Advertisement

இது உங்கள் இடம்

ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க போறீர்களா?

என்.மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: அன்று, எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அவரது மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில், மற்றொரு அணியும் உண்டாகின. ௧9௮௯ல் நடந்த சட்டசபை தேர்தலில், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது.சேவல் சின்னத்தில் ஜெயலலிதா அணியும், இரட்டை புறா சின்னத்தில், ஜானகி அணியும் போட்டியிட்டன. ஊரு ரெண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழிக்கு ஏற்ப, தி.மு.க.,
ஆட்சி பீடம் ஏறியது. அன்று, அ.தி.மு.க., நிறுவனர், எம்.ஜி.ஆருக்கு, அவரது மனைவியாலும், ஜெயலலிதாவாலும் இழுக்கு ஏற்பட்டது.ஜெ., மறைவுக்கு பின், இன்று, அ.தி.மு.க., மீண்டும் உடைந்துவிட்டது. சசிகலா, தினகரனின் செயல்பாட்டில், முதல்வர் பழனிசாமி அரசு ஆட்டி வைக்கப்படுகிறது. ஆட்சியையும், கட்சியையும் மீட்க போராடுகிறார், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம். ஒட்டுமொத்தத்தில், அனைவரும் சேர்ந்து, கட்சி நிறுவனர், எம்.ஜி.ஆர்., - அ.தி.மு.க.,வை கட்டி காப்பாற்றிய, ஜெயலலிதாவின் புகழை, காற்றில் பறக்க விடுகின்றனர்.அன்று, ஜானகியும், ஜெயலலிதாவும் சேர்ந்து, தி.மு.க., ஆட்சிக்கு வர வழிவகுத்தனர். இன்று, சசிகலா, தினகரன், பன்னீர்செல்வம் என, அனைவரும் சேர்ந்து, கருணாநிதியின் தவப்புதல்வன் ஸ்டாலினுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க தயாராகி விட்டனர்.தமிழகத்தை கொள்ளையடிக்கும் திருப்பணியில், தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் போட்டி போட்டு, பல கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டன. கொள்ளைகளை கண்டுபிடித்தால் போதும்; தமிழகம் பெற்றிருக்கும், மூன்று லட்சம் கோடி ரூபாய் கடனை, திரும்ப செலுத்தி விடலாம்.
இனி வரும் தேர்தலில், திராவிட கட்சிகளை புறந்தள்ளி, புதிய ஆட்சியை ஏற்படுத்த, மக்கள் முன்வர வேண்டும்!இதையும்அறிவிப்பாகவெளியிடுங்கள்!

வே.புஷ்பமாலதி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'தமிழக கல்வித் துறை, 41 அறிவிப்புகளை விரைவில் வெளியிட உள்ளது' என, சமீபத்தில் நாளிதழில் செய்தி வெளியானது.அதில், பலதரப்பட்ட வேலைவாய்ப்பு, ஆசிரியர்களுக்கான சலுகை, தமிழ் வழியில் அதிக பரிசுகள் என, கவர்ச்சிகரமான திட்டமாக மிளிர்ந்தன. ஆனால், ஒரே ஒரு அறிவிப்பு மட்டும், அதில் இடம் பெறவில்லை.கடந்த, 2006லிருந்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை மூலம், 'பிரைமரி' ஆசிரியர் பயிற்சி முடித்தோர் அதிகம் பேர் உள்ளனர்.'பயிற்சி முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி வழங்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதுவரை, எவருக்கும் பணி வழங்கப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும், ஆசிரியர் பயிற்சி மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.ஆனால், பணி நியமனம் கானல் நீராகவே உள்ளது. அரசு அறிவிப்பு வரும் என, பயிற்சி முடித்தோர் காத்துக் கிடக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பு, இன்று வரை நிறைவேறாமல் உள்ளது.பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன், 41 அறிவிப்புகளில் இதையும் சேர்த்து, 42 அறிவிப்பாக வெளியிட வேண்டும். இவர்களின் நீண்ட கால ஏக்கம் நீக்கப்பட வேண்டும்.
அமைச்சர் மனம் வைத்தால் மட்டுமே, இவர்களின் வாழ்வில் ஒளிவிளக்கை ஏற்ற முடியும்; இந்த பெருமைக்கு சொந்தக்காரராக செங்கோட்டையன் திகழ, நல்ல அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்!


தனியார்கல்லுாரிகள்பதுங்குவது ஏன்?


ஜி.சண்முகம், பேராசிரியர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்த, நாட்டின் அனைத்து கலை - அறிவியல் கல்லுாரிகளை, மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி, தரம் குறைந்த கல்லுாரிகளை, மூன்றாவது பட்டியலாக வெளியிட உள்ளோம்' என, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது; இது, மிகவும் வரவேற்கத்தக்கது.கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், கல்லுாரிகளை தனித் தனியாக மதிப்பீடு செய்யும், 'நாக்' எனும் தர நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. அனைத்து கல்லுாரிகளையும், இக்குழுவின் மதிப்பீட்டுக்கு உட்படுத்தி கொள்ளும்படி, யு.ஜி.சி., அறிவுறுத்தியது.உள்கட்டமைப்பு வசதி, வகுப்பறை, நுாலகம், பரிசோதனைக் கூடம் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில், அக்கல்லுாரிகளுக்கு, 'நாக்' தரச் சான்றிதழ் வழங்கும்.ஆனால், குறைகளை நிவர்த்தி செய்ய கோடிக்கணக்கில் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான கல்லுாரிகள், இன்று வரை, 'நாக்' மதிப்பீட்டுக்கு உட்படுவதற்கு, எந்த முனைப்பும் காட்டவில்லை.கடந்த இரண்டாண்டு களுக்கு முன், மத்திய அரசு புதிதாக, 'நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ரேங்கிங் பிரேம் ஒர்க்' எனும் அமைப்பை உருவாக்கி, நாட்டிலுள்ள கல்லுாரிகள் அனைத்தையும் தரவரிசை படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது; பெரும்பாலான கல்லுாரிகள் ஒத்துழைப்பதில் ஆர்வம் காட்டவில்லை.தமிழகத்தில், அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மட்டும் தான், ஒவ்வொரு ஆண்டும், கண்காணிப்பு குழுக்களை அமைத்து, அதன் ஆளுகைக்கு உட்பட்ட, பொறியியல் கல்லுாரிகளை ஆய்வு செய்கிறது.அதுமட்டுமின்றி, மாணவர் தேர்ச்சி விகித அடிப்படையில், அனைத்து கல்லுாரிகளின் தர வரிசை பட்டியலையும் வெளியிடுகிறது. இதனால், பெரும்பாலான பொறியியல் கல்லுாரிகள், அடிப்படை வசதிகளில் குறைபாடு ஏற்படாமல் பார்த்து கொள்கின்றன.மற்ற பல்கலையை பொறுத்தவரை, இதுபோன்ற கண்காணிப்புகள் நடைபெறுவதில்லை. மாணவர் தேர்ச்சி விகித அடிப்படையில், எந்த பல்கலைக்கழகமும், தன் கல்லுாரிகளின் தர வரிசைப் பட்டியலை வெளியிடுவதில்லை.தமிழகத்தில், பெரும்பாலான தனியார் கலை - அறிவியல் கல்லுாரிகள் மிகவும் தரம் குறைவானதாகவே செயல்படுகின்றன.முதல் தர கல்லுாரிகளில் இடம் கிடைக்காத பெரும்பாலான மாணவர்கள், இத்தகைய கல்லுாரிகளில் சேர்வதை தவிர, வேறு வழியில்லை.அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட அனைத்து, தமிழக பல்கலைக்கழகங்களும் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும், கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும்.கல்லுாரிகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். தேசிய தர நிர்ணயத்திற்கு உட்படுத்துமாறு, கல்லுாரி நிர்வாகங்களை வலியுறுத்த வேண்டும்.இது போன்ற நெறிமுறைகளை கடை
பிடித்தால், உயர் கல்வி தரமானதாக அமையும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement