Advertisement

சென்னை போலீசுக்கு தேவை கடின உழைப்பு!

சென்னைக்கு புதிய போலீஸ் கமிஷனர் வந்துள்ளார். இதற்கு முன் கமிஷனராக இருந்த கரண் சின்ஹாவை, பதவியேற்ற சில மாதங்களிலேயே ஏன் மாற்றினர் என, ஆய்வு செய்ய விரும்பவில்லை. அதே நேரத்தில், சென்னையின் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் தன் முயற்சிகளால், பலரது பாராட்டுகளை அவர் பெற்றார்.

நேர்மையானவர் : அதிர்ஷ்டவசமாக, புதிய கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏ.கே.விஸ்வநாதனும், மிகச் சிறந்த தேர்வு தான். தன்னுடைய மிக நீண்ட பணியில் சிறப்பாக பணியாற்றியவர், நேர்மையானவர், பிரச்னையில்லாதவர் என்ற பெயரை பெற்றுள்ளார். மிகவும் கடினமான, யூகிக்க முடியாத இந்தப் பதவியில் அவர் சிறப்பாகவே செயல்படுவார் என எதிர்பார்க்கிறேன்; அதே நேரத்தில், காலை வாரி விடக் கூடிய பிரச்னைகள் குறித்தும், அவர் உணர வேண்டும்.
தன் அனுபவத்தின் மூலம், இந்தப் பதவியை வேறு எதற்காகவும் இல்லாமல், தன் தொழில் பக்தி, நேர்மையை உணர்த்தும் வகையில் அவர் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
புதிய கமிஷனர் வெற்றி பெறுவாரா என்பதை, இரண்டு முக்கிய காரணிகள் முடிவு செய்யும். முதலில், பொதுமக்கள் எளிதில் சந்திக்கக் கூடியவராக இருக்க வேண்டும். பொதுமக்கள் கூறும் புகார்கள், கருத்துக்களில், சிலவற்றில் உண்மையில்லாமலும் இருக்கலாம்; ஆனாலும், அவர்கள் கூறும் கருத்தை கேட்க வேண்டும்.மக்களுக்கு சேவை அளிப்பதற்காக இருக்க வேண்டிய போலீஸ் ஸ்டேஷன்கள், தற்போது அவ்வாறு இல்லை; செயல்படாத, நடவடிக்கை எடுக்காத, லஞ்சத்துக்கு இலக்கணமாக மாறியுள்ளன. அதனால் தான், போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து, தங்கள் புகார்களை கூற வேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர்.இரண்டாவதாக, போலீஸ்காரர்களின் மனக்குமுறல்கள், குறைகள், பிரச்னைகளை, திறந்த மனத்துடன் கேட்க வேண்டும்; இது அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும். போலீசில் உள்ள அனைத்து நிலை ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனில், இதுவரை இருந்த அரசுகள் தொடர்ந்து அக்கறை எடுத்து வந்துள்ளன. சமீபத்தில் மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார். இந்த விஷயத்தில், தனக்கு முன் இந்தப் பதவியில் இருந்த அதிகாரிகளை மிஞ்சக் கூடியவராக, புதிய கமிஷனர் செயல்படுவார் என
எதிர்பார்க்கிறேன்.

குடியிருப்புகள் : தங்கள் பணியிடத்துக்கு அருகிலேயே, தங்களது இருப்பிடம் இருக்க வேண்டும் என்பது, போலீசாரின் எதிர்பார்ப்பு. தற்போது, காவலர்களுக்கான குடியிருப்புகள் அதிக அளவில் இல்லை. சென்னையில் போதிய இடம் இல்லை என்பதால், அரசுடன் பேசி, அதிக அளவில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்ததாக, தனக்கு முன்னிருந்த கமிஷனரின் வழியில், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு புதிய கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து விதிமீறல்களை, குறிப்பாக, அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளின் வாகனங்கள் செய்யும் அட்டூழியங்களை ஒடுக்க வேண்டும்.

போக்குவரத்து விதிகள் : இதில், இரண்டு சக்கர வாகனங்கள் படுத்தும்பாடு சொல்லி மாளாது. நடவடிக்கை எடுப்பதற்கு முன், போக்குவரத்து விதிகள் குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை மீறுபவர்களை, போலீசார் நடத்தும் போக்குவரத்து பள்ளியில், ஒரு நாள் முழுக்க, கட்டாயமாக பாடம் படிக்க வைக்க வேண்டும். இதை தண்டனையாக நினைத்து, கோர்ட்டுக்கு போனாலும், உங்களுக்கு கோர்ட்டின் ஆதரவு கண்டிப்பாக இருக்கும். அதே நேரத்தில், வாகன ஓட்டிகள் இடையே, ஒரு மாற்றம் கண்டிப்பாக உருவாகும்.
ஒட்டுமொத்தமாகவும், இறுதியாகவும், புதிய போலீஸ் கமிஷனரை, அவர் ஆளுங்கட்சியினரின் நியாயமில்லாத கோரிக்கைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் இருந்தே மதிப்பிட முடியும்.
இந்த விஷயத்தில், அமெரிக்காவின் உளவு அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட ஜேம்ஸ் காமேவை குறிப்பிட விரும்புகிறேன். 'நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். உங்கள் அடிமையாக, விசுவாசமாக இருக்க வேண்டும் என்று, உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாது' என, அதிபர் டொனால்டு டிரம்பிடம், ஜேம்ஸ் காமே கூறியுள்ளார்.
இதற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், நேர்மையாக செயல்படுவதில் கிடைக்கும் மகிழ்ச்சி, ஆனந்தம், பெருமை, வேறெதிலும் கிடைக்காது!

ஆர்.கே.ராகவன்

சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர்

rkraghu@hotmail.co.in

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement