Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி: மெட்ரோ ரயில் திட்டத்தை, தி.மு.க., கொண்டு வந்ததாக, ஸ்டாலின் கூறுவது தேவையற்றது. தமிழக அரசு, இத்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறது. அரசியல் செய்ய, தி.மு.க.,விற்கு வேறு எதுவும் இல்லை. அதனால், இத்திட்டத்தை விமர்சிக்கின்றனர்.தமிழக, காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேட்டி:
ப.சிதம்பரத்தை குறி வைத்து, பா.ஜ., அரசு அடுத்தடுத்து, அமலாக்கத் துறை மற்றும், சி.பி.ஐ., மூலம் சோதனைகளை நடத்துகிறது. அரசியலில் தனக்கு வேண்டாதவர்களைக் குறி வைத்து, பா.ஜ., அரசு இது போன்ற மிரட்டல் நடவடிக்கையில் ஈடுபடுவது, கடும் கண்டனத்திற்குரியது.
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் பேட்டி:
தமிழக தலைமைச் செயலகத்தில், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆய்வுக் கூட்டம் நடத்தியது, மாநில சுயாட்சிக்கு விரோதமான செயல். மத்திய அரசைக் கண்டு, தமிழக அரசு எவ்வளவு அஞ்சுகிறது என்பது, இதிலிருந்து தெரிகிறது.


தமிழக, காங்., தலைவர் திருநாவுக்கரசர் அறிக்கை: சட்டசபை கூட்டத்தொடர் நடக்காமல் போனதால், பல்வேறு துறைகள் முன்வைத்த மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும், கருத்துக் கூறவும், சட்டசபை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட உரிமையை, அ.தி.மு.க., அரசு பறித்திருக்கிறது. இதன்மூலம், தமிழக சட்டசபையின் மாண்பும், மரபுகளும், மதிக்கப்படாமல் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளன.முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் அறிக்கை: எனக்கு எதிராகவும், என் மகன் மற்றும் அவரது நண்பர்களுக்கு எதிராகவும், அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், சி.பி.ஐ., அமைப்பை, மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. என் பேச்சை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், மத்திய அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்கள், அரசு சாரா நிறுவனங்களுக்காக, தொடர்ந்து பேசுவேன்; எழுதுவேன். என்னை அடக்க நினைத்தாலும், பா.ஜ.,வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன்.'நாஞ்சில் சம்பத் போலவே கூவுறீங்களே... பேஷ்... பேஷ்...' எனக் கூறத் தோன்றும் வகையில், சசிகலா அணியைச் சேர்ந்த, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேட்டி:
முடிந்து போன முதியோர் இல்லமாக, பன்னீர் அணி உள்ளது. ஆனால், நாங்கள் நடத்தும் கூட்டத்திற்கு, இளைஞர்கள் திரண்டு வருகின்றனர். எங்கள் ஆட்சி; எங்கள் கட்சி; எங்கள் முதல்வர்; உங்களுக்கு பங்கு இல்லை. ஓரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்; அதை மட்டும் செய்யுங்கள்.'துல்லியமா தெரிஞ்சுக்கிட்டு சொல்றீங்களோ...' எனக் கேட்கத் தோன்றும் வகையில், தென் சென்னை மாவட்ட, காங்., தலைவர் கராத்தே தியாகராஜன் பேட்டி:
ஆன்மிக நாட்டம் கொண்ட ரஜினியை, தங்கள் கட்சியில் சேருமாறு, பா.ஜ., பல வழிகளில் அழுத்தம் கொடுக்கிறது. தனி கட்சி துவங்கினால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் கூறி வருகிறது. இதற்கு, ரஜினியை பணிய வைக்க, நாங்கள் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்பதை சொல்லாமல் சொல்லவே, ப.சிதம்பரம் வீட்டில், சி.பி.ஐ., சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து (1)

  • Cheran Perumal - Radhapuram,இந்தியா

    இந்தியர்களின் வேலைவாய்ப்பை பறிக்க நினைக்கும் டிரம்பின் கொட்டத்தை அடக்கவே ப.சி யின் வீட்டில் சோதனை நடந்துள்ளது என பா ஜ சார்பில் யாராவது சொல்லலாம். அப்படித்தான் இருக்கிறது தியாகராஜனின் பிதற்றல்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement