Advertisement

அக்கம் பக்கம்

'செல்பி அலர்ஜி!'

லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு, மொபைல் போனில், 'செல்பி' எடுப்பதே அலர்ஜியான விஷயம். சமீபத்தில், பிரதமர் நரேந்திர மோடி குறித்து எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள், ஜனாதி பதி மாளிகையில் வெளியிடப்பட்டன. இவர் தான் முதன்மை விருந்தினர்.அப்போது, இவருடன், 'செல்பி' எடுக்க நிறைய பேர் முயன்றனர். இதைப் பார்த்ததும் நொந்த சுமித்ரா, 'செல்பி போட்டி வைத்து, பெண் குழந்தையின் மேம்பாட்டுக்கு பிரதமர் பிள்ளையார் சுழி போட்டார். ஆனால் எனக்கோ, செல்பி எடுத்துக் கொள்வதென்றாலே அலர்ஜியா இருக்கு... வேண்டாம், என்னை விட்டு விடுங்கள்' என, மேடையிலேயே சொன்னார்.
மேலும், 'உங்கள் யாருக்காவது செல்பி எடுக்க ஆசையாக இருந்தால், பிரதமரிடம் செல்லுங்கள்; அவர் ஆவலாக உங்களுடன் செல்பி எடுத்துக் கொள்வார்' என, சிரித்தபடியே கிண்டலடித்தார்.இதைக் கேட்டதும், விழாவுக்கு வந்திருந்தவர்கள், 'குபீர்' சிரிப்பு சிரித்தாலும், 'மேடம் ஜி... இப்படி வெளிப்படையா பேசினா, வம்புல மாட்ட மாட்டீங்களா...' எனக் கேட்க, 'இதெல்லாம் சும்மா ஜுஜுபி மேட்டர்... மோடி ஜி இதையெல்லாம் தப்பா எடுத்துக்கமாட்டார்' எனக் கூறி, மற்றவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்!



நாயுடுக்கு 'ஆப்பு!'

ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, ஆந்திராவுடன், தெலுங்கானாவையும் ஆள வேண்டும் என்ற ஆசை மிக அதிகமாகவே உள்ளது. அதற்காக, பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். அதில் ஒன்று, கட்சிக் கூட்டங்களை தெலுங்கானாவிலும் அடிக்கடி நடத்து வது. முதல் முயற்சியாக ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்தார்.தெலுங்கானா மாநிலம் உருவான பின், முதன் முறையாக, 'மஹாநாடு' என்ற பெயரில், தெலுங் கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் கூட்டத்தை நடத்தி னார். கூட்டத்தில் நாயுடு பேசுகையில், 'தெலுங்கானா மக்கள் என் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்க்கையில், ஐதராபாத்திலேயே தங்கி விடலாம் என்றே தோன்றுகிறது. நீங்கள் எனக்கு ஒரு வாய்ப்பு தந்தால், மாநிலத்தை முன்னேற்றுவேன்...' என, கூடியிருந்த மக்களுக்கு, 'ஐஸ்' வைத்தார்.
மக்கள் ஆரவாரம் செய்தாலும், கூட்டம் எப்படி நடக்கிறது என்பதைப் பார்க்க வந்திருந்த, எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., - காங்., கட்சியினர் இந்தப் பேச்சை ரசிக்கவே இல்லை. 'பொறுங்க... பொறுங்க... இன்னும் ரெண்டு வருஷத்துல, ஆந்திராவுல சட்டசபை தேர்தல் நடக்கப் போகுது... அப்ப, மண்ணைக் கவ்விட்டு, வேறு எங்கே போக முடியும்... இங்க தானே வரப் போறீங்க...' எனக் கிண்டலடித்தனர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement