Advertisement

'டவுட்' தனபாலு

முதல்வர் பழனிசாமி: 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க, ஐந்து இடங்களை தமிழக அரசு தேர்ந்தெடுத்து, மத்திய அரசிடம் கொடுத்துள்ளது. அதில், எங்கு எய்ம்ஸ் மருத்துவமனையை அமைக்க வேண்டும் என்பதை, மத்திய அரசு முடிவு செய்யும்.


டவுட் தனபாலு: 'எதையும் முடிவு செய்யுற நிலையில் நாங்க இல்லை... எங்களை விட, அவங்களுக்கு தமிழக நிலவரம் அத்துப்படி... மத்திய அரசு எதை செய்தாலும், அதை ஆமோதிப்பது மட்டும் தான், தற்போது எங்கள் பணி... எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைத்தாலும், வரவேற்றுப் பாராட்ட காத்திருக்கோம்'னு, வெளிப்படையாகவே சொன்னால் என்ன என்பது தான், என்னோட, 'டவுட்!'



அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்ட தினகரன்:
முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்பது, என் எண்ணம் இல்லை. அந்த இடம், ஜெயலலிதா என்ற சிங்கம் அமர்ந்திருந்த இடம். அவருக்கு இணையாக, என் குடும்பத்தில் யாரும் இல்லை.



டவுட் தனபாலு: உங்க கட்சியின் பொதுச் செயலர் சசிகலாவின் பேச்சை நீங்க கேட்டதில்லையா... இல்லை, பொருட்படுத்துவதில்லையா... 'அ.தி.மு.க.,வுக்கு புது குட்டி சிங்கம் வந்துள்ளது. இந்த சிங்கம், எத்தனை வலை வீசினாலும், அதை எதிர்கொண்டு வெளியே வரும். இந்த சிங்கத்தோடு கூட இருக்கும் எல்லாரும் சிங்கம் தான்'னு, எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில், தன்னைத்தானே புகழ்ந்து பேசினாரே... அதனால தான் இந்த, 'டவுட்!




தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின்:
கவர்னர் முதல் ஜனாதிபதி வரை, அனைத்து உயர் பொறுப்புகளில் உள்ளோரிடமும் முறையிட்டு, இந்த ஆட்சியை அகற்றுவோம்.



டவுட் தனபாலு: தானாய் கவிழாது என்ற முடிவுக்கு வந்துட்டீங்களா... கவர்னரோ, பொறுப்பு கவர்னர்... ஜனாதிபதியின் பதவிக்காலமோ முடியப் போகுது... முறையிட்ட உடன், அவர்கள் நடவடிக்கை எடுத்திடுவாங்களா... மத்திய அரசு தான், தமிழகத்தை ஆட்சி செய்யுதுன்னு விமர்சித்த பின், வேறு யாரிடம் இந்த கோரிக்கையை வைப்பீங்க... பேசாமல், பெரும்பான்மை நிரூபிக்கத் தயாராக இருக்கோம்னு, ஒரு, 'பிட்டு' போட்டுப் பார்த்தால் என்னங்கறது தான், மக்களின், 'டவுட்!'--------------

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement