Advertisement

இது உங்கள் இடம்

வரியே இல்லாத நாடு செல்ல கமலுக்கு வாழ்த்து!ப.மணிசங்கர், வீடு மற்றும் அடுக்குமாடி கட்டுவோர் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சினிமா துறையில், பல்வேறு வகைகளில் கறுப்பு பணம் புழங்குகிறது. செல்லாத ரூபாய் நோட்டு என, மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தால், மிகவும் பாதிக்கப்பட்டது, அத்துறை தான்.நடிகர்கள், தங்கள் சம்பளமாக, பல கோடி ரூபாய்களை, கணக்கில் வராமல், வரி ஏய்ப்பு செய்து, வருமான வரித் துறையினரிடம் மாட்டிக் கொள்வதும் நடக்கிறது. 'சினிமா துறைக்கு விதிக்கப்பட்ட,
௨௮ சதவீத ஜி.எஸ்.டி., வரிகளை எதிர்த்து, தான் இனிமேல் சினிமா படங்களில் நடிக்க போவதில்லை' என, நடிகர் கமல் ஹாசன் கூறினார்.பல்வேறு ஆலோசனைகளை நடத்தி ஒவ்வொரு துறையின், சாதக, பாதகங்களை ஆராய்ந்து, விதிக்கப்பட்ட வரியை, உடனடியாக குறைக்க வேண்டும் என, ஒரு நடிகர் கூறுவதில் தவறில்லை.ஆனால், வரி விகிதத்தை குறைக்கா விட்டால், தான் நடிக்க போவதில்லை என்று கூறுவதால், தமிழகத்திற்கோ, இந்தியாவிற்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த போவதில்லை. ஜி.எஸ்.டி., வரி விகிதத்தை குறைக்காவிட்டால், நடிக்க போவதில்லை என, கமலை போல் தென்னிந்திய நடிகர்கள் யாரும் கூச்சலிடவில்லையே!வரி என்பது மக்களின் நலன் மேம்பாட்டிற்காக, அரசால் விதிக்கப்படுவது. 'நாங்கள் வரி கட்டமாட்டோம், நடிக்க மாட்டோம்' என நடிகர் கூறுவதில், நாட்டில் எந்த பிரளயமும் ஏற்பட போவதில்லை. இதுவரை, கறுப்பு பணமே, தான் வாங்கியதில்லை என, கமல் சத்தியம் செய்ய முடியுமா... அப்படியே அவர் செய்தாலும் யாரும் நம்ப போவதில்லை!
சினிமா துறையினர் கறுப்பு பணம் நடவடிக்கைக்கு, ஜி.எஸ்.டி., வரி விகிதம் சரியான நடவடிக்கை. எனவே, நடிகர் கமல் ஏற்கனவே அவர் நடித்த ஒரு படம் வெளியிட தாமதமான போது, இந்தியாவை விட்டு சென்று விடுவதாக கூறியிருந்தார். அப்படி செல்வதாக இருந்தால், நடிகர் கமல் ஹாசன் அவர்களே, வரியே இல்லாத நாட்டிற்கு சென்று,
தங்கள் கலை பயணத்தை தொடர வாழ்த்துகள்!

தனியார் மயம்;தற்கொலைக்குசமம் அய்யா!


டி.நாச்சிமுத்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (பணி நிறைவு), போடிபட்டி, திருப்பூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'அரசு பஸ்களை, தனியார் மயமாக்குவது தான் சரியான வழி' என, இதே பகுதியில், வாசகர் ஒருவர் கருத்து தெரிவித்து இருந்தார்; அது, தவறானது.கடந்த, 1972ல், அன்றைய முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் போக்குவரத்துக் கழகங்களில், தன்னலமற்ற பணியாளர்கள், சிறந்த அதிகாரிகளின் வழிகாட்டுதலால், ஆண்டுதோறும், 30 - 40 லட்சம் ரூபாய் என, லாபக் கணக்கு காட்டப்பட்டது.அன்று, போக்குவரத்துக் கழகங்கள் போட்டி போட்டு லாபத்தை அறிவித்து, தம்பட்டம் அடித்தன.நான், 1974ல் போக்குவரத்துக் கழக பணியில் சேர்ந்து, 2011ல் பணி ஓய்வு பெற்றேன். 1977ல், உ.பி., மாநில ஐகோர்ட் நீதிபதி, ஆர்.சி.சின்காவால், 'உலகிலேயே சிறந்து போக்குவரத்துக் கழகம், சேரன் போக்குவரத்துக் கழகம் தான்' என, கூறினார்; அதை வாசகருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்...
கடந்த, 1975ல், 32.5 சதவீதம் போனஸ் வழங்கி சிறப்புப் பெற்றதும், சேரன் போக்குவரத்துக் கழகம் தான். நான் ஓய்வு பெற்று, ஆறு ஆண்டுகள் முடிந்த பின், எனக்கு இன்னும், 2.5 லட்சம் ரூபாய் பணப் பலன் நிலுவையில் உள்ளது.மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு போட்டு, நீதிமன்ற உத்தரவை, ஜன., 3ல் அனுப்பி வைத்தும், 22 ஆயிரம் ரூபாய் மட்டும் கிடைக்கப் பெற்றுள்ளேன். அரசு பணப் பலன்களை வழங்காத காரணத்தால் தான், 2017, மே 15ல் வேலை நிறுத்தம் நடைபெற்றது.போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தால், இரு நாட்கள் அரசு பஸ்கள் இயங்கவில்லை; அதை பயன்படுத்தி, தனியார் பஸ்கள் கட்டணக் கொள்ளை அடித்ததை, ஊடகங்கள் ஒளிபரப்பின; அந்த வாக்குமூலத்தை, வாசகர் காணவில்லை போலும்!அரசு போக்குவரத்துக் கழகம், முழுமையாக தனியார் மயமானால், மக்களிடம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவர். அரசு போக்குவரத்துக் கழக பஸ்களால், ஏழை, எளிய மக்கள் பயன் அடைகின்றனர்; அதை, வாசகர் புரிந்து கொள்ள வேண்டும்.உடம்பில் நோய் ஏற்பட்டால், டாக்டரை பார்த்து, சரி செய்ய வேண்டுமேயன்றி, தற்கொலை செய்து கொள்ளக் கூடாது!பெண் பிறப்புவிகிதத்தைதடுக்கக் கூடாது!

சொ.செல்வராஜ், கோ - ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் (பணி நிறைவு), சென்னையிலிருந்து எழுதுகிறார்: பெண் குழந்தைகளை பாதுகாக்கும் நோக்கில், தொட்டில் குழந்தை திட்டத்தை அறிவித்தார், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.இத்திட்டத்தின்படி, வறுமை உள்ளிட்ட சில காரணங்களால், பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகளை வளர்க்க இயலாதோர், காப்பகத்தில் சேர்க்கலாம். இதன் மூலம், பெண் சிசுக் கொலை, கருக்கலைப்பு போன்றவை வெகுவாக குறைந்தது.'தொட்டில் குழந்தை திட்டத்தின் கீழ், 5,200 குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றன; பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 100 ஆண்களுக்கு, 90 என்ற நிலையிலிருந்து, 96 என அதிகரித்துள்ளது' என, தமிழக அரசும் கூறியது.ஆனால், சில நாட்களுக்கு முன், கன்னியாகுமரி மாவட்டம், ஈத்தாமொழி எனும் ஊருக்கு அருகில், சிறிய கிராமத்தில், ஒரு பெண்ணுக்கு, ஏற்கனவே இரண்டு வயது பெண் குழந்தை இருந்தது. மீண்டும் கர்ப்பமடைந்து, இரட்டைப் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தாள்.
'ஆண் வாரிசு வேண்டும்' என்ற ஆர்வத்திலிருந்த அப்பெண்ணும், குடும்பத்தினரும் ஏமாற்றம் அடைந்தனர். மன உளைச்சலுக்குள்ளான தாய், இரட்டைப் பெண் குழந்தைகளை மார்போடு அணைத்து, அழுத்தி, மூச்சு திணற வைத்து சாகடித்தாள்; இச்செய்தி, தமிழகத்தை உலுக்கியது.மேலும், தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம், அரசு அறிவித்த புள்ளி விபரங்கள் மீதும் சந்தேகம் எழுந்தது.'தொட்டில் குழந்தை திட்டம்' பற்றிய விழிப்புணர்வு இருந்திருந்தால், ஒருவேளை தான் பெற்ற இரட்டைப் பெண் குழந்தைகளை குழந்தைகள் காப்பகத்திற்கு, அந்த தாய் அனுப்பியிருக்கலாம்.எனவே, தமிழக அரசும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், 'தொட்டில் குழந்தை திட்டம்' பற்றிய விபரங்களை, மக்கள் உண்மையிலேயே அறிந்து கொள்ள ஏதுவாக, மாநகரம் முதல், குக்கிராமங்கள் வரை, விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும்; இதன் மூலம் பெண் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (5)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement