Advertisement

திரும்பி வரும் தொழில் நுட்பங்கள்!

வரலாறு திரும்பும்; சில தொழில் நுட்பங்களும் அப்படித்தான். காலாவதியாகிவிட்டவை என்று கைவிடப்பட்ட பிறகும், புதிய வடிவில் திரும்ப வந்து அசத்தக்கூடியவை அவை. அப்படியான மூன்று தொழில் நுட்பங்கள் இதோ:

டிஜிட்டலில் நயம் : கறுப்பு - வெள்ளை!



கறுப்பு - வெள்ளை படச்சுருள் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. பல லட்சம் வண்ணங்களில், அதி துல்லியமாக படம் பிடிக்கும் டிஜிட்டல் கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும், கறுப்பு - வெள்ளையில் உலகை படம் பிடிக்க விரும்பும் ஒரு சாரார் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்காக லைக்கா கேமராவினர், 2012ல் உலகின் முதல், கறுப்பு - வெள்ளை டிஜிட்டல் கேமராவை அறிமுகப்படுத்தினர். தற்போது 'பேஸ் ஒன்' தன், 'ஐ.க்யூ., 3,100 எம்.பி., அக்ரோமேட்டிக்' கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த அதி துல்லிய டிஜிட்டல் கேமரா, கறுப்பு - வெள்ளையில் மட்டுமே படம் எடுக்கும்; இதன் விலை, 32 லட்சம் முதல், 35 லட்சம் ரூபாய் வரை. ஆம், இது தொழில் முறை புகைப்படக்காரர்களுக்கு மட்டுமே!

பழைய ரெக்கார்டு புதிய இசை!



எம்.பி., 3 வடிவில் இணையத்தில் பாடல்களை கேட்கும் யுகத்தில், பழைய கீறல் விழாத, 'வினைல் ரெக்கார்ட் பிளேயர்'களை காதலிக்க ஒரு சிறு படை இருக்கிறது. பழைய வினைல் இசைத்தட்டு கருவி, படுத்துக்கொண்டே பாடும். புதிதாக வந்துள்ள 'புரொ-ஜெக்ட் வி.டி., - பி.டி., ஆர்' வினைல் இசைக்கருவி, நின்று விளையாடும்! இதை முக்காலி மேசை மீது நிறுத்தலாம் அல்லது சுவரில் மாட்டிக் கொள்ளலாம். சுழலும் இசைத்தட்டு விழாமல் இருக்கும்படி திருகாணி அமைப்பு பார்த்துக் கொள்கிறது. இசைத்தட்டின் சுழல் கோடுகளை, 'படிக்கும்' உலோக முள்ளும் அதற்கேற்ப வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து வரும் இசையை, 'ப்ளூ டூத்' மூலம் ஹெட் போனுக்கோ, ஸ்பீக்கருக்கோ அனுப்ப முடியும்; விலை, 32 ஆயிரம் ரூபாய்.

கேட்கத் துாண்டும் கேசட்!



ரெக்கார்ட் பிளேயரின் இடத்தைப் பிடித்த கையடக்க கேசட் எனப்படும் ஒலி நாடா பேழைகளை, 'சிடி'க்கள் எனப்படும் குறுவட்டுகள் காலி செய்தன. இருந்தாலும் ஒலி நாடாக்களை ரசிப்பவர்கள் இருக்கவே செய்கின்றனர். அவர்களுக்கு இசையாறுதல் தர, லித்துவேனியாவைச் சேர்ந்த, 'பிரெயின் மாங்க்' என்ற நிறுவனம், 'எல்போ' என்ற கையடக்க ஒலி நாடா கருவியை தயாரித்துள்ளது. ஒரு ஒலி நாடா பேழையை இசைக்கத் தேவையான பாகங்கள் மட்டுமே இதில் உள்ளன. ஒலி நாடாவின் இரு பக்கங்களையும் இது இசைக்கும். சட்டைப் பை மீது இதை பொருத்தி, 'வாக்மேன்' போலவும், ஒலிபெருக்கி அல்லது கணினியில் இணைத்தும் பாடல்களை கேட்கலாம். விரைவில் சந்தைக்கு வரவுள்ள இதன் விலை அறிவிக்கப்படவில்லை.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement