Advertisement

டீ கடை பெஞ்ச்

பகிரங்கமாக பேரம் பேசும் மந்திரிகளின் பி.ஏ.,க்கள்''முக்கியமான ஆட்களை எல்லாம் புறக்கணிச்சுட்டாரேன்னு புலம்புறாங்க...'' என, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்ன விஷயம் பா...'' என்றார் அன்வர் பாய்.
''கருணாநிதியின் சட்டசபை வைர விழா, ஜூன் 3ல நடக்க போகுதுல்ல... இதுக்கு, நாடு முழுக்க இருக்கிற அரசியல் கட்சி தலைவர்களை அழைச்சிட்டு இருக்காங்க...
''ஆனா, கருணாநிதியை தன் அரசியல் ஆசான்னு சொல்ற வைகோ, 'என் திருமணத்தை நடத்தி வச்சவர் கருணாநிதி தான்'னு
பெருமையா பேசுற
விஜயகாந்த் மாதிரி உள்ளூர் தலைவர்கள், சினிமா உலகத்துல, கருணாநிதிக்கு நெருக்கமான நடிகர்கள்னு, நிறைய பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்ப வேண்டாம்னு, ஸ்டாலின் சொல்லிட்டாருங்க...
''தி.மு.க., நிர்வாகிகளோ, 'அரசியலுக்கு அப்பாற்பட்டு, கருணாநிதி மேல மரியாதை
வச்சிருக்கிறவங்களை கூப்பிடாம இருக்கிறது சரியில்லை'ன்னு தங்களுக்குள்ள பேசிக்கிறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
''நினைவிட பணியை கிடப்புல போட்டுட்டா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார்
குப்பண்ணா.''யார் நினைவிடத்தை சொல்லுதீரு...'' என்றார் அண்ணாச்சி.
''ஜெயலலிதா உடலை, எம்.ஜி.ஆர்., சமாதி பக்கத்துலயே அடக்கம் செஞ்சிருக்கால்லியோ... இதை, 'எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா நினைவிடம்'னு பெயர் மாத்தி, பிரம்மாண்டமா கட்டறதுக்காக, அரசு சார்புல, 15 கோடி ரூபாயை ஒதுக்கினா ஓய்...
''அப்பறமா, பொதுப்பணித் துறையின், கட்டட கலைஞர்கள் பிரிவினர், மூணு வரைபடங்களை தயாரிச்சு கொடுத்தா... இது தவிர, தனியார் நிறுவனமும், நாலு வரைபடங்களை தயாரிச்சு கொடுத்தது ஓய்...
''இதுக்கு இடையில, சசிகலா, தினகரன்னு அடுத்தடுத்து ஜெயிலுக்கு போக, நினைவிட
பணிகளை கிடப்புல போட்டுட்டா... சசிகலாவிடம் பிளானை காட்டி அனுமதி வாங்காம, நினைவிடத்தை கட்ட கூடாதுன்னு தான், முதல்வர் பழனிசாமி, பணிகளை கிடப்புல போட்டுட்டார்னு, ஜெயலலிதா விசுவாசிகள் சொல்றா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
''பகிரங்கமாவே, 'ரேட்' பேசறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு
வந்தார் அன்வர் பாய்.''யாரு வே...'' என்றார் அண்ணாச்சி.
''ஜெயலலிதா இருந்த வரைக்கும், அமைச்சர்களின், பி.ஏ.,க்கள், 'அடக்கியே' வாசிப்பாங்க... கமிஷன் எல்லாம் வாங்குனாலும், நாலு பேருக்கு தெரியாம, ரகசியமா வாங்குவாங்க பா...
''இப்ப, ஜெயலலிதா இல்லாத சூழல்ல, அமைச்சர்கள் எவ்வளவு சுதந்திரமா உலா வர்றாங்களோ அதை விட அதிக துணிச்சலோட பி.ஏ.,க்கள் வலம்
வர்றாங்க...''தலைமைச் செயலகத்துல, எல்லாரும், முதல்ல அமைச்சரின், பி.ஏ.,க்களை பார்த்து தான், பேசுவாங்க... அப்ப அவங்களிடம், வெளிப்படையாவே, 'இவ்வளவு பணம் ஆகும்... அதுக்கு தயார்னா காரியத்தை முடிச்சுடலாம்'னு பகிரங்கமாவே பி.ஏ.,க்கள் பேரம் பேசறாங்க பா...'' என, முடித்தார் அன்வர் பாய்.
பெஞ்சில் இருந்து எழுந்த அண்ணாச்சி, ''மதுரை மாநகராட்சி, பெண் துணை கமிஷனரை பத்தி பேசினோமுல்லா... அவங்க
கிருஷ்ணகிரிக்கு மாறி போவும் போது, மாநகராட்சியின் விலை உயர்ந்த மொபைல் போனை கொண்டு போகலையாம் வே...''மாநகராட்சியின் போனை விட, 2,500 ரூபாய் கூடுதல் விலை உள்ள போனை தான் கொடுத்துட்டு போயிருக்காங்க... அவங்களுக்கு பிடிக்காதவங்க, தவறான தகவலை பரப்பிட்டாங்கன்னு சொல்லுதாங்க வே...'' என்றபடியே கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (3)

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    அமைச்சரின் பி ஏ க்கள் மட்டுமல்ல, அரசுத்துறைகளில் பணி புரியும் பெரும்பாலான ஊழல் அதிகாரிகளும் எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம் என்ற எண்ணத்தில் துணிந்து கமிஷன்,கையூட்டு பெறுகின்றனர்.

  • sam - Doha,கத்தார்

    எப்படி பட்ட சூழ்நிலையில் தமிழகம் தத்தளிக்கிறது. இப்போதாவது மதிய அரசாங்கம் விழித்து கொண்டு நடவடிக்கை எடுக்குமா.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement