Advertisement

'டவுட்' தனபாலு

காங்., -- எம்.எல்.ஏ., விஜயதாரணி: அ.தி.மு.க., மாவட்ட செயலர் போல், சபாநாயகர் தனபால் செயல்படுகிறார்.

டவுட் தனபாலு: விமர்சிக்கறதுன்னு ஆகிடுச்சு... அதுல எதுக்கு விட்டகுறை தொட்டகுறை வைக்குறீங்க... தினகரன் அணி, பன்னீர் அணி, பழனிசாமி அணின்னு, அ.தி.மு.க., பல அணியா இருக்கு... இதுல, எந்த அணியைச் சேர்ந்த, மாவட்ட செயலரா தனபால் செயல்படுறாரு என்ற, 'டவுட்'டையும் போட்டு உடைச்சுட்டா என்ன...!

தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர்: தமிழகம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. ஆந்திர அரசு, விதிமுறைகளை மீறி தடுப்பணை கட்டி வருகிறது. இதுவரை மத்திய அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.



டவுட் தனபாலு: தமிழகத்தின் மீதும், தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்கள் மீதும் நீங்க காட்டுற அக்கறை, பாராட்டத்தக்கது தான்... அப்படியே, காவிரியில் நீர் திறக்காமலும், மேகதாது அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கும், கர்நாடகாவின் மீது பார்வையை திருப்ப மாட்டேங்குறீங்களே...ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி... கர்நாடகாவில், காங்., ஆட்சி... இது தான், உங்களின் பாரபட்ச செயல்பாட்டுக்கு காரணமாங்கறது தான், என்னோட, 'டவுட்!'


பா.ஜ., ராஜ்யசபா, எம்.பி., இல.கணேசன்: தி.மு.க., நடத்திய கூட்டம் ஒன்றில், அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஸ்டாலின் அழைத்து, பா.ஜ.,வை எதிர்த்து பேசி உள்ளார். இதன் மூலம், பா.ஜ., தான், மக்கள் செல்வாக்கு பெற்றுள்ளது என, தெரிகிறது.



டவுட் தனபாலு: அந்த கூட்டத்துக்கு, எங்களுக்கும் அழைப்பு விடுங்கன்னு, உங்க கட்சி மாநில தலைவர் வெளிப்படையாக கேட்டாரே... ஒருவேளை அழைத்து இருந்தால், 'தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக, பா.ஜ., இருக்கு... அதனால் தான், அழைப்பு வந்திருக்கு'ன்னு கூட சொல்லி இருப்பீங்களோ... மக்கள் மனசுல இருப்பதை, நெருக்கமாப் பழகி, தி.மு.க., அறிந்திருக்கு என்பதையாவது ஒப்புக் கொள்வீங்களா என்பது, 'டவுட்' தான்...!---

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement