Advertisement

ஆராய்ச்சி மலர்

கனடாவிலுள்ள மெக்ஜில் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, 'இபுபுரொபென், நாப்ரோக்சென்' போன்ற பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணிகள், இதயத் தாக்குதல் நோய் வர வாய்ப்புள்ளவர்களுக்கு ஆபத்தானவை என்று தெரிய வந்துள்ளது. இந்த வலி நிவாரணிகளை எல்லாரும் தவிர்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் சொல்லவில்லை. ஆனால், இதய நோய் உள்ளவர்களும், வர வாய்ப்புள்ளவர்களும் இவற்றை தவிர்ப்பது நல்லது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

***********

விபத்து அல்லது அறுவை சிகிச்சையால் ஏற்படும் தோல் காயத்திற்கு, தையல் போட்டு ஆறிய பிறகு பெரிய வடு ஏற்படுகிறது. இதை தவிர்க்க, தென் கொரியாவிலுள்ள போஹாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், கடல் சிப்பிகளில் உள்ள குழகுழப்பான பகுதியில் உள்ள வேதிப் பொருளைக் கொண்டு ஒரு புதிய பசையை உருவாக்கியுள்ளனர். இந்தப் பசையை, எலிகளின் காயத்தில் போட்ட, 28 நாட்களில் புண் ஆறி, துளியும் வடு இல்லாமல் போனது. இதை மனிதர்களுக்கு பயன்படுத்த முடியுமா என, தற்போது ஆய்வு நடக்கிறது.

***********

மூளையில் ஓடும் ரத்தக் குழாய்களில் ஏற்படும் குறைபாடுகளுக்கும், வயிற்றில் உள்ள பாக்டீரியாவுக்கும் தொடர்பு இருக்கலாம் என, 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஆய்வு தெரிவிக்கிறது. பாக்டீரியாக்கள் உருவாக்கும் இந்த ரத்தக் குழாய் பாதிப்பு, பிற்பாடு பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இட்டுச் செல்லக்கூடும்.

***********

செயற்கை நுண்ணறிவு மென்பொருள் துறையில், விரைவாக புதிய தகவல்களை வைத்து, 'கற்றுக் கொள்ளும்' ஒரு பிரிவு உண்டு. இத்தகைய, 'இயந்திர கற்றல்' மென்பொருளை வைத்து ஒருவர் தற்கொலை செய்துகொள்ள முயற்சிப்பாரா என்பதை துல்லியமாக கணிக்க முடியும் என விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர். 'சைக்காலஜிகல் சயின்ஸ்' ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த பரிசோதனை முடிவுகள், இயந்திர கற்றல் மென்பொருட்களின் திறனை
வெளிப்படுத்துகின்றன.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement