Advertisement

இது உங்கள் இடம்

ஒட்டுமொத்த தமிழர்களின் வேதனை!


என்.வைகைவளவன், மதுரையிலிருந்து எழுதுகிறார்: 'எனக்கு பிறகும், 100 ஆண்டுகள், அ.தி.மு.க., இருக்கும்; இதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்; இது, சத்தியம் சத்தியம்!' என, கணீரென்ற குரலில், தமிழக சட்டசபையில் முழங்கினார், ஜெயலலிதா; அவரது கணிப்பு, இன்று மிக மிக தவறானது என்பதை நிரூபிக்க, சசிகலா, தினகரன் போன்றோர் கங்கணம் கட்டி புறப்பட்டு விட்டனர். அழிவை தேடும் இப்புண்ணிய செயலுக்கு, ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., போன்ற மகானுபாவலர்களும் ஈடுபட்டிருப்பது, தொண்டர்களை கலங்கடித்து உள்ளது. பெங்களூரு சிறைக்கு செல்லும் முன், ஜெயலலிதா சமாதிக்கு சென்ற சசிகலா, சமாதி மீது, தன் கையை வைத்து ஓங்கி அடித்து, ஏதோ முணுமுணுத்து சத்தியம் செய்தார்.அது, உன்னை படுகுழியில் தள்ளி சமாதி கட்டியது போல், அ.தி.மு.க.,வையும் அழித்து, விரைவில் சமாதி கட்டுவேன்; இது, சத்தியம் சத்தியம் என்றார், போலும்!சசிகலாவின் எண்ணம் மிக விரைவில் ஈடேறப் போகிறது என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. எம்.ஜி. ஆர்., உருவாக்கிய, மாபெரும் இயக்கம் இன்று, குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல சின்னாபின்னம் ஆகிக் கொண்டிருக்கிறது.தனி மனிதன் புகழ் பாடும், எக்கட்சியும், இதுவரை உருப்பட்டதாக வரலாறு இல்லை. தி.மு.க.,வை துவக்கிய அண்ணாதுரை, கட்சியை முழுக்க முழுக்க, தன் கட்டுப்பாட்டிலோ, குடும்பத்தின் கட்டுப்பாட்டிலோ வைக்காமல், தன் அருமைத் தம்பிகளின் பொறுப்பில் விட்டு சென்றார்.அதனால் தான், இன்று வரை, தி.மு.க., அழியாமல் இருக்கிறது. ஸ்டாலினுக்கு பின், தி.மு.க., அழிவு பாதையில் செல்வது உறுதி. திராவிட கட்சிகளின் கோரப் பிடியிலிருந்து, தமிழகம் விடுதலை அடையும் நாள், நெருங்கிக் கொண்டிருக்கிறது. மாநிலத்தை வழி நடத்திச் செல்ல, நல்ல தலைவன் யாரும் உருவாகவில்லையே என்பது தான், ஒட்டுமொத்த தமிழர்களின் வேதனையாக தற்போது உள்ளது!

காங்., தவற்றைஒருபோதும்செய்து விடாதீர்கள்!

ஆர்.கல்யாணசுந்தரம், மதுரையிலிருந்து எழுதுகிறார்: நாட்டின் அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்ய, ஜூலை, 17ல் தேர்தல் நடக்கவுள்ளது.மத்தியில், ஆளும், பா.ஜ., நிறுத்தும் வேட்பாளர், அடுத்த ஜனாதிபதியாக அதிக வாய்ப்பு உள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவரான, அத்வானி போன்றோரை தேர்வு செய்யலாம் என்ற கருத்தும் சொல்லப்படுகிறது; அப்படி நடந்தால், அது வடிகட்டிய சுயநலமாகவே கருதப்படும்.காங்கிரஸ், தன் ஆட்சி யின் போது நடந்த, ஜனாதிபதி தேர்தலில், பிரதிபா பாட்டீலை ஜனாதிபதியாக்கியது.அவர், உலக நாடுகளைச் சுற்றி வந்த செலவு, 205 கோடி ரூபாய்; பதவி முடிந்து வீட்டிற்குச் செல்லும்போது, ஜனாதிபதி மாளிகையில் இருந்து பரிசுப் பொருட்களை பல லாரிகளில் அள்ளிச் சென்றார் என்ற குற்றச்சாட்டும் உண்டு.
வாஜ்பாய் தலைமையிலான, பா.ஜ.,வின் முந்தைய ஆட்சியின் போது, ஒரு அற்புதமான அறிவியல் மேதை ஜனாதிபதியாக்கப்பட்டார்.அந்த தமிழன் பதவி முடிந்து வெளியேறும்போது, தன் ஆடைகளையும், புத்தகங்களையும் மட்டுமே எடுத்துச் சென்றார். அவரை, இந்தியாவின் மூத்த குடிமகனாக்கியதால், பா.ஜ.,வுக்கு நாட்டில் மதிப்பும், மரியாதையும் கூடியது.அப்படியொரு பெருமையை, தற்போதும் பெறும் வாய்ப்பு, பா.ஜ.,விற்கு கிட்டி இருக்கிறது. தப்பி தவறி, பிரதிபா பாட்டீல் போன்றோரை தேர்வு செய்து விடாதீர்கள்.பா.ஜ.,வால் தேர்வு செய்யப்படும், ஜனாதிபதி வேட்பாளர், கட்சி சார்பு இல்லாதவராகவும், நாட்டு நலனில் அக்கறை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.அதிகாரத்துக்கு வளைந்து கொடுக்காதவராகவும், ஊழலை ஒழித்துக் கட்டும் உத்வேகமுடையவராகவும், நீதி, நேர்மை, நியாயத்தை தாங்கி நிற்பவராகவும் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட, அரிய மனிதரை அடையாளம் கண்டு, நாட்டின் ஜனாதிபதியாக்கினால், கலாம் கண்ட, '௨௦௨௦ல் வல்லரசு நாடு' என்ற கனவு நிச்சயம் நிறைவேறும்!ஆய்வுக்கு போகாதஉணவு பொருட்கள்இன்னும் எத்தனை?


வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: பசும்பால், முட்டை, கீரை உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் மனித உடலுக்கு நல்ல சத்து, ஆரோக்கியம் என, இந்நாள் வரை நினைத்து இருந்தோம்; இன்று, அவற்றில் எல்லாம் நடக்கும் கலப்படத்தை அறியும் போது, மனம் வேதனையாக உள்ளது.பால் கெட்டுப் போகாமல் இருக்க, ஹைட்ரஜன் பெராக்சைடு, குளோரின் போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுகிறதாம்... பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட அரிசி விற்கப்படுகிறதாம்... இதுவெல்லாம், மனிதனுக்கு சாபக்கேடு!
கலப்பட பால் விஷயத்தில், தனியார் பால் நிறுவனங்கள் மீது, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி புகார்களை அள்ளி வீசுகிறார்.ஆய்வுக்காக பால் அனுப்பப்பட்டுள்ளது; அதன் முடிவுகள் வெளிவராத நிலையில், அமைச்சர் ஏன் கொதிக்க வேண்டும்... கலப்பட பால் யார் வினியோகம் செய்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில், யாருக்கும் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது.வீடுகளில், கீரை வகைகளை மக்கள் சமைத்து சாப்பிடுகின்றனர். ஆனால், சாக்கடை, உலோக, ரசாயன கழிவுநீரில், கீரை வகைகள் விளைவிக்கப்படுகின்றன என்ற அதிர்ச்சியூட்டும் செய்தியை அறியும் போது, கீரை வகைகளை உண்ணவே அச்சமாக இருக்கிறது.'கழிவுநீரில் விளையும் கீரைகளை உட்கொண்டால், நுரையீரல், புற்று நோய், நரம்பு மண்டல பாதிப்பு வரும்' என, வேளாண் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.ஆனால், வேளாண் அலுவலர்கள், கீரையை இதுவரை ஆய்வு செய்து உள்ளனரா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்!செயற்கையான முட்டை, முட்டைக்கோஸ், பிளாஸ்டிக் அரிசி போன்றவை, சீனாவில் இருந்து வருகின்றன என, 'வாட்ஸ் ஆப்'பில் செய்திகள் பரவுகின்றன.தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களில், பிளாஸ்டிக் அரிசி பிடிபட்டுள்ளது. அது, ஆய்விற்கு அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.தமிழகத்தில், பல இடங்களில் எடுக்கப்பட்ட பால் மாதிரிகளும், ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன. வரும் காலங்களில், மனிதன் உட்கொள்ளும் அனைத்து பொருட்களுமே, ஆய்விற்கு அனுப்பப்பட வேண்டிய கட்டாயம் வந்தாலும் வரும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லை தண்டனையும் உண்மையில் தவறு செய்தலும் கடுமையாகத் தண்டிக்கவும் முடியாது எனவே எங்கும் எதிலும் எவருக்கும் சுதந்திரம்தான்

  • Darmavan - Chennai,இந்தியா

    கலப்பட உணவுப்பொருள்: பிளாஸ்டிக் அரிசி முட்டை போன்றவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறதாக செய்தி. யார் இறக்குமதி செய்கிறார்கள் /கடத்துகிறார்கள் என்று அரசாங்கத்தால் கண்டுபிடிக்கமுடியதா? தடுக்கமுடியாதா? இதில் ஏதோ கூட்டு சதி இருப்பதுபோல் தோன்றுகிறது. அரசாங்கத்தில் உள்ள கருப்பு ஆடுகள் லஞ்சத்துக்காக இதை செய்வதாக தெரிகிறது.இவர்கள் தண்டிக்கப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement