Advertisement

இது உங்கள் இடம்

'கட்டிங்'கால் தமிழகத்தில் தொழில்கள் 'கட்!'

ஆர்.பிரேம் சுதாகர், பெரியகுளம், தேனி மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'இந்தியாவில் தொழில் துவக்க வாருங்கள்; அத்தனை வசதிகளையும் செய்து தருகிறோம்' என, பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, தொழில் முனைவோரை அழைக்கிறார், பிரதமர் மோடி.பேரம் பேசி படியாததால், வெளிநாட்டு நிறுவனங்களை விரட்டி அடிக்கின்றனர், தமிழக அரசியல்வாதிகள். தொழில் துவக்க வருவோர், இங்கு நிலவும் கமிஷன், கலெக் ஷன் கலாசாரத்தால், அண்டை மாநிலங்களுக்கு தலைதெறிக்க ஓடுகின்றனர்.தமிழகத்தில் துவக்க திட்டமிட்டிருந்த, தென் கொரியாவின், 'கியா மோட்டார்ஸ்' நிறுவனம், ஆந்திர மாநிலத்திற்கு இடத்தை மாற்றியது. அதை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உள்ளங்கையில் தாங்கி வரவேற்று அனுமதித்துள்ளார்.'கியா மோட்டார்ஸ்' நிறுவனம், 7,000 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் துவக்க திட்டமிட்டிருந்தது. அதன் துணை நிறுவனங்களும், 7,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தது.இங்கு துவக்கப்பட்டிருந்தால், பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து இருக்கும். அதில், தமிழக அரசியல்வாதிகள் மண் அள்ளி போட்டு விட்டனர். இது சாதாரண குற்றமல்ல; பல ஆயிரம் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறித்த குற்றம். ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள், பட்டயம் பெற்றோரின் கனவு சிதைக்கப்பட்டுள்ளது.ஆனால், அரசியல்வாதிகள் யாரும், இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் அறிக்கையோடு நிறுத்திக் கொண்டனர். அவர்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வேலை தேவையில்லை. 'கியா மோட்டார்ஸ்' நிறுவனத்திற்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலத்தின் மதிப்பில், 50 சதவீத தொகையை, ஆளும் கட்சியினர் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.இந்நிறுவனத்திற்காக அளிக்கப்பட இருந்த சலுகைகளுக்காக, பல கோடிகள் லஞ்சமாக கேட்டதாகவும், 'கியா மோட்டார்ஸ்' நிறுவனத்தின் தொழில் முறை ஆலோசகர், கண்ணன் ராமசாமி தன் முகநுால் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 'லஞ்சம் கேட்பதால், தமிழகத்தை விட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் ஓடுகின்றன' என, குற்றம் சாட்டுகின்றனர், தொழில் முனைவோர்!தமிழக இளைஞர்களின் வாழ்வை அழிக்கும், இந்நிகழ்வுகள் இனி நடக்கக் கூடாது. தவறு செய்தோரின் முகமூடி கிழிக்கப்பட வேண்டும். பேரம் பேசியோர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு நிறுவனங்களிடம் லஞ்சம் கேட்ட அரசியல்வாதிகள் மீது, விசாரணை கமிஷன் அமைக்க, பிரதமர் உத்தரவிட வேண்டும்!
இவர் சளைத்தவர்அல்ல!

கே.ஜே.ஜஹாங்கீர், நகரி புதுப்பேட்டை, சித்துார் மாவட்டம், ஆந்திர மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: ௧௯௬௭க்கு முன், அமெரிக்காவில் இருந்து, இலவச பால் பவுடர் கொடுக்கப்படுமா அல்லது புழுத்துப் போன கோதுமை கிடைக்குமா என்ற வறுமை நிலையில், இந்தியா இருந்தது. பொருளாதார வளர்ச்சியும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.சந்திரசேகர் பிரதமராக இருந்த போது, நாடு பொருளாதார சிக்கலில் சிக்கியது. இந்தியாவில் இருந்து தங்கத்தை, வெளிநாடுகளில் அடகு வைக்க வேண்டிய அளவிற்கு மோசமான நிலையில், நாடு இருந்தது.அதன்பின், பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்டது. தன் அமைச்சரவையில், பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங்கை, நிதி அமைச்சராக்கினார். புதிய பொருளாதார கொள்கையை, சிங் அறிவித்தார்.ஏற்றுமதி, இறக்குமதி விதிகளில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தினார். உலக சந்தையாக இந்தியாவை மாற்ற, பெருமுயற்சி எடுத்தார். வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க, அவர் கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம், நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றன.இன்று, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட சில நாடுகளுக்கு, இந்தியா உதவி செய்கிறது. உலக நாடுகள் மத்தியில் இந்தியாவிற்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது.அப்படிப்பட்ட பெயர் கிடைக்க காரணமான, மன்மோகன் சிங் தலைமை யில், ௧௦ ஆண்டு கால, காங்கிரஸ் ஆட்சி மத்தியில் நடந்தது. அவரது ஆட்சியின் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, ௯ சதவீத அளவிற்கு வளர்ந்தது.ஜனாதிபதி தேர்தல், ஜூலை, 17ல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் தலைமையில், எதிர்க் கட்சிகள் ஒன்றிணைந்து, பொது வேட்பாளரை நிறுத்த ஆலோசித்து வருகின்றன; பா.ஜ.,வும் வேட்பாளரை தேர்வு செய்ய குழு அமைத்துள்ளது.நாட்டில், தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டி ஏற்பட்டு விடக்கூடாது. காங்கிரஸ் மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் ஒருமனதாக, மன்மோகன் சிங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.இதன் மூலம், நாடு இன்னும் முழுமையான வளர்ச்சி பாதையை நோக்கி நிச்சம் செல்லும்!முதல்வர் என்றதலைக்கனம் இல்லை!

அ.சேகர், சிதம்பரத்திலிருந்து எழுதுகிறார்: இன்று, இந்திய அரசியல்வாதிகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான், எளிமையான, நேர்மையானவர்களை பார்க்க முடியும்.அந்த ஒரு சிலரில், தமிழகத்தில், இந்திய கம்யூனிஸ்டை சேர்ந்த மூத்த அரசியல்வாதி நல்லகண்ணு இருக்கிறார்; சட்டவிரோதமாக செயல்படும் மணல், கல் குவாரிகளுக்கு எதிராக, தள்ளாத வயதிலும் இன்றும் போராடுகிறார்!அதே போன்று, உ.பி.,யிலும் ஒருவர் இருக்கிறார்; ஐந்து முறை எம்.பி.,யாகவும், தற்போது, உ.பி., மாநில முதல்வராகவும் வீற்றிருக்கும், யோகி ஆதித்யநாத் தான்; அவரது செயல்பாடுகள் வியப்பளிப்பதாக உள்ளன.சாலையோர குழாயில் தண்ணீர் குடிப்பது, இஸ்லாமிய சகோதரிகளை அமர வைத்து குறை கேட்பது, பாதுகாப்பு இன்றி எங்கும் செல்வது என, சாதாரணமாக இருக்கிறார்.தமிழகத்தை பொறுத்தவரையில், அன்று, காமராஜர், அண்ணாதுரை போன்றோர், எளிமையாக ஆட்சி செய்தனர்.அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றவுடன், அவரின் வீட்டுக்கு சோபா, நாற்காலி, மின் விசிறிகளை அரசு அதிகாரிகள் கொண்டு வந்தனர். அதைப் பார்த்த அண்ணாதுரை, திருப்பி எடுத்துச் செல்லும்படி கூறினார்.இன்று, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், தன் பயணத்தின் போது, 'பிரத்யேக ஏற்பாடுகளே எனக்கு செய்ய வேண்டாம்' என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்; இது, மற்ற மாநில முதல்வர்களுக்கு முன் உதாரணமாக உள்ளது.முதல்வர் என்ற தலைக்கனம் இன்றி, ஏழை, எளியோரிடம் குறை கேட்டு அறிகிறார். எளிமைக்கு இலக்கணமாக திகழும், முதல்வர் யோகிக்கு சபாஷ் போடலாம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement