Advertisement

இது உங்கள் இடம்

கோழித்தீவனம் எது என தெரியாத அமைச்சர்!

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
'தமிழகத்தில் பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை போன்றவற்றுக்கு இடமே இல்லை; அவற்றை விற்பனை செய்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவை மாநிலத்திற்குள் வராமல் தடுக்க, தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்' என, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக்கில் ஆன அரிசி, முட்டை, முட்டைகோஸ் போன்ற பொருட்களை சீனா தயாரித்து, இந்தியாவுக்குள் அனுப்பி ஆறு மாதங்களுக்கும் மேலாகி விட்டது. ஆனால், இப்போது தான், அவை இந்தியாவுக்குள்ளும், தமிழகத்திற்குள்ளும் ஊடுருவி உள்ளது போல், அமைச்சர் பேசி உள்ளார்.
'தமிழகத்தில் அரிசி பற்றாக்குறைக்கு இடமில்லை' என, அடித்து கூறுகிறார். பெரும்பாலான மக்கள், அரசின் இலவச அரிசியை வாங்கி தான் வீட்டில் சோறு சமைப்பது போல், அமைச்சர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி, கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் தீவனமாக உபயோகிக்கப்படுகிறது என்பது கூட தெரியாமல், ஒரு அமைச்சர் இருக்கிறார் என்றால், அது அமைச்சர் காமராஜ் ஆக தான் இருக்க முடியும்!
பான் மசாலா, குட்கா போன்றவற்றிற்கு தடை உள்ளது; ஆனால். அவை சர்வ சாதாரணமாக மார்க்கெட்டில் விற்கப்படுகிறது; அரசு என்ன நடவடிக்கை எடுத்து தடுத்து இருக்கிறது... 'கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, ஒப்புக்கு சொல்கிறார், அமைச்சர்.
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டடங்களை, இடிக்கச் சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நடைமுறைப்படுத்தலில் கிஞ்சிற்றும் கவலைப்படாத, முயற்சிக்காத, தமிழக அரசு தான், பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டைகளை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப் போகிறது!
'பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டு, உடல்நலம் பாதிக்கப்பட்டு, பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' என்ற ஒரு செய்தி வரட்டும். அப்புறம் பார்க்கலாம்; கடும் நடவடிக்கை, கைது, பறிமுதல், 'சீல்' வைத்தல் போன்ற வேடிக்கைகளை, அரசு காட்டும். இவ்விஷயத்தில், அமைச்சர் காமராஜ், கொஞ்சம் முந்திக் கொண்டார்... அவ்வளவு தான்!

நிரந்தர சீனியர்டாக்டர்களுக்குமுன்னுரிமை வேணும்!

கே.ஜான் வெஸ்லி, பொதுப்பணித் துறை (பணி நிறைவு), கோவையிலிருந்து எழுதுகிறார்:
தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், பிப்ரவரியில் பணி மாறுதல் வழங்கப்படுகிறது; இதை, மருத்துவ கவுன்சில் தருகிறது.
இந்தாண்டு ஜூன் துவங்கியும், பணி மாறுதல் மேற்கொள்ளப்படவில்லை. பிப்ரவரி, மே மாதங்களில் நடைபெறுவதாக இருந்த, 'கவுன்சிலிங்' இரு முறை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு முறையும் டாக்டர்கள் ஏதாவது ஒரு காரணத்திற்காக, எதிர்ப்பு தெரிவிப்பதால், பணி மாறுதல் நிறுத்தி வைக்கப்படுகிறது.
சமீபத்தில், ஜூன், 2, 3ல் நடைபெற இருந்த கவுன்சிலிங், எதிர்ப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இது வாடிக்கையாகி விட்டது.
பணி மாறுதல் வேண்டி, கோவை, நெல்லை போன்ற தொலை துாரங்களில் இருந்து, சென்னை வருவதால், பல சிரமங்கள் ஏற்படுகின்றன; ரயில்களில் டிக்கெட் முன்பதிவும் கிடைப்பதில்லை.
டிக்கெட் முன்பதிவு செய்து சென்னை வந்தாலும், தேவையில்லாமல் சென்னையில் சில நாட்கள் தங்க வேண்டியும் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், பட்ட மேற்படிப்பு முடித்த, சீனியர் மருத்துவர்களுக்கு, முதலில் மாறுதல் கவுன்சிலிங் வைப்பது தான், இன்று வரை கடைபிடிக்கப்படும் நடைமுறையாக உள்ளது.
ஏற்கனவே, இவர்கள் பல ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணிபுரிந்தவர்கள்.
ஆனால், இந்த ஆண்டு தற்காலிகமாக பணிபுரியும் அல்லது ஜூனியர் மருத்துவர்கள், 'நாங்கள் ஏற்கனவே பட்ட மேற்படிப்பு முடித்திருப்பதால், எங்களுக்கு முதலில் மாறுதல் கவுன்சிலிங்கை வையுங்கள்' என, அடம் பிடிக்கின்றனர். இதனால், நிரந்தர சர்வீஸ் சீனியர் மருத்துவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
பி.ஜி., 'ரிசல்ட்' விரைவில் வெளிவர உள்ளது. எனவே, அதுவரை பொறுத்திருந்து, 'ரிசல்ட்' வந்த பின், வழக்கம் போல், நிரந்தர சீனியர் மருத்துவர்களுக்கு, முதலில் மாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டுமென்று, பாதிக்கப்பட்ட மருத்துவரின் தந்தை என்ற முறையில் அரசை கேட்டுக் கொள்கிறேன்!

தமிழன்தலைநிமிரவழி காணுங்கள்!

கு.அருண், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
ஒவ்வொரு ஆண்டும், அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., போன்ற உயர்ந்த, 24 வகையான அகில இந்திய பணிகளுக்கு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்துகிறது.
சமீப காலங்களாக மேற்படி தேர்வுகளில், தமிழக மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று வெற்றி பெறுகின்றனர்.
நடப்பாண்டில், நாடு முழுவதிலும், 2,961 பேர் நேர்முகத் தேர்வை எதிர்கொண்டனர். அவர்களில், 1,099 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில், 84 பேர் தமிழக மாணவர்கள்.
ஒவ்வொரு மாணவனும், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெறும் போது, அவர்கள், 'ஏழை, எளிய மக்களுக்கு நேர்மையாக சேவை செய்வேன்' என்று உறுதிமொழி எடுப்பதும், நாளிதழ், 'டிவி'க்களுக்கு பேட்டி கொடுப்பது வழக்கம்!
ஆனால், பதவிக்கு வந்த பின், அவர்கள் ஊழல் அரசியல்வாதிகளுடன் இணைந்து, ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையே சீரழித்து விடுகின்றனர்.தமிழக தலைமைச் செயலராக இருந்த ராமமோகன ராவ் பணியில் இருக்கும்போதே, அவரின் அலுவலகம், வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.ஊழல் மூலம் சொத்து குவிக்கலாம் என்பதற்கு ராமமோகன ராவ் போன்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உதாரணமாக உள்ளனர்.

புதிதாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக பணிபுரிய வருவோர், தங்களுக்கு முன் உதாரணமாக, சுடுகாட்டு ஊழலை கண்டுபிடித்த உமாசங்கர், கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் போன்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி போல் வர வேண்டும்.புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனரான, கிரண்பேடி போன்ற, ஐ.பி.எஸ், அதிகாரிகளை போன்று நேர்மையாக பணிபுரிய வேண்டும்.தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள, 84 மாணவர்களும் எதிர்காலத்தில், தாங்கள் சிறந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் என, தனி முத்திரை பதிக்க வேண்டும்.
ஊழலால் தலைகுனிந்துள்ள தமிழன் மானம் தலைநிமிர வழிவகுக்க வேண்டும். தங்களுக்கு தாங்களே சுய பரிசோதனை செய்து, தங்கள் பணியை நேர்மையாக செய்ய உறுதிமொழி எடுக்க வேண்டும்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement