Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

தன் மற்றும் தன் மகனின் எதிர்காலம் கண்ணில் நிழலாட, தி.மு.க., மகளிரணி செயலரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான கனிமொழி பேச்சு: வெளிநாட்டினர் போற்றும் மொழி தமிழ்; உலகுக்கு தேவையான கருத்துக்களை சொன்ன மொழி. ஹிந்தியை நாம் எதிர்க்கவில்லை. அதை, நம் மீது திணிப்பதை தான் எதிர்க்கிறோம்; வேண்டும் என்பவர்கள் கற்றுக் கொள்ளட்டும். ஹிந்தி திணிக்கப்பட்டால், மீண்டும் ஒரு மெரினா போராட்டம் வெடிக்கும்.


'பெருமை பேசிக் கொள்ள வேண்டியது, இப்போதைய அரசியல் வாழ்க்கைக்கு அவசியம் தான்... அதற்காக, இப்படியா முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக முதல்வர் பழனிசாமி பேச்சு:
தமிழகத்தில், கடுமையான வறட்சி நிலவும் போதும், குடிநீர் தட்டுப்பாடு இல்லை. விவசாயிகளுக்கு, வறட்சி நிவாரணம் வழங்கப்படுகிறது; தேவையான வசதிகளும் செய்யப்படுகின்றன. அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். அரசுக்கு தொடர்ந்து, மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.தி.மு.க.,வைச் சேர்ந்த, நடிகர் ராதாரவி பேட்டி:
நடிகர் ரஜினி, 'எதுவாக இருந்தாலும், கடவுள் முடிவு எடுப்பார்' என்கிறார். அவர் எந்த முடிவை எடுத்தாலும் வரவேற்கத்தக்கது. தமிழக மக்களிடம் அதிக பணம், புகழ் சம்பாதித்துள்ள அவர், மக்களுக்கு செலவு செய்ய தயாராக இருக்கிறார் என, நினைக்கிறேன். தீபாவின் கணவர், டிரைவர் எல்லாம் அரசியலுக்கு வரும் போது, ரஜினி அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை.பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், ராஜ்யசபா, எம்.பி.,யுமான, இல.கணேசன் பேட்டி
: மத்திய அரசுடன், தமிழக அரசு இணைந்து செயல்படுவது பாராட்டிற்குரியது. இரு அரசுகளும் இணைந்து செயல்படும் போது தான், நாடு முன்னேறும். தமிழக அரசுக்கு, மத்திய அரசு துணையாக இருந்ததால் தானே, ஜல்லிக்கட்டு சாத்தியமானது.'இதற்கு தான், 'தெய்வம் நின்று கொல்லும்' என்ற அர்த்தமோ...' என, கேட்கத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., துணை பொதுச் செயலர் மல்லை சத்யா பேச்சு:
ம.தி.மு.க., 24வது ஆண்டை அடியெடுத்து வைத்துள்ளது. இந்த கட்சி உருவாகுவதற்கு, கோபாலபுரம் குடும்பமே காரணம். தி.மு.க., துவங்கி, 68 ஆண்டுகளில், 1961ல், ஈ.வெ.கி.சம்பத், 1972ல், எம்.ஜி.ஆர்., 1993ல், வைகோ என, மூன்று பிளவுகளை சந்தித்துள்ளது. யாருக்காக, வைகோவை கருணாநிதி வெளியேற்றினாரோ, அவராலேயே கருணாநிதி, செயலற்ற தலைவராக அறிவிக்கப்பட்டு உள்ளார். தி.மு.க., பலமான எதிர்க்கட்சி; ஆனால், பலவீனமான தலைமையால் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Sekar - Maraimalai Nagar

    ராதாரவி பாட்டுக்கு நம்ம வருங்கால அமெரிக்க அதிபர் மக்களுக்கு செலவு செய்யத் தயாரா இருக்கார்னு சொல்லி அவருக்கு பேதியக் கிளப்பிட்டாரே. இதுக்கு வீட்டுல பர்மிசன் கிடைக்குமா? அவரே பாவம் பணம் பண்ணும் மிசினாத்தான் இருக்காரு.இதுல இந்த ராதாரவி வேற

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement