Advertisement

டிரம்பின் முரட்டு பிடிவாதம்

பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா பின்வாங்குகிறது. உலகை பெரிய அளவில் மாசுபடுத்தும் நாடு தன் பொறுப்பிலிருந்து விலகுகிறது. பெரும் வெட்கக்கேடு.எங்கிருந்து வருகின்றனர் இம்மாதிரியான தலைவர்கள்?தன் பொறுப்பின்மையாலும், மட்டற்ற வளர்ச்சி எனும் பெயரிலும் உலகின் பசுமையை அழித்து உலகை மாசுபடுத்தியவர்கள், இப்போது எல்லோரும் சேர்ந்து சில நல்வழிகளை கடைபிடிக்கலாம் என்றால் வர மறுக்கின்றனர்.
என்ன ஒரு கீழ்த்தரமான பொறுப்பு மீறல். இதில் ஒரு பெரிய நொண்டி சாக்கு என்னவென்றால், இந்த பாரிஸ் ஒப்பந்தம் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் நன்மை பயப்பதாம். சரி, ஒரு வாதத்திற்கு அப்படியே வைத்துக் கொண்டாலும், இவர்கள் ஏன் விலக வேண்டும்?
இது, அமெரிக்காவின் பொருளாதாரத்தை குலைக்கும் சீனாவின் சூழ்ச்சியாம்! - உளறிக் கொட்டியிருக்கிறார் டிரம்ப். இவரது பெண்ணே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அமெரிக்காவின் சுரங்க அதிபர்கள், எண்ணெய் நிறுவன அதிபர்கள்- உள்ளிட்ட தொழில்துறையினர், சில அதிகாரிகள், அரசியல்வாதிகள் இவர் முடிவை ஆதரித்துள்ளனர். இதன் பின்னணி என்ன?

மாசுபடுத்தும் நாடு : உலகை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு இரண்டாவது இடம். முதல் இடம் சீனாவுக்கு! காபி முதல் எண்ணெய் வரை எதை எடுத்தாலும், உலகின் மூன்றில், 1 பங்கு நுகர்வு அமெரிக்காவுடையது. அதனால், உலகின் முதல் ஐந்து கழிவுகள் வெளியேற்றும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவுக்கு நிரந்தர இடம். அதேபோல், உலகின் ஆறில், 1 பங்கு கரிம வெளிப்பாடு அவர்களுடையது. மேலும், உலக வெப்பமயமாதலில் பெரும் பங்கு அமெரிக்காவுடையது! இந்த தருணத்தில் ஸ்வீடன், டென்மார்க், நார்வே உள்ளிட்ட சிறிய நாடுகளின் பெரும் முயற்சிகள் மிகவும் பாராட்டப்பட வேண்டியவை. பசுமை பொருளாதார திட்டங்கள், கரிம வெளிப்பாடு, பசுமை இல்ல வாயு வெளியேற்ற குறைப்பு, துாய ஆற்றல் என, பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. ஆனால், நம் நாட்டில் சொல்லும்படி ஒன்றும் இல்லை. பருவ மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடும் இங்கே குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கே இழப்பு : பருவநிலை மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால், அதை எதிர்கொள்ளும் திட்டங்களை எந்த ஒரு நாடும் தவிர்க்கக் கூடாது. ஒருவேளை, அது அமெரிக்காவின் வளர்ச்சியையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்றால் கூட, நன்கு யோசித்தே முடிவெடுக்க வேண்டும். 'உலகில் அமைதியை நிலை நாட்டுகிறேன், குடியாட்சியை நிறுவுகிறேன்' என, மற்றதுக்கெல்லாம் முந்தும் அமெரிக்கா, உலக வர்த்தக ஒப்பந்தம் என்ற பெயரில் ஏழை நாடுகளையும், வளரும் நாடுகளையும் ஏமாற்றி, பொறுப்பற்ற வகையில் தனக்கு
மட்டுமே சந்தை அமைத்துக் கொள்ளும் அமெரிக்கா, இதிலிருந்து விலகுவது என்ன நியாயம்?
உண்மையில் டிரம்பின் இம்முடிவு அமெரிக்காவிற்கு பேரிழப்பு. ஆழ்துளை வாயு எடுக்கும் தொழில் எப்படி எண்ணெய் விலையால் தற்போது வீழ்ந்திருக்கிறதோ, அதேபோல் டிரம்பின் இம்முடிவால் சுரங்கம் சார்ந்த ஆற்றல் தயாரிப்பு எதிர்காலத்தில் வீழும். பசுமை பொருளாதார கண்டுபிடிப்புகளில் இவர்கள் கை இனி ஓங்காது. உலகின் முதல் ஐந்து பொருளாதார பலமிக்க இடங்களான கலிபோர்னியா, நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் பசுமை நோக்கிச் செல்லும். இதன் தொடர்ச்சியாக, உள்நாட்டில் தனிமைப்படுத்தப்படுவார் டிரம்ப்.

அது என்ன பாரிஸ் ஒப்பந்தம்? : உலக அளவில் பருவ மாற்றத்தை எதிர்கொள்ள, அதனால் நேரிடும் கடும் சீற்றத்தை குறைக்க, கொண்டு வரப்பட்ட ஒப்பந்தம். 147 நாடுகள் இப்போது இதை வரவேற்றுள்ளன. இந்த நுாற்றாண்டில் வெப்ப அதிகரிப்பை, 2 டிகிரிக்குள் வைப்பதே திட்டம். 2020க்குப் பின் தான் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரும் என்றாலும், இப்போதிருந்தே நடவடிக்கைகள் துவங்கி விட்டன. இதனடிப்படையில், வளர்ச்சி திட்டங்களும், இயந்திரமயமாக்கலும் பாதிக்கப்படாத வகையில், வளர்ந்த நாடுகள் கொஞ்சம் அதிகமாக தடுப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால், வளரும் நாடுகளுக்கு ஓரளவு சலுகைகள் நிறைந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது. பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகக்கூடிய நாடுகளுக்கு பண உதவி முதற்கொண்டு அனைத்து விதமான உதவிகளுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத இயற்கை சார் தொழிற்நுட்பங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்பது, இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம். இப்படிப்பட்ட சூழலில் தான் அமெரிக்க ஒதுங்கியிருக்கிறது. இதில் ஒன்றை முக்கியமாக பார்க்க வேண்டும். வளரும் மற்றும் ஏழை நாடுகளே பருவ மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படும் நிலையில், உலகை மாசுபடுத்தும் காரியத்தை அதிகளவில் செய்யும் அமெரிக்கா, இதில் பின்வாங்கியிருக்கிறது. வர்த்தகம் முதல் எல்லாவற்றிலும் அமெரிக்காவை ஒதுக்கி, பசுமை வழிகளில் உலகம் முன்னேறத் துவங்கினால் மட்டுமே அமெரிக்கா திருந்தும்!

அனந்து
பாதுகாப்பான உணவுக்கான இந்திய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
organicananthoo@gmail.com

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • ramtest - Bangalore,இந்தியா

    சார் மொதல்ல நம்ம நாட்டை பார்ப்போம் ....அப்பறம் அடுத்த நாட்டை குற்றம் சொல்லகிளம்பலாம் .... 1947 இல் நம் நாட்டின் மக்கள் தொகை 33 கோடி ...இப்போ 130 கோடி ... இப்படியே போனால் நாளைக்கு நிற்க கூட இடம் இருக்காது ...எல்லா காடுகளையும் அழித்து விளைநிலங்களாக மாற்ற வேண்டி இருக்கும் ... விளைநிலங்களை வீடுகளாக மாற்ற வேண்டி இருக்கும் ....காற்று , நீர் , வானிலை எல்லாம் சீர்கெட்ட சமூகத்தைத்தான் நமது அடுத்த சந்ததியினருக்குத் தர வேண்டியிருக்கும் ....

  • Edwin - Ypsilanti,யூ.எஸ்.ஏ

    டிரம்ப் மேலே என்ன ஒரு கோபம்?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement