனவன், தன் பிறந்த நாள் அன்று, எல்லோரிடமும் சொல்லி விட்டே, கயிற்றில் தொங்கி, அதை தன் இறந்த நாளாகவும் மாற்றிக் கொண்டான்.
ஜூன் 1, சந்தோஷ், 17. படிப்பு ஏறலை. மிக சாதாரண குடும்பம். ஆனால், பையனை நாகரிகமாக வளர்க்க நினைத்து, மொபைல், இன்டர்நெட் என, பெற்றோர் செய்து கொடுத்தனர். கிடைத்தது, பெண் நட்பு.
அவனின் அறியா காதலில், ஊடல். வேறொருவன் நுழைந்து விட்டான். 'என்னை ஏமாற்றி விட்டாள்' என, எல்லோரிடமும் சொல்லி விட்டு, துாக்கில் தொங்கி விட்டான்.
ஜூன் 3. லோகேஷ், 16. மிக சாதாரண குடும்பம். அப்பா, கூலி வேலை; அம்மா, பாட்டி, இட்லிக்கடை. ஆனால், நண்பர்களின் ஆடம்பரம் இவனையும் பிடித்துக்கொள்ள, 'மொபைல் போன் வாங்க வேண்டும்' என்ற ஆசை அதிகரித்தது.
சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த, அவனின், 1,200 ரூபாயை, வீட்டில் யாரோ திருடி விட்டனர். அவ்வளவு தான். 'என்ன வாழ்க்கை இது... ஸ்கூல் திறக்கறதுக்குள்ளே போன் வாங்கிடுவேன்னு நண்பர்கள் கிட்ட சவால் விட்டோமே... இப்படி ஆகி விட்டதே. இனி, வாழ்ந்து என்ன பயன்...' என தவறாக எண்ணி, குடிசை வீட்டின் உத்திரத்தில் தொங்கி விட்டான்.
இந்த மூன்று சோக சம்பவங்களும், ஒரே பகுதியில், நண்பர்களாக, ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு, 30 நாட்களுக்குள் நடந்துள்ளது.
கொஞ்சம் சமூக அக்கறையும், கண்ணோட்டமும் உள்ள எங்களால், அழுது விட்டு, 'அய்யோ பாவம்...' என, சொல்லி விட்டு, நகர முடியவில்லை. காரணங்களை ஆராய
ஆரம்பித்து விட்டோம்.
சக மனிதர்கள் குறித்த அச்சம் தான், தற்கொலைகளை தீர்மானிக்கிறது. மற்றவர்கள் நம்மை பழிப்பரே என்ற சுய பச்சாதாபம் தான், தற்கொலைக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
ஆறுதல் அடைய தோள்
கிடைக்கலையே என்ற ஏக்கமும் இறந்த சிறார்களுக்கு இருந்திருக்கிறது. படிக்க வைக்காத பெற்றோர்; பழகிய பெண்; திருடிய உறவுகள் என, யார் யாரோ செய்த தவறுகளுக்கு, இவர்கள் ஏன் தண்டனை அனுபவிக்க
துணிந்தனர்?
அக்கம் பக்கத்து மனிதர்களிடம் மனம் விட்டு, சகஜமாக பேசக் கூடிய சூழ்நிலை, இப்போது இருக்கும் பிள்ளைகளுக்கு வாய்த்திருக்கவில்லை. தன் மனப்பிரச்னையை யாரிடம்
பிள்ளைகள் சொல்லும்?
முகம் காட்ட முடியாவிட்டாலும், காதுகளை மட்டுமாவது நாம் கொடுத்திருக்க வேண்டுமல்லவா... நம் வீட்டு பிள்ளைகள், ஏதோ சோகத்தில், பிரச்னையில் தவித்து, முகம் வெளுத்து, அல்லாடுவதை கவனிக்கக் கூட முடியாமல், வேலை, வாழ்வாதாரம் என, மூழ்கியிருக்கிறோம்.
'தன் முடிவை தானே தேடிக்கொண்ட, அந்த சிறார்களின் பரம்பரையில், யாராவது தற்கொலை செய்து கொண்டிருப்பர்; அது தான் இவனையும் தொடர்கிறது' என்றோ, 'சின்ன பிள்ளைப்பா... அதுக்கு துாக்கில் தொங்குவது எப்படி தெரியும்...' என, நம்மால் முடிந்த அளவிற்கு
கதைக்கிறோம்.
இதில், 'சாவை அவனே தேடிக்கிட்டான்... இதற்கு ஏன் இப்படி, அழுது ஆர்ப்பாட்டம்' என கூறும், நெஞ்சுறுதி மிக்கவர்களும் உண்டு.
தாங்களே தேடிக் கொள்ளும் துர்மரணங்கள் உலக பிரச்னைகளுக்கு தீர்வல்ல என்பதை, நாம் தான் நம் பிள்ளைகளுக்கு சொல்லித் தந்திருக்க வேண்டும். பள்ளிகளாவது அக்கறை எடுத்திருக்க வேண்டும்.
பள்ளியும் கண்டு கொள்ளவில்லை; வீடும் சரியில்லை. சமூகமும் கேலியுடன், அச்சத்தையே தருகிறது. பின், அவர்கள் என்ன தான் செய்வர்?
அந்த காலத்தில், 10 வயதில் கல்யாணம் ஆகி, 13 வயதில் விதவை ஆகி, தன், 90 வயது வரை சொந்தங்களுக்காக, உறவுகளுக்காக, உழைத்து வாழ்ந்து, நிம்மதியாக இறந்த பாட்டி கதைகளை, நம் பிள்ளைகளுக்கு, நம்மை தவிர வேறு யார் சொல்லித்தர முடியும்?
பல வெற்றியாளர்களை கேட்டால், அவர்கள் வாழ்வில் வந்த பிரச்னை பற்றியும், அதனால் ஏற்பட்ட தற்கொலை எண்ணத்தை பற்றியும், அந்த தீய எண்ணம், எப்படி, யாரால், எதனால், தன் மனத்திலிருந்து அழிந்தது என்பது பற்றியும் கதையாக சொல்வர்.
அப்படியான, ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கு பின்னும், யாரோ ஒருவரின் ஆறுதலான வார்த்தைகள் இருந்ததும் தெரியும். அது அந்தக்காலம். அதே சூழ்நிலை இப்போது இல்லை என்பது, யார் தவறு...
நம் அவசர வாழ்க்கையா, சக மனிதரிடம் பேசாமல் இயந்திரங்களுடன் பேசிக் கொண்டே இருக்கிறோமே, அந்த நவீன முன்னேற்றமா?
தோல்வி அடைந்த அவமானத்தில், சோகத்தில் எப்படியாவது செத்து விட வேண்டும் என்ற உணர்வில் இருப்பவர்களை, ஆறுதலான சில வார்த்தைகள் மீட்டெடுக்கும் என்பது சத்தியம்.
நம்மில் எத்தனை பேர், இதற்கு தயாராக இருக்கிறோம் என, உங்கள் மனதை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். பள்ளிகளில் மறந்த, நீதி போதனை வகுப்புகளையும், கதை சொல்லும் விளையாட்டையும், ஆற்றுப்படுத்தும் வார்த்தைகளை பகிரவும்.
அதுவும் பொருளாதாரத்தில் பின் தங்கி, கல்வியறிவு முழுமையாக கிடைக்காத பகுதிகளில், முடிந்தவர்கள், தங்களால் ஆன வேலைகளை செய்ய முடிவெடுங்கள். அன்பான, ஆறுதலான சில வார்த்தைகள்.
அவர்கள் சொல்லும் எந்த கதையையும், காது கொடுத்துக் கேட்கும் பொறுமை என, நம்மால் மிக, மிக எளிதாக செய்யக் கூடிய சிலவற்றை, செய்ய உறுதி எடுப்போம் உடனே!
pavaiyarmalar7@gmail.com

ம.வான்மதி
பத்திரிகையாளர்

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

 • Grace Leela.A - theni,இந்தியா

  குழந்தைகள் விளையாட்டை விட்டுவிட்டு பெரியோர்களிடம் மனம் விட்டு பேசினாலே போதுமானது...

 • mrsethuraman - Bangalore,இந்தியா

  வீட்டில் தாத்தா பாட்டியின் அரவணைப்பு இருந்தால் பிள்ளைகள் கொஞ்சம் உருப்பட வழி உண்டு..நாம் தான் அவர்களை முதியோர் இல்லத்திற்கு அனுப்பி விட்டோமே

 • Raja - coimbatore,இந்தியா

  பள்ளிகளில் சொல்லுவதும் சேர்த்து தாம் கடந்துவந்த கதையும் கொஞ்சம் சொல்லுங்கள் குழந்தைகளுக்கு.

 • bhuvaneshwari - Chennai,இந்தியா

  குழந்தைகள் வீட்டில் உள்ளவர்கள் சொல்வதை விட பள்ளியில் ஆசிரியர்கள் சொல்வதைத்தான் ketpargal. கல்வி நிறுவங்கள் சிறு வயது முதல் பிள்ளைகளுக்கு கல்வியுடன் ஒழுக்கத்தினையும் போதித்தாள் நல்ல மாணவர்கள் உருவாவதில் தடை irukadu.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement