Advertisement

இது உங்கள் இடம்

கமல் ப்ளீஸ்... வேண்டாம் விபரீத முடிவு!கோ.வெங்கடேசன், திருநின்றவூர், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: 'சரக்கு மற்றும் சேவை வரியில், சினிமாவுக்கு விதித்துள்ள, 28 சதவீத வரி விதிப்பை, மத்திய அரசு குறைக்காவிட்டால், சினிமாவை விட்டு விலகுவேன்' என, நடிகர் கமல் அதிரடியாக பேட்டி அளித்துள்ளார்.கமலின் எச்சரிக்கையால், நாட்டின் பன்முக வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு, சட்டம் - ஒழுங்கை சீர்படுத்துவது, லஞ்ச ஊழலை ஒழிப்பது, கல்வி புரட்சி எல்லாம், ஸ்தம்பித்து விடும் போல் தெரிகிறதே!இவரது சினிமாக்களில், இந்திய, தமிழ் கலாசாரம் எப்படி எல்லாம் காக்கப்பட்டது... இனி, அது போன்ற கலாசார பாதுகாப்புக்கு நாதி ஏது... இனி, சினிமா உலகமும், அவ்வளவு தானா... கமலின், கடும் எச்சரிக்கையால், நாட்டின் பல தலைவர்களும், சினிமா துறையை சேர்ந்த பலரும், தங்கள் துாக்கத்தை தொலைத்து விட்டனரே!
நாட்டில், எத்தனையோ நல்ல தலைவர்கள், கலைஞர்கள் போய் சேர்ந்து விட்டனர். அந்த ஈடு செய்ய முடியாத இழப்பை, கமல் ஈடுகட்டி வருகிறார் போலும்; நாட்டையும், மக்களையும் நிம்மதி அடைய செய்து வருகிறார்.இப்படி எச்சரிக்கை விடுத்து, அரசையே அதிர்ச்சியில் ஆழ்த்துகிறாரே; இந்த இளம் வயதில் சினிமாவை விட்டு விலகலாமா...கமல் சார், கொஞ்சம் பெரிய மனதுடன், தங்கள் எச்சரிக்கையை திரும்பப் பெறுங்கள்; வேண்டாம், விபரீத முடிவு!

கலப்படத்திற்குமுடிவு கட்டவழி காணுங்கள்!


பொன்.கருணாநிதி, கோட்டூர், பொள்ளாச்சியிலிருந்து எழுதுகிறார்: 'தனியார் பாலில் கலப்படம்' என்ற வார்த்தை பிரயோகம், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் தினமும் ஒலித்து கொண்டிருக்கிறது.இதுவரை, பாலில் கலப்படம் செய்வோரை கண்டறிய முறையான ஆய்வுகள் நடத்தப்படவில்லை என்பதும், அமைச்சரின் பேச்சில் இருந்தே தெளிவாக தெரிகிறது.பாலில் கலப்படம் செய்வோருக்கு, கடுமையான தண்டனை கிடையாது. சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் போதிய அளவில் இல்லாததும் ஒரு காரணமாக
கூறப்படுகிறது.முன்பெல்லாம் மாட்டு வண்டிகளில் அதிக பாரம் ஏற்றினாலோ, ஆடு, மாடுகளை அதிகளவில், லாரிகளில் ஏற்றினாலோ, விலங்குகளை அடித்து துன்புறுத்தினாலோ, அவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, மிருகவதை தடுப்பு சங்க ஆய்வாளர்கள் ஓடோடி வருவர்!
தற்போது, அந்த ஆய்வாளர்கள் எண்ணிக்கையும் மிக மிக குறைவாக உள்ளது. அரசின் நிதி நெருக்கடி காரணமாக, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.பாலில் கலப்படம் செய்வோரை கண்டறிய என்னென்ன தேவை என்பதை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முதலில் கண்டறிந்து பட்டியலிடட்டும்; அதன்பின், 'டிவி' மீடியாக்களிடம், தனியார் பால் நிறுவனங்கள் மீது பழி சுமத்தட்டும்...
தற்காலிக நடவடிக்கையாக, கிராமப்புறங்களில் பணியாற்றும், கால்நடை ஆய்வாளர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி, பாலில் கலப்படம் செய்வதையும், மிருக வதைகளையும் முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுங்கள், மிஸ்டர் ராஜேந்திர பாலாஜி!

'சீனியர் சிட்டிசன்'நலனில் அக்கறைகாட்டுங்கள்!


மரகதம் ராகவசிம்ஹன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில் இருந்து பெங்களூருக்கு, 'ஏசி' கோச்சில் செல்ல, நான்கு பேருக்கு, 'ஆன்லைனில்' டிக்கெட் முன்பதிவு செய்தோம்.எனக்கு வயது, ௭௮. என் கணவருக்கு, ௮௧ வயதும், அவரது தம்பிக்கு, ௭௦ வயதும், அவரது மனைவிக்கு, ௬௦ வயதும் ஆகிறது; நால்வருக்கும், 'லோயர் பெர்த்' ஒதுக்க வேண்டும் என, கோரி இருந்தோம்.ஆனால், எல்லாருக்கும், 'அப்பர் பெர்த்' தான் கிடைத்தது. எங்களால், மேலே ஏற முடியாது. எனவே, ஐ.ஆர்.டி.சி.,யிடம் முறையிட முடிவு எடுத்தோம். நான்கு டிக்கெட்களையும் ரத்து செய்தோம். அதனால், எங்களுக்கு, ௫௯௫ ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
பின், ஐ.ஆர்.சி.டி.சி.,யிடம் முறையிட்டோம். பின், மீண்டும் டிக்கெட் முன்பதிவு செய்தோம். மீண்டும், 'அப்பர் பெர்த்' தான் கிடைத்தது. வயதானவர் எப்படி ஏறுவர் என, அதிகாரிகளுக்கு தெரியாதா...எல்லா, 'லோயர் பெர்த்' டிக்கெட்களையும், 'தத்கல்'லுக்கு ஒதுக்கி விடுவதாக கேள்விப்பட்டோம்.நாங்கள் பயணம் செய்த ரயிலில், இளம் ஜோடி தத்கலில் பதிவு செய்து, 'லோயர்பெர்த்'தில் பயணம் செய்வதை கேட்டறிந்தோம். வயதானவர்கள் மீது, ரயில்வே அலுவலர்கள் கருணையே காட்ட மாட்டார்களா...
சில நாட்களுக்கு முன், இதே பகுதியில் வயதான வாசகர் ஒருவர், ரயிலில் தனக்கு ஏற்பட்ட சங்கடங்கள் குறித்து குறை கூறி இருந்தார். வயதான பயணிகளின் நலனின், ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்டட்டும்!தமிழர்களைவிமர்சனம்செய்யாதீர்கள்!


ஆர்.சவுந்தரராஜன், வெள்ளலுார், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழர்கள் குறித்தும், தலைவர்கள் குறித்தும், இதே பகுதியில் வாசகர் ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
தமிழகத்தை ஆள, ரஜினிக்கு மட்டும் உரிமை இல்லையா எனவும் கேள்வி கேட்டிருந்தார். தமிழர்களை விமர்சனம் செய்வோருக்கு சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன்...
● எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா பிழைப்பு தேடி, தமிழகம் வந்தோர் என்றால், வாசகர் கூறும் ரஜினி, தமிழர்களையும், தமிழகத்தையும் மட்டும் காப்பாற்றுவதற்காக, கங்கணம் கட்டி வந்தவரா?
● ரஜினியும் பிழைப்பு தேடி, தமிழகம் வந்தவர் தானே; ஒரு தலைவர் அல்லது நடிகரை யார் வேண்டுமானாலும் விரும்பலாம்; ஆதரவு தெரிவிக்கலாம்; அது, அவரவர் தனிப்பட்ட விருப்பம்
● ரஜினியை ஆதரிப்போர் ஆதரிக்கட்டும். அதை பற்றி யாருக்கும், எந்த கவலையும் இல்லை. ஆனால், ஒட்டுமொத்த தமிழர்களையும் கேவலமாக பேச, யாருக்கும், எந்த அருகதையும் கிடையாது!
● எம்.ஜி.ஆர்., - கருணாநிதி, ஜெயலலிதா, மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாபெரும் தலைவர்கள். அதைப் போல், ரஜினியும் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தலைவர் ஆகட்டும். அதை விட்டு, ரஜினி மட்டும், தமிழகத்தை துாக்கி நிறுத்த போவது போலும், மற்றவர்கள் எல்லாம், நிறுத்தாதவர்கள் என்றும் கூறுவதும் எந்த விதத்தில் நியாயம்?
இனிவரும் காலங்களிலாவது, தமிழர்களையும், தலைவர்களையும் விமர்சனம் செய்யாதீர்கள்!


தலைகீழாக நின்றாலும் ஏமாற மாட்டார்!

வீ.ராஜகோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்க போகிறேன்; அதற்குள் கட்சியை ஒருங்கிணைக்கா விட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதைச் செய்வேன்' என, சிறையில் இருந்து ஜாமினில் வெளி வந்த, தினகரன் மிரட்டியுள்ளார்; இது, முதல்வர் பழனிசாமி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
தினகரனை, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள் சந்தித்து, மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர். சிலர் அமைச்சர் பதவி கேட்டு, முதல்வர் பழனிசாமியிடம் முறையிட்டனர். எதற்கும், அவர் செவி சாய்க்காமல் மவுன புரட்சி செய்து வருகிறார்.அதனால், தினகரனை சந்திக்கின்றனர்; அவரை சந்திப்பதால், கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்த முடியும் என, அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் நினைத்து விட்டனர் போலும்!ஏப்., 17ல், தினகரன், 'கட்சியில் இருந்து விலகி இருக்க சொன்னால், விலகி கொள்கிறேன்' என்றார். ௪௦ நாட்களுக்கு மேல், டில்லி திஹார் சிறையில் இருந்த அவர், ஜாமினில் வெளிவந்தவுடன், 'நான் தான் அ.தி.மு.க., துணை பொதுச்செயலர்; கட்சியின் பொதுச்செயலர் சசிகலாவை சந்தித்த பின், முடிவை அறிவிக்கிறேன்' என்று கூறி,
பெங்களூரு சென்றார்.சசிகலாவை சந்தித்த பின், 'அ.தி.மு.க.,வின் துணை பொதுச்செயலர், சிறையில் சசிகலா உள்ளதால், பொதுச்செயலர் பொறுப்பை நான் தான் கவனிக்கிறேன். கட்சியையும், ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு
உள்ளது' என்கிறார்.அவருக்கு ஒத்து ஊதும் வகையில், ராஜேந்திர பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்ட சில அமைச்சர்கள், 'தினகரன் தான் எல்லாம்' என்கின்றனர்.முதல்வர் பழனிசாமி, அமைச்சர்களில் சிலர், எப்படியாவது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை ஏமாற்றி, கட்சியை ஒருங்கிணைத்து விடலாம் என, கங்கணம் கட்டி வருகின்றனர்.
ஆனால், பன்னீர்செல்வம் புத்திசாலியாக தெரிவதால், அவர்கள் ஜம்பம் பலிக்காமல் போய் விட்டது. சசிகலா தரப்பினர், தலைகீழாக நின்றாலும், பன்னீரை ஏமாற்ற முடியாது.'ஜெயலலிதா மரணத்தின் மர்ம முடிச்சை, விசாரணை கமிஷன் மூலம் களைய வேண்டும்; சசிகலா,
தினகரன் குடும்பத்தை, கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் அகற்ற வேண்டும்' என்ற நிபந்தனைகளில் இருந்து, இன்னும் பன்னீர் மாறவே இல்லை.தினகரன், சசிகலா குழுவினர் என்ன நாடகம் நடத்தினாலும், அதனால் பயன் இல்லை. இதற்கெல்லாம் முடிவு கட்டும் கடிவாளம், தேர்தல் கமிஷனுக்கு தான் உண்டு.
தேர்தல் கமிஷனுக்கு, தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு, அ.தி.மு.க.,வின் பொதுச்செயலராக, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் நியாயமானதாக இருக்க வேண்டும். அவை விரைவாக வரும்பட்சத்தில், குழப்பங்களுக்கு
நிச்சயம் தீர்வு கிடைக்கும்!யோக்கியராகவலம் வந்தால்மக்கள் நம்புவரா?


கே.ஜே.ஜஹாங்கீர், நகரி புதுப்பேட்டை, சித்துார் மாவட்டம், ஆந்திர மாநிலத்திலிருந்து எழுதுகிறார்: 'அ.தி.மு.க., மூன்றாக பிளவுபட்டு இருப்பதால், தி.மு.க., சுலபமாக ஆட்சிக்கு வந்து விடும்' என்கிறார், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின்; தி.மு.க.,வினரின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது!ஜெயலலிதா உயிருடன் இல்லை. தி.மு.க., தலைவர் கருணாநிதி செயல்பாட்டுடன் இல்லை. அவர் தொடர் சிகிச்சையில் இருக்கிறார்.அ.தி.மு.க., மூன்று அணியாக பிரிந்து இருப்பதாலும், அடுத்தகட்ட தலைவராக தான் வந்து விடலாம் என்றும், எளிதாக ஆட்சியை பிடித்து விடலாம் என்றும் எண்ணுகிறார் போலும், ஸ்டாலின்.அன்று, தி.மு.க., ஆட்சியில் நடந்தது என்ன... மாவட்ட வாரியாக, நில மோசடியில் அக்கட்சியினர் ஈடுபட்டனர். பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்தன.மதுரையில், கருணாநிதியின் மகன் அழகிரியின் ஆதரவாளர்களின் அட்டகாசம் தாங்க முடியாத அளவிற்கு நடந்தேறியது. தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தோர் எல்லாம், முடிந்தவரை கொள்ளை அடித்தனர்.
இன்று, தமிழகத்தை ஊழல், கொள்ளையில் இருந்து மீட்க போகிறாராம், ஸ்டாலின்; இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள்.தி.மு.க.,வின் கொள்ளை ஆட்சியையும், அ.தி.மு.க.,வின் அராஜக ஆட்சியையும், மக்கள் சந்தித்து விட்டனர். திராவிட கட்சிகளை புறந்தள்ளி, மாற்று சக்தி உருவாக வேண்டும் என்ற எண்ணம், அனைவரிடமும் எழுந்து
உள்ளது.தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, இப்போதைய நிலையில், தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., - காம்ரேட்டுகள் என, எந்த கட்சிகளையும் கூற முடியாது. தேர்தல் நடந்தால், நிச்சயம் ஒரு மாற்றத்தை, தமிழகத்தில் எதிர்பார்க்கலாம்!

அமைச்சருக்குதிராணிஉண்டா?


கோ.மாரிசேர்வை, வருவாய் மேற்பார்வையாளர், மின்சார வாரியம் (பணி நிறைவு), சிவகங்கையிலிருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், இன்றுள்ள சூழலில், அத்தி பூத்தாற் போல் சில நல்ல விஷயங்களும் நடைபெறுகின்றன.தனியார் பால் நிறுவனங்களில் சில, 'கலப்படம் செய்து பாலை விற்கின்றன' என, தடாலடியாக, பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.'தனியார் பால் நிறுவன பாலில், பார்மாலிடின் பெராக்சைடு, ஹைட்ரஜன் பெராக்சைடு, காஸ்டிக் சோடா மற்றும் கிழங்கு மாவு போன்றவை கலக்கப்பட்டு உள்ளன' என, ஆணித்தரமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டுகிறார்...'நான் தனியார் பால் நிறுவனங்களிடம், ஏதோ எதிர்பார்த்து இருந்து, அவர்களிடம், 'கையூட்டு' பெற்று இருந்தால் அது, தான் நரகலை தின்பதற்கு ஒப்பாகும்' எனவும் கூறியுள்ளார்; அவர் கூற்றில் உண்மை கூட
இருக்கலாம்.என் இளமை பருவத்தில், ஊருக்குள் பால் ஊற்ற வருபவர் எதிரில், சுகாதார ஆய்வாளர் வந்தால், சைக்கிளையும், பாலையும் கீழே சாய்த்து விட்டு ஓடி விடுவர்.அன்று, அரைகால் டவுசர் போட்டு, களத்தில் இருந்தார், சுகாதார ஆய்வாளர். இன்று, அதிகாரி எல்லாம் முழுக்கால் டவுசர் போட்டுள்ளனர். அதனால் தான், பாலை சோதனை செய்வதில்லையோ என்னவோ...
பால் விஷயத்தில் அக்கறை எடுக்கும், ராஜேந்திர பாலாஜி, விரைவில் எந்த நிறுவனங்கள் எல்லாம், பாலில் கலப்படம் செய்தன என்ற பட்டியலை தைரியமாக வெளியிடட்டும்; அவர் துறை மீது வைத்துள்ள அக்கறைக்கு, சபாஷ் போடலாம்!

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    'ஆன்லைனில்' டிக்கெட் முன்பதிவு செய்தால் பெறும்பாலும் அப்பர் பெர்த் தான் கிடைக்கிறது.

  • Shiva Kumar - Chennai,இந்தியா

    டேய்.. அந்த கமல்... ஏற்கனவே நாட்டையே விட்டு ஓடி போறேன்னு சொன்னான்.... அவனோட நியூஸ் எல்லாம் போட்டு ஏன்டா அவனை பெரியா ஆளு ஆக்கரீங்க

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    பாலில் கலப்படம் செய்ப்பவர்களின் பட்டியல் அவரிடம் இல்லாமல் இல்லை. அதை வெளிப்படுத்தி மக்களை எச்சரிக்க மாட்டார். மந்த லிஸ்டை 'வேறு' உபயோகத்திற்காக வைத்திருக்கிறார்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement