Advertisement

டீ கடை பெஞ்ச்

சி.பி.ஐ.,யிடம் அண்டா வாங்கிய சிதம்பரம் ஆட்கள்''ஆளாளுக்கு தனி ஆவர்த்தனம் பண்றதால, அதிகாரிகள் திண்டாடறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் குப்பண்ணா.
''என்ன விஷயம் பா...'' என்றார் அன்வர்பாய்.
''மதுரையில, அமைச்சர்கள் ராஜு, உதயகுமார் இடையே, மறைமுக பனிப்போர் நடக்கறது... சமீபத்துல, மூணு நாள் பஸ் ஸ்டிரைக் நடந்துதோல்லியோ... அப்ப, பஸ்களை ஓட்டி காட்ட, அமைச்சர்கள் களம் இறங்கினா ஓய்...
''மதுரையில, பஸ்களை இயக்கறது சம்பந்தமா, 16ம் தேதி, கலெக்டர் ஆபீஸ்ல, அமைச்சர் உதயகுமார் ஆலோசனை கூட்டம் நடத்தினார்... இதுல, கலெக்டர், அதிகாரிகள் எல்லாம் கலந்துண்டா ஓய்...
''இதை கேள்விப்பட்ட ராஜு, 'நம்ம பங்குக்கு ஏதாவது செய்யணுமே'ன்னு யோசிச்சு, அன்னைக்கு ராத்திரி, 7:30 மணிக்கு, பைபாஸ் ரோடு டிப்போவுல, ஒரு ஆய்வு கூட்டத்தை
கூட்டினார்...
''வேற வழியில்லாம, இதுக்கும் கலெக்டர், அதிகாரிகள் எல்லாரும் போனா... 'இவா போதைக்கு, நாங்க ஊறுகாயா'ன்னு, அதிகாரிகள் புலம்பிண்டே போனா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''முன்னேற்றம் தெரியுது பா...'' என, அடுத்த விஷயத்திற்குள்
நுழைந்தார் அன்வர்பாய்.''எதுலங்க...'' என்றார் அந்தோணிசாமி.''மத்திய மின் துறை அமைச்சகம், தர நிர்ணய நிறுவனங்கள் மூலமா, மாநில மின் வாரியங்களின் செயல்பாட்டை மதிப்பீடு செஞ்சு, 'கிரேடு' வழங்குது பா...
''தமிழக மின் வாரியம், தனியாரிடம் இருந்து, அதிக விலைக்கு மின்சாரம், உபகரணங்கள், நிலக்கரி வாங்கினதால, கடும் நிதி நெருக்கடியில தவிச்சிட்டு இருந்துச்சு...
''இதனால, 2014 - 15க்கான, மத்திய மின் துறையின் மதிப்பீட்டு அறிக்கையில, நம்ம ஊர் மின் வாரியம், 'சி பிளஸ்' கிரேடுடன், 34வது இடத்துல இருந்துச்சு... போன ரெண்டு வருஷங்களா செலவை குறைக்க,
மின் வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்துச்சு பா...
''இதனால, 2015 - 16 மதிப்பீட்டு அறிக்கையில, 'பி' கிரேடுடன், 25வது இடத்துக்கு, நம்ம மின் வாரியம் முன்னேறி இருக்கு பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.
''சி.பி.ஐ., அதிகாரிகளிடம் வாக்குவாதம் நடத்தி, அண்டாவை வாங்கிட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார் அண்ணாச்சி.''யாருங்க...'' என்றார் அந்தோணிசாமி.''சென்னை நுங்கம்பாக்கத்துல இருக்கிற, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் வீட்டுல, சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினாங்கல்லா... அவர் வீட்டு முன்னாடி, ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், போலீசார்னு நிறைய பேர் குவிஞ்சுட்டாவ வே...
''அக்னி வெயில் உக்கிரமா இருந்ததால, அங்க கூடியிருந்த எல்லாருக்கும் மோர் கொடுக்க, சிதம்பரம் ஆதரவாளர்கள் முடிவு செஞ்சாங்க... அதுக்கு வீட்டுக்குள்ள இருந்த அண்டா,
குண்டாக்களை கேட்டிருக்காவ வே...''ஆனா, 'சோதனை நடக்குறதால, ஒரு துரும்பை கூட தர முடியாது'ன்னு, அதிகாரிகள் மறுத்துட்டாவ... ''சிதம்பரம் ஆதரவாளர்கள்,
அவங்களிடம் கடுமையா வாக்குவாதம் நடத்தி, கடைசியா ஒரு அண்டாவை மட்டும் வெளியே கொண்டு வந்து, அதுல நீர் மோர் தயாரிச்சு, எல்லாருக்கும் கொடுத்தாவ வே...'' என, முடித்தார்
அண்ணாச்சி; பெஞ்ச் கலைந்தது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (2)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    அது தங்க அண்டாவா?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    ஒருவேளை அந்த அண்டா அடியில் Sandwich bottom ஆக இருந்து அதற்குள்கூட ஆவணங்களை திணித்து பின் bottom அடித்திருக்கலாம் அல்லவா ? வ.வரி துறையை சந்தேகம் கொள்ள வைக்க வேறெங்கேனும் இவ்விதம் நடந்திருக்கலாம் எந்த அண்டாவில் எந்த கரன்சியோ,?

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement