Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'குழப்பமா பேசுறவங்களுக்கு, குழப்பமான விஷயம், ரொம்ப தெளிவாய் விளங்கிடுமோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவதும், வராததும், அவரது தனிப்பட்ட முடிவு, விருப்பம். 'வருங்காலம் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியாது' என, அவர் தெளிவுபட கூறியுள்ளார். அவர், யதார்த்தமான மனிதர்; அவரது வார்த்தைகளுக்கு, அரசியல் அர்த்தம் கற்பிக்கக் கூடாது.
அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேச்சு:
சசிகலா குடும்பத்தினரை, கட்சியில் இருந்து மொத்தமாக வெளியேற்ற வேண்டும் எனக் கூறினோம். ஆனால், சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைத்தது போல், பழனிசாமி நாடகமாடுகிறார். பழனிசாமி, நான் பார்த்து வளர்ந்தவர். அவர் வந்து, எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது, நகைப்பாக உள்ளது.


அகில இந்திய, காங்., செய்தி தொடர்பாளர் மனீஷ் திவாரி பேட்டி:
எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் மத்திய, பா.ஜ., அரசு அச்சமடைந்துவிடும். இப்போது, ஜனாதிபதி தேர்தலில், பொது வேட்பாளரை நிறுத்துவதில், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை அதிகரித்து வருகிறது. இதனால், மத்திய அரசு அச்சமடைந்துள்ளது. அதன் வெளிப்பாடே, ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் வீடுகளில் நடந்த, சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை சோதனை.


'நீங்க மத்திய சுகாதாரத் துறை அமைச்சரா இருந்ததையும்; அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தலைவராக, கேதன் தேசாய் இருந்ததையும், இன்னும் யாரும் மறக்கவில்லை...' எனக் கூறத் தோன்றும் வகையில, பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை:
தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கையை அரசே நடத்துவது வரவேற்கத்தக்கது. இதன் மூலம், மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள், ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுவது தடுக்கப்படும். அதேசமயம், தனியார் மருத்துவக் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்கள் ஆகியவற்றுக்கான கல்விக் கட்டணங்களை, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பது முறையல்ல.


'யானைக்கு காலம் வந்தால், பூனைக்கு காலம் வரும்ன்னு ஒரு பழமொழி சொல்வாங்களே... வேண்டாத வேளையில இது நினைவுக்கு வந்து தொலைக்குது போங்க...' எனச் சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினரும், எம்.பி.,யுமான, இல.கணேசன் பேட்டி:முன்னாள் அமைச்சர் சிதம்பரம் வீட்டில் நடந்த சோதனைக்கு, மத்திய அரசு காரணம் அல்ல. அதிகாரிகள், தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்; தவறு செய்தவர்களை, மத்திய அரசு தண்டிக்கும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement