Advertisement

இது உங்கள் இடம்

கொள்ளிக்கட்டையால் முதுகு சொரியலாமா?சுப்ர.அனந்தராமன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'பா.ஜ.,வுக்கு பெரிய பிளஸ் பாயின்ட்' என்ற தலைப்பில், இதே பகுதியில், வாசகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், ஜெயலலிதா மரணம், கருணாநிதி சுகவீனம் போன்றவற்றால், தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அதை சாதகமாக்கி, தமிழத்திலும், பா.ஜ., ஆட்சியை பிடிக்கலாம் என, அவர் குறிப்பிட்டு இருந்தார்.அவர், வாதம் சரியானது தான். ஆனால், அதற்கான வியூகங்களை, பா.ஜ., எடுக்கிறதா என்பதை பார்க்க வேண்டும்...தமிழக பா.ஜ.,வுக்கு, கவர்ச்சிகரமான தலைவர் இல்லை என்ற பேச்சு உள்ளது. அதற்காக, பா.ஜ.,வுக்கு தலைமை ஏற்க, ரஜினி வர வேண்டும் என, சிலர் கேட்பது வருந்தக்கூடியது. சினிமா நட்சத்திரங்களை வருத்தி, வருத்திக் கூப்பிட்டு, கட்சியில் சேர்த்துக் கொண்டதால், பா.ஜ., அடைந்த பலன் பூஜ்யம்!ஹிந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவை, பா.ஜ.,வில் சேர்த்து, அவரை பீஹாரின் பாட்னா தொகுதியில், எம்.பி., ஆக்கியது, கட்சி மேலிடம். ஆனால், அம்மாநிலத்தில், பா.ஜ.,வுக்கு ஒரு எதிரி சொந்தக் கட்சியிலேயே ஏற்பட்டது தான் கிடைத்த பலன். பீஹாரில், பா.ஜ.,வின் முதல் எதிரி, லாலு பிரசாத் யாதவோ, நிதிஷ் குமாரோ அல்ல... பா.ஜ., - எம்.பி., சத்ருகன் சின்ஹா தான்!ஹேமமாலினி என்ற நடிகையை, பா.ஜ.,வில் சேர்த்து, அவரை, உ.பி.,யின் பிருந்தாவன் தொகுதி, எம்.பி.,யாக போட்டியிட வைத்தனர். மோடியின் செல்வாக்கால், ஹேமமாலினி, எம்.பி.,யானார். ஆனால், அவர் செய்த முதல் வேலை, பிருந்தாவன் விதவைகளுக்கு எதிராக, சர்ச்சைக்கிடமான கருத்துக்களை அவிழ்த்து விட்டார். அதனால், அந்த தொகுதி மக்களின் வெறுப்பை, சம்பாதித்துக் கொண்டதே, பா.ஜ., அடைந்த பலன்.மும்பை புறநகர் பகுதியில், சில கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை, அடிமாட்டு விலையில், நாட்டியப் பள்ளி நடத்துவதற்காக, நடிகை வாங்கினார்; அது, மிகப் பெரிய புகைச்சலைக் கிளப்ப, வேறு வழியில்லாமல், மகாராஷ்டிர முதல்வர் பட்னவிஸ், அந்த அரசு நிலத்தை, ஹேமமாலினியிடம் இருந்து பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.அதேபோல், பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்துவை, பா.ஜ.,வில் சேர்த்ததால், பஞ்சாப் மாநில, பா.ஜ.,வுக்கு சொந்தக் கட்சியிலேயே, மிகப் பெரிய எதிரியாக அவர் உருவானார். பின், பா.ஜ.,விலிருந்து வெளியேறி, பஞ்சாப் காங்கிரசில் சேர்ந்து, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு குடைச்சல் கொடுக்கிறார்.பா.ஜ., மாநில தலைவராகவும், முதல்வராகவும், ரஜினி வர வேண்டும் என, திட்டமிடுவது கொள்ளிக்கட்டையால் முதுகு சொரிந்து கொள்வதை போன்றது; அதை, ஒருபோதும் யாரும் நினைத்து பார்க்காதீர்கள்.சேவா பாரதி, வி.எச்.பி., - ஆர்.எஸ்.எஸ்., போன்ற, பா.ஜ.,வின் குடும்ப இயக்கங்களில் வீராவேசம் மிக்க பல இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்களை தயார்படுத்துங்கள்.மத்திய கேபினட் அமைச்சர், நிர்மலா சீதாராமனை, மாநில தலைமை பதவியில் அமர்த்துங்கள். அவரை, முதல்வர் வேட்பாளர் என, உரக்க அறிவித்து, பட்டிதொட்டியெல்லாம், பிரசாரம் செய்தால், தமிழகத்திலும், பா.ஜ., ஆட்சி நிச்சயம் வரும்!

ஏழைகளைஅலைய விடாதீர்கள்!


எம்.ராஜேந்திரன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'தமிழக சட்டசபையில், விதி எண், ௧௧௦ன் கீழ் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்' என, அன்றைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.அந்த அறிவிப்பு இன்று வரை முழுமையாக நிறைவேறவில்லை. ௨௦௧௬ல் தொடர்ச்சியாக இண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்றவுடன், 'ஆதார் அட்டை அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்' என, அ.தி.மு.க., அரசு அறிவித்தது.
இன்னும் பெரும்பாலான ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 'ஸ்மார்ட் கார்டு' கிடைக்கவில்லை. ஆனால், உணவுத் துறை அமைச்சர், துறை அதிகாரிகள், ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெரும்பாலான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக, தம்பட்டம் அடிக்கின்றனர்; அது உண்மையல்ல.ஒரு ரேஷன் கடையில், ௧,௭௦௦ பயனாளிகள் உள்ளனர். ஆனால், அந்த கடையில் வெறும், ௧௨௦ பேருக்கு தான், 'ஸ்மார்ட் கார்டு' வந்துள்ளது. 'ஸ்மார்ட் கார்டு' பெற பலர் விண்ணப்பித்து உள்ளனர்.முறைப்படி அனுப்பிய சிலருக்கு, 'உங்கள் மின்னணு ரேஷன் அட்டை அச்சிடப்பட்டு உள்ளது. உங்கள் ரேஷன் கடையை அணுகவும்' என்ற குறுஞ்செய்தி வரப்பெற்று, ஒரு மாதமாகியும், 'ஸ்மார்ட் கார்டு' இன்னும் கிடைக்கவில்லை.'ஸ்மார்ட் கார்டு' பெற, தாலுகா அலுவலகங்களில், ஏழை, எளியோர் தினமும் அலைவது பரிதாபமாக உள்ளது. வருமான அடிப்படையில், தகுதி உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு உரிய பொருட்களை சரியாக கொடுக்கவில்லை.
குறிப்பாக, ரேஷன் கடைகளில் மூன்று மாதங்களாக உளுந்தம்பருப்பு வினியோகம் கிடையாது.குடிமை பொருள் வினியோகம் என்ற பெயரில், ஏழை, எளியோருக்கு பொருட்களை வழங்குவதாக கூறி, பெரும்பாலான மக்களின் வரிப்பணத்தை, அரசு விரையம் செய்கிறது.
வெட்டி பேச்சுக்களை நிறுத்தி, ரேஷன் கார்டு விஷயத்தில், அமைச்சர் காமராஜ் அக்கறையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்!என்ன தீங்குவந்து விட போகிறது!


டாக்டர் வீ.கே.வீரேஸ்வரன், கால்நடை பராமரிப்பு துணை இயக்குனர் (பணி நிறைவு), கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'கல்வித் துறைக்கு புண்ணியம் கிடைக்கட்டும்' என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், இதே பகுதியில் கடிதம் எழுதி இருந்தார்.
அதில், அரசு வேலை வேண்டுவோர் மட்டும், அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்கட்டும் என, கருத்து தெரிவித்து இருந்தார்; அவர், கருத்து சரியானது.
அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றை செயல்படுத்தினால், நிச்சயம் வாசகரின் கூற்று பலிக்கும்...
* அரசு பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை புகுத்தினால் போதும்; அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும்
* சி.பி.எஸ்.இ., என்றாலே, ஹிந்தியும் வந்து விடும்; ஆங்கில வழி, தமிழும் உண்டு
* ஹிந்தியை ஏற்றுக் கொண்டால், மாவட்டத்திற்கு ஒரு நவோதயா உறைவிடப் பள்ளி கிடைக்கும். மாநில அரசு, 30 ஏக்கர் நிலம் வழங்கினால், மத்திய அரசு பள்ளி துவங்க, 20 கோடி ரூபாயும், ஆண்டு செலவுக்கு, 2 கோடி ரூபாயும்
கொடுக்கிறது
* இன்று, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் நடக்கும் தனியார் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர், பல
லட்சம் ரூபாய் செலவு செய்கின்றனர்.
* அரசு பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை புகுத்தினால், அரசு ஊழியர்களும், ஆபீசர்களும், அன்றாடங் காய்ச்சிகளும், அரசு பள்ளிகளில் தங்களின் குழந்தைகளை சேர்க்க முண்டியடித்து வருவர்
* சி.பி.எஸ்.இ.,யில் படித்தால், 'நீட்' தேர்வையும் சிரமம் இன்றி, மாணவ, மாணவியர் எழுதுவர்.திராவிட கட்சிகளே, எம்.பி., - அமைச்சர் பதவிக்கு அடித்துக் கொள்கிறீர்களே... கல்வியில் மட்டும், மத்திய அ

ரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை கடைபிடித்தால், தமிழுக்கும், தமிழருக்கும் என்ன தீங்கு தான் வந்துவிட போகிறது!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement