Advertisement

72 மணிநேர தலைவலி!

மொத்தம், 72 மணிநேர தொந்தரவுடன் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது வரவேற்கத்தக்கது. இன்றைய சூழ்நிலையில், தமிழகத்தில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மக்களை தவிக்க வைக்கின்றன. அதிக வறட்சி, கடுமையான வெப்பம், குடிநீர்ப் பிரச்னை, கால்நடைகள் எண்ணிக்கை குறையும் அபாயம், எந்த துறையை எடுத்தாலும், அதில் உள்ள சங்கடங்கள் வெளிவரும் போக்கு, மறுபுறம் கிரிமினல் குற்றங்களில் வித்தியாசமான பின்னணிகள் என, அடுக்கிக் கொண்டே போகலாம். சென்னை நகர மெட்ரோ ரயில் திட்டத்தில் ஒரு பகுதி நிறைவேற்றம், கோடை மழை சில இடங்களில் பெய்ததில் ஏற்பட்ட நல்ல சூழ்நிலை, வறட்சியைத் தாண்டி காய்கறி விளைச்சல், உணவுப் பொருட்கள் அதிகம் விலையேறாத போக்கு
ஆகியவை, நாம் சந்திக்கும் நல்ல அம்சங்கள். ஆனால், இதற்கும், தமிழக ஆட்சிக்கும் அல்லது கட்சிகளுக்கும் அதிக தொடர்பு இல்லை. குடி மராமத்து திட்டத்தில், குளங்களில் துார்வாருவதில், தி.மு.க.,வினருக்கு ஆர்வம் காணப்படுகிறது. அவர்களும் கோவில் குளங்களை தேர்வு செய்து அதிக ஆர்வம் காட்டுவது, காலத்திற்கு ஏற்ப அவர்கள் கொள்கைகளில் மாற்றம் வருவதைக் காட்டுகிறது போலும். சீமைக் கருவேல மரங்கள், 50 சதவீதம் அகற்றப்பட்ட நிலையில், அதை முற்றிலும் அகற்றுவதா என்ற சர்ச்சை, வழக்காக மாறி அப்பணி நின்றது.
போக்குவரத்து ஊழியர் சம்பள பாக்கி விவகாரம், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் பிரச்னை. வலுவான அரசு அல்லது ஆட்சி இருந்த போது, சட்டசபை தேர்தலுக்கு முன், தங்களது கோரிக்கைகளை வைத்து தீவிரமாக போராடி, ஒரு பகுதியை இவர்கள் பெற்றிருக்கலாம்.
போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத் தலைவர்களுக்கு, தமிழகம் கடன் சுமையில் இருக்கிறது என்பதும், தங்கள் துறை தொடர் நஷ்டத்தில் இயங்குகிறது என்பதும் தெரியாமல் இருக்க
வாய்ப்பில்லை. அதிலும், மார்க்சிஸ்ட் ஆதரவு தொழிற்சங்கம், ஸ்டிரைக்கிற்கு மற்றவர்கள் ஆதரவைப் பெற்ற நேரம், அதை அவர்கள் அமல்படுத்திய விதம், அரசின் முடிவெடுக்கும் தைரியத்தை மதிப்பீடு செய்யும் செயலாக கூட கருதலாம். ஏனெனில், முதல் கட்டமாக இத்தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பல்வேறு பணிக்கொடைகள், 7,000 கோடி ரூபாயில், அரசு, 1,250 கோடி ரூபாய் வரை தர முன்வந்த பின், அப்போராட்டத்தை ஒத்திவைக்கவில்லை. மேலும் அறிவித்த தினத்திற்கு, எட்டு மணி நேரத்திற்கு முன் பஸ்களை இயக்காமல் முடக்கியது.
நுாற்றுக்கணக்கான பஸ்களின் கண்ணாடிகளை உடைத்தது, எந்தப் பின்னணியில் நடந்தது என்பதை, மக்களுக்கு தெரியப்படுத்தினால் நல்லது. அதே சமயம், சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளை, இந்த ஸ்டிரைக் தொடர்பாக கண்டிப்புடன், பஸ் சர்வீஸ் அத்யாவசிய பணிகள் சம்பந்தப்பட்டது. இந்த ஸ்டிரைக்கில் ஈடுபடுவோர் மீது, 'எஸ்மா' என்ற அதிரடி சட்டத்தை பிரயோகிக்கலாம் என்ற அதிரடி, சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே தெரிவித்த, பொதுமக்களுக்கு இடைஞ்சல் தரும் செயல்களை ஆதரிக்காத கருத்தாக இருக்கிறது. கடைசி நேரத்தில் தொழிலாளர்களுடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மட்டும் இன்றி, செங்கோட்டையன் உட்பட மூன்று அமைச்சர்கள் பேச்சு நடத்தியது, நல்ல உதாரணம். அரசின் தலைமை வலுவைக் காட்ட கூட்டாக செயல்படுவதும், தேவைப்பட்டால், நிதி ஆதாரங்களை அவசரமாக திரட்ட மத்திய அரசுடன் பேசுவதும் தவறல்ல.அதற்காக, பா.ஜ., இந்த விஷயத்தில் சாதகம் காணும் என்பதை விட, இன்றிருக்கும் தமிழக அரசின் நிதி பலவீனத்தை சமாளிக்க வேறு வழி கிடையாது.
சட்டசபை கூடி பல விஷயங்களை முடிவு செய்ய வேண்டியது சரிதான் என்றாலும், மத்தியிலும், மாநிலங்களிலும் சரி, எதிர்க்கட்சி என்றால், அதிக குழப்பத்தை ஏற்படுத்துவதே அரசியல் என்பது
வழக்கமாகி விட்டது. அம்மாதிரியான உத்திகளை மக்கள் இப்போது, முன்பு போல ஏற்கவில்லை. அவர்கள் விரும்புவது உடனடி தீர்வு என்பதை, இப்போக்குவரத்து ஊழியர் ஸ்டிரைக் அரசுக்கும், தமிழக கட்சிகளுக்கும் புரிய வைத்திருக்கும்.அ.தி.மு.க., தலைமையிலான அரசு, அண்டை மாநிலமான கர்நாடகா போல இத்துறையை மக்கள் வசதிக்கேற்ற துறையாக மாற்றவும், ஊழியர்கள் குறைகளை களையவும், அடுத்தடுத்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வ பொருளாதார யோசனைகளை கூறி, வழிகாட்ட உதவலாம்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement